அவர்தான் பெரியார்

1902923_1378785985729460_2022924644_n

அண்மைக்காலமாக தமிழர், திராவிடர் என்ற சொல்லாடல்களும், திராவிடத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும், இறுதியாக பெரியார் குறித்த கூர்மையான விமர்சனங்களும் நம்மைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.

வரலாற்றை தம் விருப்பத்திற்கேற்ப வளைந்து, தம் சொந்தத் தாழ்ப்புணர்வுகளை ஊடகங்களில் பரப்புவதற்கு தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்தும் இந்தப் புதிய பரப்புரையாளர்கள் நாம் வெறுமனே புறந்தள்ளி விட முடியாது. வரும் இளைய தலைமுறைக்கு இவர்கள் மறைக்கும் வரலாற்றின் உண்மைகளை வெளிக்காட்டுவதோடு, இந்த அரசியலின் பரிமாணத்தையும் விளக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

முதலாவதாக திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பழைய குற்றச்சாட்ட தூசி தட்டி மீண்டும் எடுக்கப்பட்டு, தமிழின வீழ்ச்சிக்கு அதிலும் குறிப்பாக அண்மைய ஈழப் பேரழிவுக்கு திராவிடம் என்ற ஒற்றைச் சொல்லே காரணமாய் உருக்காட்டப்படுகிறது.

இரண்டாவதாக திராவிடத்தின் மூல வித்தாகப் பெரியார் காட்டப்பட்டு, அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு அவரது புரட்சிகர பிம்பம் கேள்விக்குரியதாக்கப்படுகிறது.

மூன்றாவதாக இவற்றுக்கெல்லாம் மாற்று தமிழ்த் தேசியமே. என்றும், அந்தத் தமிழ்த் தேசியத்திற்கான வரையறைகள் குறித்து பலரும் பலப்பல கருத்துக்களை உதிர்த்து வருகின்றனர்.

இந்த மூன்று தளங்களிலும் உண்மையை அறிய வரலாற்றின் ஊடாக நாம் சுற்றுப் பயணிக்க வேண்டியிருக்கிறது.

முதலில் திராவிடம் என்ற சொல்லாடலின் உண்மையைத் தேடுவோம். இன்று திராவிடம் என்று இவர்கள் கையாலும் பொருள், திராவிட என்ற பெயரை தமது பெயரில் வைத்துள்ள பதவி அரசியல் கட்சிகளின் ஊழல், அவர்களின் மக்கள் அக்கறையற்ற தன்மை, பதவி வெறி அவர்களின் அரசியல் ஆகியவையும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய தமிழிலிருந்து பிரிந்த பிற திராவிட மொழியினரின் தமிழின விரோத, ஆளுமை அரசியலும் தான்.
ஆனால் திராவிடம் என்ற சொல்லின் உண்மைப் பொருளும், அச்சொல்லின் பின்னால் பொதிந்திருக்கும் அடிமைப்பட்ட மக்கள் விழித்தெழுந்த வரலாறும் இவர்கள் காட்டும் பிம்பங்களிலிருந்து முற்றிலும் மாறுபாடானவை.

தென்னாரு, தென்னாட்டில் வாழ்வோர், அவர்தம் மொழி என்ற பொருளில் இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்தோரால் குறிப்பிடப்பட்ட இந்த திராவிடம் என்ற சொல் 4ம் நூற்றாண்டில் முதன் முதலாகக் காணக் கிடைக்கிறது. சமணர்கள் தொடங்கிய பெயர் என்பவை தென்பட்டாலும், ஆங்கிலேயர் வருகைக்குப்பின், கார்டுவெல் பாதிரியாரால் திராவிடர் என்பதற்கான வரையறை தெளிவாக்கப்படுகிறது. வரலாற்று ஆசிரியர்களின் ஆராய்ச்சிகளும், மொழி அறிஞர்களின் ஆராய்ச்சிகளும் ஒரு அரிய வரலாற்று உண்மையை தெளிவாக்கிறன.

தென்னாட்டில், பாரம்பரிய தமிழ் நிலத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டும், தமிழ் மொழியிலிருந்து பிரிந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், தூர மொழிகளைப் பேசும் மக்கள் திராவிடர். அவர்களுக்குச் சொந்தமான நிலம் திராவிட மண். அவர்களே இம்மண்ணின் பூரவ குடிகள் அவர்களின் மரபு திராவிட இன மரபு.

மத்திய ஆசியாவிலிருந்து கைபர் போலன் கணவாய் வழி இங்கு நுழைந்த நாடோடி வந்தேறிகள் ஆரிய மரபினர். அவர்களது மொழி சமக்கிருதம். அவர்கள் வருமுன்னரே தொன்மையான நாகரிக மடைந்த மரபுக்குச் சொந்தக்காரர்கள் திராவிட இனத்தினர் என்ற பேராண்மைகள் வெளித் தெரிந்தன.

சங்க காலத்திற்குப் பின் சரியாகச் சொல்ல வேண்டுமானால் 4ம் நூற்றாண்டுக்குப்பின் கிட்டத்தட்ட 15 நூற்றாண்டுகளாகப் புறந்தள்ளப்பட்டு ஆரியப் பண்பாட்டால் அடிமையாக்கப்பட்டு, முற்றிலும் முழுகடிக்கப்பட்ட திராவிடப் பண்பாட்டில் வெளிச்சக் கீற்றுகள் வெளியாகத் தொடங்கியது ஆங்கிலேயர் மேற்கண்ட வரலாற்று ஆராய்ச்சியின் விளைவாகத்தான்.

ஆரியப் பண்பாடுதான் உயர்ந்தது. மனு நீதி தான் சீரிய வாழ்வுமுறை. சமக்கிருதமே தேவபாசை என்று நம்பிக் கொண்டு, 15ம் நூற்றாண்டுகளாக தம் சொந்தப் பண்பாட்டைப் பற்றிச் சற்றும் அறியாதிருந்த ஒரு இனம் ஒன்று மட்டுமாகவே இருக்க முடியும்.

ஆரிய மரபைப் பின்பற்றி, மனு நீதியை வாழ்வியல் நெறியாகத் திணித்து, திராவிட மரபினத்தவரை அடிமைகளாக ஒடுக்கி, அவர்கள் வாழ்வியல் உரிமைகளை மறுத்து அடக்கி ஆண்டு கொண்டிருந்த ஆரியர் மற்றும் அவர்களை இந்த மண்ணில் வரவேற்று, அவர்களோடு கலந்து அந்த ஆரியப் பண்பாட்டை வாழ்வியலாகக் கொண்டு, அதன் மூலம் பேட்டிமை செய்து, பலன்களை குறிப்பிடுகிறோம். அவர்கள் தமிழர்களே என்று வாதம் செய்பவர்களுக்காக தனியாகவே அனுபவித்துக் கொண்டிருந்த பிராமணர், பார்ப்பனர் (பார்ப்பனர் ஆரியர் அல்லர்) ஆகியோரையும் அவர்களின் மேலாண்மையையும் எதிர்த்து உருவானதுதான் திராவிட இயக்கம்.

தமிழின வீழ்ச்சிக்கு திராவிடம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. 1967க்கு பிந்தைய திராவிட ஓட்டுக் கட்சிகளின் ஊழல் மயமான ஆட்சிகளால் பெரும் பின்னடைவை தமிழகம் சந்தித்தது உண்மை தான். ஆனால் இந்த ஊழல் வாதிகளை வைத்து திராவிடம் என்ற கருத்துருவை ஒட்டு மொத்தமாக மதிப்பிடுவது முற்றிலும் தவறான ஒன்று.

மார்க்சிய கம்யூனிசக் கட்சியின் தமிழின விரோதப் போக்குக்கு காரல் மார்க்சைக் காரணம் கூறுவது எவ்வளவு அபத்தமானதோ அதே போன்றது தான் ஊழல் நிறைந்த திராவிடக் கட்சிகளின் அக்கறையற்ற ஆட்சியை வைத்து திராவிடம் என்ற கருத்துருவை புறந்தள்ளுவது.

திராவிட என்ற பெயரை மட்டும் தாங்கிய இக்கட்சிகள் பெரியாரின் கொள்கைகளுக்கு நேர் எதிர்த் திசையில் பயணித்தவை என்பதை நம் அனைவருக்கும் நன்கு தெரியும். கடவுள் மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பகுத்தறிவு வழி, மூட நம்பிக்கை ஒழிப்பு, எளிமை, பதவி ஆசையற்று இருத்தல், தன்மை என்பவற்றில் இக்கட்சிகள் பெரியாரை விட்டு எதிர்த்திசையில் நீண்ட தூரம் விலகி விட்டன என்பதே உண்மை நிலவரம்.

பெரியார் தொடங்கிய திராவிடர் கழகம் கூட பெரியாருக்குப் பின் அவர் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எந்த முனைப்பும் காட்டவில்லை. மாறாக தம் பொருளாதார மேம்பாடு, அதற்காக ஆட்சியாளர்களைத் தாக்கிப்பிடித்தல் என பெரியாரியலுக்கு எதிராகவே நடந்தது.

மேலும் இந்த 40 ஆண்டுகள் மட்டுமே இந்தக் கட்சியினர் தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். அதற்கு முன் காங்கிரசு தேசியக்கட்சியும், அதற்கு முன் 14ம் நூற்றாண்டுகளாக பார்ப்பனியமுமே தமிழகத்தை ஆண்டு வந்திருக்கின்றன. தமிழினத்திற்குக் கேடு வெறுமனே இந்த 40 ஆண்டுகளால் மட்டுமே வந்ததில்லை.

இந்தப் புள்ளியில் தான் பெரியாரின் பரிணாமம் தொடங்குகிறது. பெரியாரின் அரசியலைப் புரிந்து கொள்ள அவர் வாழ்ந்த காலத்தோடு சேர்த்தே அதை அவதானிக்க வேண்டும். சங்ககாலத்துக்குப்பின் கிட்டத்தட்ட 1500 வருடங்களாக கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத தமிழர்களுக்கு கி.பி.1850ல் வெள்ளயர் மூலமாக லேசான வெளிச்சம் வந்தது. மெக்காலேயின் கல்வித் திட்டம் மக்களை கல்வியை நோக்கி நகர்த்தியது. அதிலும் அவர்களை மறித்து முன் வரிசையில் நின்றவர்கள் பார்ப்பனரே. நான் காகை;கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை மாகாணத்தில் கால் கோடிக்கும் குறைவானரே பார்ப்பனர். ஆனால் 1905 வரையிலான 20 ஆண்டுக் காலத்தில் கல்வி பெற்ற ஆட்சிப்பணி, பொறியாளர், உதவி கலெக்டர்கள் ஆகியவற்றில் 90 விழுக்காட்டுக்கும் மேல் இடம்பிடித்திருத்திருந்தவர்கள் பார்ப்பனரே 10 விழுக்காட்டுக்கும் குறைவான பார்ப்பனரல்லாதோர் மனதில் எழுந்த நியாயமான தாக்கம் பார்ப்பனரின் மேட்டிமையைக் கேள்வி கேட்டது.

1912ல் டாக்டர் நடேசன் தலைமையில் சென்னை ஐக்கியக் கழகம் என்ற பெயரில் மீண்டும் ஒரு பிராமணரல்லாதோர் இயக்கம் தொடக்கப்பட்டது. பெரும்பான்னையாயுள்ள நாம் ஏன் எதிர்மறைப் பெயரான பிராமணரல்லாதோர் என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து வழக்கவே அப்பெயர் திராவிடர் சங்கம் என மாற்றப்பட்டது.

திராவிடர் என்பது அன்றைய சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லா தோரைக் குறிக்கப் பயன்பட்ட ஒரு பொதுப்பெயர். அதற்கு மூலமாய் அமைந்தது 1892ல் அயோத்திதாசப் பண்டிதர் தமது இயக்கத்திற்கு வைத்த திராவிட ஜனசபா என்ற பெயர். ஒழுக்கப்பட்ட மக்களுக்கு ஆதி திராவிடர் என்ற பெயரை முதன் முதலில் பரிந்துரைத்தவர் அயோத்தி தாசர்தான்.
1961ல் டாக்டர் நடேசனுடன் பி.டி. தியாகராயரும், டி.எம். நாயரும் கைகோர்க்க தென்னிந்திய நல உரிமைச்சங்கம் தொடங்கப்பட்டது ஜஸ்டிஸ் என்ற இதழும் தொடங்கப்பட்டது. இதழின் பெயரில் அரசு இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) என அழைக்கப்பட்டது.

காங்கிரசில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட பெரியாரின் நோக்கமும் ஒழுக்கப்பட்டோ நலனாகவே இருந்தது. அதன் மூலம் அவர்கள் முன்னிறுத்திய அரசியல், 1500 வருடங்களாக கல்வி, பண்பாடு, மரியாதை மறுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தியதாக இருந்தது.

1924ல் வைக்கத்தில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திய பெரியார் பார்ப்பணியத்திற்கு எதிரான தனது சுயமரியாதைப் போரின் முதல் அத்தியாயத்தைத் தொடங்கினார். தன்னுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானத்தை வலியுறுத்திய பெரியார் அது ஏற்கப்படாததால் காங்கிரசிலிருந்து 1925ல் வெளியேறினார். சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

தன் சுயமரியாதை இயக்கத்தின் வழியாய் பெரியார் ஆற்றிய களப்பணிதான் இன்று நாமிருக்கும் இடத்திற்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

அவர் கல்வி அறிவு பெறாத கடவுள் பக்தியில் திளைத்து மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த தாழ்வடைந்து கீழே கிடந்த மக்களைத் தேடிச் சென்றார். அவர்களை ஒடுக்கிக் கொண்டிருந்த கடவுள் நம்பிக்கை, மூடநம்பிக்கை, சாதியம், வவர்ணாச்சிரம முறை, பெண்ணடிமை இவற்றின் ஆணிவேரான பார்ப்பனியம் ஆகியவற்றின் மீது தன் தடி கொண்டு பெருந்தாக்குதல் நடத்தினர்.

மரபு என்றோ, பண்பாடு என்றோ, பழக்க வழக்கங்கள் என்றோ எந்த அடக்குமுறையாக இருந்தாலும் அதை எதிர்த்துக் கலகக்குரல் எழுப்பினார். அந்தக் கேள்விக்கான பதிலில் தான் நம் விடியலுக்கான தேடல் இருந்தது.

அப்படிக் கலகம் செய்த ஒரு புரட்சியாளர் நம் காலத்தில் நமக்கு வாய்த்தது தான் நாம் பெற்ற சிறப்பு. நம் மக்களின் முன்னேற்றத்தை பல தலைமுறைகள் முன்கூட்டியே கொணர்ந்தது தான் அவரது புரட்சியின் பலன்.

1929ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டின் தீர்மானங்களே போதும் அந்த புரட்சித் தீயின் வேகத்தை நம் கண் முன்னர் காட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இந்திய அரசியல் திட்ட அமைப்பில் ஏற்கப்பட வேண்டும்.

பிறப்பின் அடிப்படையிலான நால்வகை வர்ணங்கள் அவற்றைக் கற்பிக்கும் வேதம், புராணம் சாத்திரம் மதம் ஆகியவை புறக்கணிக்கப் படவேண்டும்.

சாதி ரீதியான தடைகள் எங்கும் எவருக்கும் இருக்கக் கூடாது மக்கள் தங்கள் பெயருடன் கூடிய சாதிப்பட்டத்தையும், சாதி மத அடையாளர்களையும் துறக்க வேண்டும். பெண்ணுக்கு திருமணம் செய்ய 16 வயது கடந்திருக்க வேண்டும். விவாகாரத்து உரிமை, விதவை மறுமண உரிமை வழங்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு வேலைகளில் சமஉரிமை, வாரிசு உரிமை வழங்கப்பட வேண்டும். கல்வியில் தாய்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். கோவில்கள் கடவுளுக்கும், வணங்குபவருக்கும் நடுவில் இடைத்தரகர்களோ, வடமொழியோ இருக்கக்கூடாது.

இவை 1929ல் பெரியார் அறிவித்த கொள்கைகள். அந்தக் கொள்கையின் படி சற்றும் பிறழாமல் கடைசிவரை செயலாற்றியவர் தான் பெரியார். தமிழர்களை மானமும் அறிவும் பெற்ற சமூகமாக மாற உரத்த குரல் கொடுத்தவர் பெரியார்.

திராவிடக் கருத்துருவாக்கம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது என்று பொய்யுரைப்பவர்கள், பெரியாரின் உண்மையான திராவிடம் முன்னிறுத்திய மேற்குறிப்பிட்ட தீர்மானங்களில் எவை எதிரானவை என்பதை விளக்க வேண்டும்.

பெரியாரின் கருத்துகள் விவிலிய வசனங்கள் அல்ல. துண்டு துண்டாகப் படித்து பேசப்படுவதற்கு அக்கருத்துகள் அவை கூறப்பட்ட காலப் பிண்ணனி, அதன் பின் உள்ள நுண்ணரசியலோடு சேர்த்துக் கணக்கிடப்பட வேண்டும்.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் அனைத்துமே ஆரிய பார்ப்பனியத்தின் ஆண்டாண்டு கால ஆதிக்கத்தால் கீழே விழுந்து கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்புபவையாகவே இருந்தன.

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி எனத் திட்டினார் என்பர் சிலர். தாயை பெண்டாள்பவனையும், மனைவியை சாமியாருக்கு கூட்டிக் கொடுப்பவனையும் திருத் தொண்டர்களாக்கியப் புராணங்கள் செய்து வைத்திருக்கும் ஒரு மொழியை வேறென்ன சொல்வது?

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னேயே செழுமையடைந்த ஒரு மொழியை மதத்தில் முழுக வைத்து மூடநம்பிக்கைகளைப் பரப்பி அதைத் தமது சொந்த சொத்தாக்கி, சாதாரண மக்களைச் சென்றடைவதைத் தடுத்து பண்டிதர்களின் மொழியாக ஆக்கி வைத்தமையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெரியார்.

அடிமைப்படுத்துவது சாதியாயிருந்தாலென்ன வர்ணமாயிருந்தாலென்ன, மொழியாயிருந்தாலென்ன கடவுளாகவேயிருந்தாலும் அதன் புனிதத் தன்மையை உடைப்பதற்காகவே பேசியவர் பெரியார் மட்டுமே. சமூக முன்னேற்றத்திற்கு தடையாயிருக்கும் அத்தனை அபிமானங்களையும் உடைத்தவர் பெரியார். இது தான் பெரியாரின் நுண்ணரசியல்.

ஆனால் அவரே தான் இந்தி ஆதிக்க எதிர்ப்புப்போரை முன்னெடுத்தார். திருக்குறள் மாநாடு நடத்தினார். எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். நம் மொழிளை அறிவியல் மொழியாக்க, சமூகத்திற்கு விடிவு தரும் வழியாக்கக குரல் கொடுத்தார்.

வெறும் பண்டிதர்களின் மொழியாயிருந்த தமிழை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில் திராவிட இயக்கங்களின் பங்கை நாம் மறந்து விட முடியாது.

வெறும் சொற்களின் மீது கவனமாகி காட்டு மிராண்டி என்பதற்குக் கோபப்படும் நண்பர்கள் காலங்காலமாக தாசிமகன், வேசி மகன், ஆத்திரன் பஞ்சமன், சண்டாளன் என்று பார்ப்பனியம் நம்மைக் கேவலப்படுத்தியதற்கு ஏன் ரோசப்படுவதில்லை. என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.

தமிழ்த் தேசியம் எழுச்சி பெற முடியாமற் போனதற்கு திராவிடக் கருத்தியலே காரணம் என்று சிலர் கூறுகின்றனர். இன வழித் தேசியம் அடிமைப்பட்டுக் கிடக்கும் போது அதை எதிர்த்துப் போராடியவர் பெரியார்.

மொழிவழித் தேசியத்தை முன்னிறுத்திய தமிழ்த் தேசியத் தலைவர்கள் அதை இறுதியல் பார்ப்பனியத்திடமும், வாக்கு அரசியல் ஊழல் வாதிகளிலும் அடகு வைத்ததானால் தான் அது வெற்றி பெற முடியாமற் போனது என்பது தான் வரலாற்று உண்மை.

ம.பொ.சி, ஆதித்தனர் சம்பத் போன்று தமிழ்த் தேசியத்தின் ஆரம்ப கால முன்னெடுப்புகள் எங்கே போய் முடிந்தன என்பது நாமனைவரும் அறிந்ததே. தற்போதைய தமிழ்த் தேசிய முன்னெடுப்பகலும் ஈழத் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தியதாக உள்ளதே தவிர தமிழ்நாட்டின் தேசியத்திற்கான அவர்கள் பங்களிப்பு குறைவாக உள்ளது தான் வேதனையாக உண்மை.

இந்திய வரைபடத்தை எரித்த போது கூட தமிழ்நாடு நீர்கலாக எரித்தவர் தான் பெரியார். தமிழ்நாடு தமிழருக்கே என்ற முதல் விடுதலைக் குரலை எழுப்பியவர் பெரியார் தான்.

தமிழ்த் தேசியத்தில் அவ்வளவு பற்றுதலும் கவனத்தோடும் இருந்த பெரியாரை தமிழருக்கு எதிரியாகச் சித்திரிப்பதில் உள்ள நுண்ணரசியிலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சோவும், சுப்பிரமணிய சாமியும் தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களில் ஊரத் திளைப்பதற்கும், இந்தி ராமின் தமிழின எதிர்ப்பு செயல்பாடுகளுக்கும் அடிப்படையான ஆரிய மன நிலையை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு பெருந்தடையாயிருந்த காங்கிரசு பேராயம் அதன் உட்கூறான டில்லி பார்ப்பன, பனியா இந்தியம் ஆகியவற்றை மறந்த விடக் கூடாது.

மொழிவழித் தேசியம் புறந்தள்ளப்படக்கூடிய ஒன்றல்ல. ஆனால் மொழித் தேசியம் பேசுவது மட்டுமே நமக்கு விடுதலையைக் கொண்டுவராது.

மார்க்சீயத்தின் வர்க்க விடுதலையும், டில்லிக்காரர்களின் வடக்கு மட்டும் இந்தி தேசிய மேட்டிமையை அகற்றுதலும், தலித் மக்களுக்கான சாதி இழிவை அகற்றி சமத்துவம் பெறுதலும் மத ரீதியான இந்துத்துவ ஆதிக்கத்தை அகற்றுதல் சமூக ஒடுக்குமுறையின் கருவியாக உள்ள பார்ப்பனியத்தை வெற்றிகொள்வது ஆகிய இவையனைத்தும் ஒன்றுபடுவதில்தான் நம்மக்களின் முழுமையான விடுதலை உள்ளது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.

எல்லாத் தளங்களிலும் ஒரே அமைப்பு செயல்பட முடியாது என்பதுதான் யதார்த்த நிலை. அவரவர் அமைப்புகள் அவரவர் தளங்களில் வலுவாகச் செயல்பட்டு, இறுதியில் ஒரு புள்ளியில் அனைத்தும் ஒன்றிணையும் போது முழுமையான விடுதலை முகிழ்க்கும்.

ஆனால் இங்கோ நிலைமை அந்த ஒன்றிணைக்கும் புள்ளியை நோக்கிப் பயணிப்பதாக இல்லை. ஒவ்வொருவரும் மற்றவரின் தளங்களைப் புறந்தள்ளியும், மற்றவரின் கொள்கைகளை மறுத்தும், எதிர்த்தும் அரசியல் நடத்தவே விழைகின்றனர். முரண்பாடுகள் உச்சம் பெற்று, விடுதலை நோக்கிய பயணத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைத் தகர்க்க முயல்கின்றனர். அதில் முதன்மையானதொன்றுதான் திராவிடப் பகை.

தமிழர் என்பது மொழிவழித் தேசியம் என்பது எவ்வளவு உறுதியானதோ, அதே போன்றுதான் திராவிடர் என்பது இன நில வழித் தேசியம். ஆரியர், திராவிடர் என்பவை வௌ;வேறு மரபு வழி, நில வழித் தேசிய இனங்கள். திராவிடம் என்ற கருத்துருவாக்கம் தமிழருக்கு எதிரானது அல்ல. அது ஆரியருக்கு மட்டுமே எதிரானது.

திராவிட என்னும் சொல்லை தமது பெயரில் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளின் ஊழல், மக்கள் அக்கறையற்ற தன்மை, தழிழ்த் துரோகம் ஆகியவற்றைக் கணக்கிட்டு திராவிடம் என்ற கருத்தியலை எதிர்ப்பது அறிவுடையோர் செயல் அல்ல. சில தமிழ்த் தேசியர்கள் இன்று கூறுவது போல் தெலுங்கு, கன்னட, மலையாளிகளின் நலன் கோருவதல்ல திராவிடம். (அதை தெலுங்கு உள்ளிட்ட பிற மொழியார்களே ஒப்புக்கொள்வதில்லை) ஆரிய மேட்டிமைக்கு எதிராக, தமிழர்களின் இனநலம் கோரி உருவானதான் திராவிடக் கருத்தியல். அதை மறுப்பது ஆரிய பார்ப்பனியத்துக்கே நலம் பயப்பதாக முடியும்.

1967-ம் ஆண்டுக்குப் பின்னர் வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சி எப்படி தமிழர் நலனுக்கான ஒன்றாக அமையவில்லையோ, அதே போன்று அதற்கு முந்தைய காங்கிரசு தேசியக் கட்சியின் ஆட்சியும் நலம் பயப்பதாக இல்லை. அதற்கு முன்னர், 19-ம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 14 நூற்றாண்டுகளாக ஆரியப் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தில் நம் சொந்தப் பண்பாடு, மொழி உரிமைகளை இழந்து கிடந்தது நம் இனம். 1927-ல் தொல்காப்பியம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் 2000 ஆண்டுப் பழமையான இலக்கிய வளம் கொண்டது நம் தமிழ்மொழி என்பது நமக்கே தெரிந்தது. இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்கு நம்மை உள்ளாக்கிய ஆரியப் பார்ப்பனியத்துக்கு எதிரான போர்தான் திராவிடக் கருத்தியல். அக்கருத்தியலை பெருவீச்சீல் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் பெரியார்.

சிந்திக்காத அடிமைப்பட்டுகிடந்த நம்மக்களை மானமுடன், அறிவுடன் வாழ சிந்திக்கவும், மூடத்தனத்தைப் புறந்தள்ளி பகுத்தறிவுடன் வாழ பழகிக் கொடுத்தவர் பெரியார்.

பெரியாரின் கருத்துக்கள் அவை வெளியிடப்பட்ட சூழலோடு இணைந்துதான் பார்க்கப்பட வேண்டுமேயொழிய விவிலியத்தின் வசனங்களைக் கருதப்படக்கூடாது. 14 நூற்றாண்டுகளாக நாம் அறியாதிருந்த அடிமைத்தனத்தை நமக்கு அடையாளம் காட்டி, நம்மை மனிதனாகத் திருத்த, ஆரியத்தின் மீது போர் தொகுத்தவர் பெரியார்.

அந்தப் போரில் அவர் பெற்ற வெற்றியின் விளைவுதான் இன்றைய நம் சமூகப் பங்களிப்பு. சூத்திரரும் பஞ்சமருமாக அடையாளப்படுத்தப்பட்ட நம் தமிழ்ச் சமூகத்தை புரு மானுட சமூகமாக மாற்ற அவர் தொடுத்த போர்தான் திராவிடக் கருத்தியல்.

தமிழ்த் தேசியம் என்ற மொழி வழித் தேசியம் தமிழர்கள் அனைவரின் ஒற்றுமைக்கான ஒரு கருவி. அந்தத் தமிழ்த் தேசியத்தின் உள்ளடக்கம் ஆரிய பார்ப்பனிய ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் திராவிடமே. உள்ளுறைப் பொருளைப் புறந்தள்ளிவிட்டு நாம் முழுமையான விடுதலையை வென்றெடுக்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். திராவிடக் கட்சிகள் உண்மையில் பெரியாரின் திராவிடக் கருத்தியலுக்கு நேரெதிர் திசையில் வெதுதூரம் விலகிவிட்டவை. அவைகளை நேரடியாகவே அம்பலப்படுத்துவோம்.

அண்டை மாநிலங்களுடன் ஏற்படும் விரோதததைத் தூண்டிவிட்டு நம் பகைப்புலமாக அவற்றை மாற்றிக் கொண்டிருக்கும் இந்தியமே நமது உண்மையான பகைப்புலம். இந்தியம் வடிவமைத்த தாக்குதலே ஈழப் பேரவலம். இந்தியம் அழித்ததுதான் கச்சத்தீவின் மீதான் நம் உரிமைகள். நம் மீனவரின் நலன்கள். தமிழரின் மீதான அவர்களின் தாக்குதலே கூடங்குளம் அணு உலைகள்.

அந்த இந்தியத்தத்துவத்தை வடிவமைக்கும் ஆரிய, பார்ப்பன, பனியா பகைப் புலங்களை தெளிவாக மக்களுக்கு அடையாளம் காட்டுவோம். நம் வாளின் கூரிய முனை எப்போதும் பகைவநன நோக்கியே இருக்கட்டும். அதைவிடுத்து திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று வெற்றி முழக்கமிட்டு திராவிட என்று பெயர் வைத்துள்ள ஓட்டுப்பொறுக்கி, ஊழல் அரசியல் கட்சிகளின் அயோக்கியத்தனத்தை திராவிடக் கருத்தியலாக மாற்றிச் சொல்வது ஆரியப் பார்ப்பனியத்திற்குத் துணை போகும் செயலாகவே முடியும். மார்க்சிஸ்டு கட்சியின் தமிழினத் துரோகத்தினால் நாம் மார்க்சை வெறுக்கமுடியாது.
தமிழ்த் தேசயிம் நம் அடையாளம். அதன் கூறுகள் ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பான பகுத்தறிவுத் திராவிடம், முதலாளியத்துக்கு எதிரான வர்க்க சமத்துவம் கூறும் மார்க்சியம், சாதி ஒழிப்பை முன்னிருத்தும் தலித்தியம் ஆகியவைதான்.

மரியாதைக்குரிய தமிழ்த் தேசியர்களே, பெரியாரைப் பகையாகக் கொண்டு மார்க்சை மறுத்து, அம்பேத்காரை கண்டு கொள்ளாமல் கிடைக்கும் ஒரு விடுதலை தமிழனத்தின் முழுமையான விடுதலையாக இருக்க இயலாது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். விடுதலை என்று பேசிக் கொண்டே அதன் கூறுகளை மறுக்கும் தடைக்கற்களாக இருக்காதீர்கள். வரும் தலைமுறை அந்த முழு விடுதலை நோக்கிப் பயணிக்கட்டும்.

Advertisements