Imageஅணுஉலை விவகாரம் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது இந்த அறிவாளிகளின் கொசுத்தொல்லை தாங்கலைடா சாமி.

                ஏதோ நிரோத் ஆணுறை விளம்பரம் மாதிரி அணுஉலை நூறு சதவீதம் பாதுகாப்பானது.  ஒன்றும் ஆகாது.  எதுவுமே நடக்காதுன்னு கற்பூரம் ஏத்தி ஆத்தா சத்தியமான்னு அடிச்சுச் சொல்லும் அறிவாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிப் போச்சு.  ஆளுக்காளு அட்வைஸ் போட ஆரம்பிச்சுட்டாங்கப்பா.

                இதுல இடையில நம்ம அப்துல்கலாம் ஐயர் வேற.  நானும் இரண்டாவது தடவையா நேர போயிப் பாத்தேன். அரை மணி நேரம் சுத்திப் பாத்தேன்.  பாதுகாப்பு ரொம்ப நல்லா இருக்கு.  6 ரிக்டர் வரையிலும் உள்ள நிலநடுக்கத்தால பாதிப்பில்லை.  13 மீட்டர் உயரத்தில் அணுஉலை இருக்கிறதால சுனாமியால கூட பாதிப்பு இல்லைனு சகட்டுமேனிக்கு சர்டிபிகேட் கொடுக்க, உண்மையிலே அப்படித்தானோனு நமக்கே சந்தேகமாகிப் போச்சு.

                அய்யா விஞ்ஞானிகளே..

                வர்ர பூகம்பம் 6 ரிக்டருக்குக் கீழே தான் வரும்னு யாராவது மை போட்டுப் பாத்தாங்களா?  இல்லை சுனாமி தான், இங்க அணுஉலை இருக்கு.  நம்ம 13 மீட்டர் உயரத்துக்கு கீழதான் வரணும்னு கட்டுப்படாவா வரும்.  வர்ர கழுதைகளுக்கு இந்த டெக்னிகல் விபரம் எல்லாம் புரியவா போகுது.  அப்படி மீறி விபரம் கெட்ட தனமா வந்துருச்சுன்னா என்னங்கய்யா பண்றது?

                ஒரு நாள் ரெண்டு நாள் வந்து பாத்திட்டு எல்லாம் நல்லாயிருக்குன்னுட்டு நீங்க போயிருவீங்க.  இங்க காலமெல்லாம் கதிரியக்கத்தோட கட்டி மாரடிக்கப் போறது நாங்கதான. 

அணு உலை நல்லதுன்னு சொல்றதுக்கு ஓடோடி வந்த முன்னாள் சனாதிபதி அவர்களே, நீங்க இதுவரையும் வேற எதுக்காவது முனங்கியாவது இருக்கீங்களா? மக்களுக்குப் பிரச்சினையா இல்லை? ஒன்றரை லட்சம் மக்களை ராச பட்சே கொன்று குவித்துக் கொண்டிருந்த போது இந்தியாவைப் போல் நீங்களும் வாயை இறுக்கி மூடிக் கொண்டுதானே இருந்தீர்கள். ஏன், உங்கள் ஊர் மீனவ சொந்தங்கள் சுடப்பட்டு, அடித்து விரட்டப்பட்டு அழும் பொழுது நீங்க சந்திரனுக்கு எங்கயும் போகலையே? இங்கதான இருந்தீங்க? முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு, எதைப் பத்தியும் நீங்க  மூச்சுக் கூட விட்டதில்லையே? இப்ப மட்டும் என்ன வேர்த்து வடியுது? 200 கோடிக்கு உடனே கூடங்குளம் மக்களுக்கு நிறைவேற்றித் தரணும்னு சொல்றீங்க? லஞ்சத்தை சட்டபூர்வமா கொடுக்க ஏற்பாடு பன்றீங்களா? அரசியல்வாதிகளே தோத்தாங்க போங்க. அய்யா, இந்தியா 2020குள்ள வல்லரசு ஆகணுமேன்கிற உங்க அவசரம் எங்களுக்குப் புரியுது. ஆனா அணு ஆயுதங்கள் உள்ள வல்லரசை விட மக்கள் நலம் பேணும் நல்லரசுதான் முக்கியம்னு உங்களுக்குப் புரியாதா என்ன? நல்ல மனுசன்னு பேர் வாங்கின உங்களுக்கே இந்த புத்தின்னா மத்தவங்களைப் பத்திக் கேக்கவே வேணாம்.

                நாங்கதான் சொல்றோம்ல.  பூகம்பம் வராது, சுனாமி வராது.  வராதுன்னா, வராதுதான் அப்டீன்றாங்க.  வரவர கடவுள் மேல இருக்கிற பயம் தான் கொறஞ்சு போச்சுனா பஞ்ச பூதங்கள் மேல இருக்கிற பயமும் கொறஞ்சு போச்சு.  இதெல்லாம் நாட்டு ஷேமத்துக்கு நல்லதில்லை.  உங்க பிஜேபி காரங்ககிட்ட சொல்லி வைங்க.

                ஏன் தான் பேர் வைச்சாங்களோ ‘இடிந்த கரை’ன்னு.  உண்மையிலேயே இடிச்சுத் தரை மட்டம் ஆக்கியே புடுவீங்க போல இருக்கு.  பொண்டாட்டி பிள்ளைங்க குஞ்சு குளுவானோட எங்க எதிர்கால பாதுகாப்புக்கு வழி சொல்லுங்க.  விபத்து வராதுன்னு சொல்லாதீங்க.  விபத்து வந்தா எப்படி எங்களைப் பாதுகாப்பீங்கனு மாசக்கணக்கா பட்டினியாகி கிடந்து கேட்டா அவங்க கேள்விக்கு பதிலைச் சொல்றதை விட்டுப்புட்டு, அவங்களுக்கு வெளிநாட்டுப் பணம் வருது, கிறித்துவர்களின் போராட்டம் இதுன்னு எதுக்குய்யா மக்களை அசிங்கப்படுத்துறீங்க.  உங்களை மாதிரி வருமா?  நாம வேணா வெளிநாட்டில கொண்டுபோய் பணத்தைப் பதுக்கி வைக்கலாம்.  வெளிநாட்டிலிருந்து பணம் இங்க வரலாமா? பட்டினியாக்கிடந்து கத்துறதுக்கு காசு எதுக்குய்யா? இது என்ன காங்கிரசுக்காரன் நடத்துற தண்டியாத்திரையா? இல்லை அத்வானியோட ரத யாத்திரையா!  கோடி கோடியா செலவாக! மக்கள் கேக்கிற கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்க.  இல்லை தெரியாதுன்னு சொல்லிட்டுப் போங்க.  அணு உலை வெடிச்சா உங்களுக்கெல்லாம் சங்குதான்னு ஓப்பனா ஓத்துக்குங்க.

                அதெல்லாம் சரி, 13,000 கோடி செலவு பண்ணி அணு உலை கட்டினீங்களே, விபத்து நடந்தால் மக்களைப் பாதுகாக்கிறதுக்கு ஒரு பதுங்குகுழியாவது வெட்டினீர்களா.  30 கி.மீ. மூக்கையும் வாயையும் பொத்திக்கிட்டு ஓடணும்கிறீங்களே.  மூக்கையும் வாயையும் பொத்திக்கிட்டு எப்படி மூச்சுவிடுறது.  விபத்து நடந்தா 1500 கோடிக்கு மேல இழப்பீடு கொடுக்க வேண்டாம்னு,  கம்பெனிகளுக்குப் பாதுகாப்பா விபத்து நட்ட ஈடு மசோதா ஒண்ணு உருவாக்கி வச்சிருக்கீங்க.  அதனால விபத்து நடந்தாலும், அவங்களுக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை உங்களுக்கும் ஒண்ணும் பிரச்சனையில்லை.  அடுத்த விமானத்தில வெளிநாடு பறந்திருவீங்க.  சாகுறது மக்கள் தான.  ஏற்கனவே போபால் விசவாயு விபத்தில் நீங்க செயல்பட்டதும், சுனாமிப் பேரழிவின்போது உங்க வேகமும் எப்படினு நாடே அறியும்.  இதுல புதுசா பலப்பல வாக்குறுதிகள் வேற.

                உங்க ஊரே பயங்கரமா வளர்ந்திடும், டவுணாயிடும்.  நீங்களெல்லாம் பெரிய பணக்காரணாயிருவீங்க.  உங்களில் குடும்பத்தில் ஒருத்தருக்கு வேலைனு நீங்க வீட்ட பீலாவை நம்பி ஏமாந்த சனத்துக்கு இப்பத்தான் உண்மையே புரிஞ்சுருக்கு.  உடனே உண்ணாவிரதத்தில உக்காந்திட்டாங்க.  இதுதான உண்மை.  ஆனா கிறித்தவ பாதிரிகள் தூண்டிவிடுறாங்கனு நீங்க சொன்னதைக் கேட்டா வேற எதாலயாவது சிரிக்கலாம்னு தோணுது.  அனுஉலை வராமப் போனா கிறித்தவ மதத்துக்கு என்னய்யா லாபம்?

                மக்கள் போராட்டம் அன்னிய நாடுகளின் சதியா?  உங்க பாஷையே தனி தான் போங்க.  காஷ்மீரின் மண்ணின் மைந்தர்களின் போராட்டம் இசுலாமியத் தீவிரவாதம், நிர்வாணத்தையே ஆயதமாக்கிப் போராடிய மணிப்பூர் மக்களின் போராட்டம் பயங்கரவாதம், இரோம் சர்மிளாவின் நீண்ட பட்டினிப் போர் தற்கொலை முயற்சி கனிம, மலை வளங்களைக் கொள்ளையடிக்கும் பன்னாட்டு, தனியாருக்கு எதிரான மலைவாழ் மக்கள் போராட்டம் மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதம், தெலுங்கானா மாநிலம் கேட்கும் மக்களின் போராட்டம் பிரிவினை வாதம், ஈழ மக்கள் உயிர் காக்கக் கோரி  தமிழகத்தில் நடந்த மக்கள் போராட்டம் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத ஆதரவு. 

                உங்க அகராதியில சத்தியமூர்த்தி பவனில் வேட்டியைக் கிழிச்சுக்கிற நாற்காலிச் சண்டை மட்டும் தான் போராட்டமா.

                அதெல்லாம் இருக்கட்டும்.  நீங்க டெக்னிக்கலா பேசுறதால நாமளும் டெக்னிக்கலாவே சில சந்தேகங்களைக் கேக்கலாம்.  இந்த யுரேனியத்தில வர்ர கழிவான புளுட்டோனியத்த என்ன பண்ணப் போறீங்கன்னு கொஞ்சம் சொல்றீங்களா?  ஆனானப்பட்ட பணக்கார நாடுகளே இதை என்ன செய்யிறதுன்னு தெரியாம திருட்டுத்தனமா கடலுக்குள்ளும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அனுப்பிக்கிட்டு இருக்கையில நீங்க மட்டும் இங்கயே புதைப்போம்கிறீங்களே.  ஒரு வருசத்துக்கு எத்தனை டன்,  30 வருசம் அணு உலை இயங்கினா மொத்த அணுக்கழிவை இங்கயே புதைச்சு எங்க நிலத்தை, நிலத்தடி நீரை, காத்தை விசமாக்குற ஒரு வேலையை ரெம்ப சாதாரணமா ஒண்ணுமே ஆகாதுன்னு சொல்றீங்க.  அணுக்கழிவை தாங்கிற மண் என்ன ஆகும்னு தெரிஞ்சுக்க அணு விஞ்ஞானம் படிக்கணும்னு அவசியமில்லை.  ஒரு சாதாரண பாமரனுக்குக் கூட சொல்லாமலேயே தெரியும்.  ரசியா 1987 செர்நோபில் விபத்துக்கு பிறகு புது அணு உலை கட்டவேயில்லை. புகுசிமா விபத்துக்குப் பிறகு ஆனானப்பட்ட சப்பான், அமெரிக்கா, ஜெர்மன், இத்தாலியெல்லாம் அணு உலையே வேண்டாம்னு அடிச்சுப்பிடிச்சுக்கிட்டு மூடும் போது நீங்க மட்டும் அணு உலைதான் எதிர்கால வளம்ங்றீங்களே.  கொய்யால.. வாங்கின காசுக்கு மேல கூவுறீங்களேப்பா.

                அணு உலையோட வெப்பம் 2000 டிகிரி  வரையும் போகும்.  அதைக் குளிர்விக்க கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்திட்டு திருப்பி அந்த கொதி தண்ணீரை கடலுக்குள்ளேயே விடப்போறிங்க.  நீங்களே சொல்றீங்க 10வது கிலோ மீட்டரில் சுமார் 7 டிகிரி சூடு அதிகமாயிருக்கும்னு.  அப்ப அது ஆறி சாதாரண வெப்ப நிலைக்கு வர்றதுக்கு 15 கிலோமீட்டர் ஆகும்.  இந்த 15 கிலோ மீட்டர் கடலில் வெண்ணீர்ல வாழ்றதுக்கு மீனுக்கு ஏதும் டெக்னாலஜி கத்துக்கொடுக்கப் போறீங்களா?   கதிரியக்கம் உள்ள கனநீர் அது அப்படீங்கிறதெல்லாம் இருக்கட்டும் வெறும் சூடு தாங்காமலேயே இந்த கடல் உயிரினமெல்லாம் செத்துப்போச்சுனா அதை நம்பி உயிர் வாழந்துக்கிட்டிருக்கிற இந்த அப்பாவி மீனவன் கதி எல்லாம் என்ன? இதில கலாமோட “அறிவியல் ஆலோசகர்” (வெறும் பி.ஏவுக்கு எப்பிடி எல்லாம் பேரு பாருங்க) பொன்ராஜ் சுடு தண்ணீர்லதான் மீன் நல்லா வளரும்னு சொன்னதைக் கேட்கும்போது, ஒரு பழமொழி நெனைப்பு வருதுங்க. கேக்குறவன் கேனையனா இருந்தா.   

                அவங்களுக்கெல்லாம் மாற்றுத்தொழில் கற்றுத்தரலாம்.  கூடை முடைவது, கைத்தறி நெசவு மாதிரிங்கிறீங்களா?  என்னமோ ஏற்கனவே கூடை முடைஞ்சவனெல்லாம் கோடீஸ்வரனா இருக்கிறது மாதிரி. பழைய கைத்தறி நெசவாளியே கஞ்சித் தொட்டி தேடி அலையுற காலத்தில.

                இந்த விவிஇஆர் 1000 என்ற அணு உலை டெக்னாலஜி ரெம்ப பாதுகாப்பானது.  விபத்தே  வராதுன்னு நீங்க அடிச்சு சொல்றீங்க.  ஆனா இதை கண்டுபிடிச்ச ரசியாவிலேயே இத டெக்னாலஜியின் உண்மை சிரிப்பா சிரிக்குதே.  31 காரணங்களைச் சொல்லி ரசிய அணு விஞ்ஞானிகளே இந்த விவிஇஆர் 1000 அணுஉலை பாதுகாப்பற்றதுன்னு சொல்லியிருக்கிற அறிக்கையை தயவு செய்து இன்டர்நெட்டில் பாருங்க.  நீங்க என்ன சொன்னாலும் நம்பிக்கிட்டு போற முட்டாள் மந்தைகளா மக்களை நினைக்காதீங்க. நான் சொன்னதை நம்ப முடியலைனா இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கோபால கிருஷ;ணனைக் கேட்டுப் பாருங்க. 

                13,000 கோடி செலவு பண்ணியாச்சு இறுதிக்கட்டத்தில இப்ப நிப்பாட்டினா எவ்வளவு பணம் வேஸ்ட்னு ரெம்ப மாய்மாலம் காட்டாதீங்க.  வெறும் பதிமூணாயிரம் கோடியை பெரிசா சொல்ற நீங்கதான் 1,78,000 கோடி வருமானத்தை அரசுக்கு வரவிடாம ஸ்பெக்ட்ரம் ஊழல் பண்ணினது.  75லட்சம் கோடியை கறுப்புப் பணமா சுவிஸ் வங்கியில போட்டு வச்சிருக்கிறது.  அந்தப் பணத்தோட ஒப்பிட்டுப் பார்த்தா இதெல்லாம் கொசு.  12 லட்சம் மக்கள் உயிருக்கு முன்னாடி 13,000 கோடி பெரிசா?

                இதை நிப்பாட்டச் சொல்லி மக்கள் போராடுறாங்க.  நிறுத்தமாட்டேன்கிறீங்க.  ஆனா சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தாதிங்கனு மக்கள் கேட்டப்போ  யாரைக்கேட்டு நிறுத்தினீங்க?  அதில போட்ட அத்தனை ஆயிரம் கோடி என்னாச்சு?  நீங்க எதையும் வீணாக்கினதே இல்லையா யார்ட்ட விடுறீங்க கதை.

                ஒண்ணு நல்லாப் புரிஞ்சுபோச்சு சாமிகளா,  சுதந்திர இந்தியாவில் இந்த நடுத்தரவர்க்கம் எவ்வளவு மோசமா வளர்க்கப்பட்டிருக்குன்னு இந்த விசயத்தில நல்லாத் தெரிஞ்சுபோச்சு.  எவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.  எங்களுக்குக் கரண்டு வேணும்னு தெளிவா இருக்கீங்க.  12 லட்சம் மக்களைப் பலி கொடுத்தாவது ஒங்க வீட்டில லைட்டு மின்னாம எரியனும்னு நினைக்கிறீங்க.  அதைப் புரிஞ்சுக்கிட்டுதான் இந்த மன்மோகன் மின்சாரப் பற்றாக்குறையால் தமிழக தொழில்வள முன்னேற்றம் பாதிக்கப்படும்னு முதலைக்கண்ணீர் வடிக்கிறாரு. தமிழகத்தில ஏதுய்யா சொந்தத் தொழில். எல்லாமே மார்வாடியும் பன்னாட்டு நிறுவனங்களும்தானே.

                முதல்ல இப்போதுள்ள மின்சாரப் பற்றாக்குறையே செயற்கையான ஒண்ணுங்கிறதை தெளிவாப் புரிஞ்சுக்குங்க.  நெய்வேலிலேருந்து மட்டும் ஒரு நாளைக்கு 2600 மெகாவாட் கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும், கேரளாவுக்கும் போகுது.  தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறை 2200 மெகாவாட்தான்.  இருக்கிறதை எடுத்துத் தானம் பண்ணிட்டு உள்ளூரில நம்மை ஓட்டாண்டி ஆக்குது மத்திய அரசு.  அதைப் புரிஞ்சுக்குங்க.

                மேலும் இந்தக் கூடங்குளம் அணுமின் திட்டத்தில் 925 மெகாவாட்தான் தமிழ்நாட்டுக்கு அதுவும் ஒவ்வொரு யூனிட்டையும் ரூ.3.50 காசுக்கு விலை கொடுத்து வாங்கினாத்தான்.  மீதி 1075  மெகாவாட்டில் 1 ½ லட்சம் தமிழர்களைக் கொலை செய்த சிங்கள இலங்கை அரசுக்கு 500 மெகாவாட் கொடுக்கப் போறாங்க.  மீதியை கேரளாவும், கர்நாடகாவும் வாங்கிக்கப் போகுது.  இந்த அணு உலை முதலில் கர்நாடகாவிலும், கேரளாவிலும்தான் கட்டுறதா இருந்தது.  அவர்களோட சொந்த மக்களின் பாதுகாப்புக் கருதி  அதை தமிழ்நாட்டுக்குத் தள்ளி விட்டுட்டாங்க.  சாகுறதுனா தமிழன் சாகட்டும்.  மின்சாரம் மட்டும் எல்லாருக்கும். என்ன நியாயம் இது?

                இது புரியாம இந்தியா, ஒருமைப்பாடு, அணு விஞ்ஞான முன்னேற்றம்னு லூசுத்தனமா ஏதோ பிதற்றிக்கிட்டு இருக்கிற பேர்வழிகளைப் பார்த்தா பாவமாயிருக்கு.  கோபமா வருது.

                கூடங்குளம் மக்கள் போராடுவது அவர்கள் வயிற்றுப்பாட்டுக்கா?  நம் சந்ததி, எதிர்காலத்துக்காகவும் தான் அதைப் புரிஞ்சுக்குங்க முதல்ல. அங்க ஒரு உலை, ரெண்டு உலைனு மட்டுமில்லாம மொத்தம் 5 கட்டப் போறாங்களாம்.  ஒண்ணு வெடிச்சா அணுகுண்டு.  5 வெடிச்சா சரவெடியா?  இது என்ன தீபாவளிப் பட்டாசா?

                அடக்கழுதை, அணு உலை வேணாம்னு மூடினாக்கூட 20,000 கோடி செலவு செய்யனும்னா இது என்ன சிக்கனமான மின்சாரம்?  1000 ரூபாய் செலவுக்கு 2000 ரூபாய் மானியம் கொடுத்துட்டு என்னய்யா கணக்கு இது?  உங்க பெட்ரோல் கணக்கு மாதிரியா?  300 சதவீதம் வரிப்போட்டாலும் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்திலேயே இயங்குவதால் வேறு வழியின்றி விலையை உயர்த்துகிறோம் அப்பிடிங்கிறீங்களே!  அது மாதிரியா!

                பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு முதலாளிகளுக்கும் மின்சாரம் எடுப்பதற்காக மக்கள் லட்சக் கணக்கில் கதிரியக்கத்தால் பாதிப்படைய வேண்டுமா?  12 லட்சம் மக்களைப் பலி கொடுத்து வெறும் 2000 மெகாவாட் மின்சாரம் அவசியமா?

                இதில் ஏகப்பட்ட ஸ்லோகன்கள் வேறு.  அணு மின்சாரம் தூய்மையானது.  அப்படின்னா தயவு செய்து டெல்லியில உங்க பாராளுமன்றம் பக்கத்தில கூட கொண்டுபோய் கூட வச்சுக்கங்க.  எங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணையில்லை. 

அணு மின்சாரம் புனிதமானது.  அப்படீன்னா காசியில கொண்டு போய் வச்சுக்கங்க.  ஏன்… அயோத்தியில ராமருக்குப் பக்கத்தில கூட கொண்டு போய் வச்சுக்கங்க.  எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. 

எங்களுக்கு இந்த அணு மின்சாரம் வேண்டாம். 

அது எப்படிய்யா.  காங்கிரசு, பிஜேபி, சுப்பிரமணியம் சுவாமி, தினமலர், எஸ். குருமூர்த்தி, அவாள், இவாள், எல்லாவாளும் ஒரே மாதிரியே யோசிக்கிறீங்க.. மக்கள் விரோதமாவே.

Advertisements