தேய்த்துத் தேய்த்துத் தேய்ந்தே போனது

தலைமுறைகள்;

 

அழுத்தித் தேய்டா சுருக்கம் போகணும்

ஆணையிட்டார் ஆண்டை;

எதைக்கொண்டு தேய்க்க

உங்க மனசை;

 

 

அரிசி இல்லையே வீட்டில்

ஆனாலும்

அடுப்புப் பற்றவை

வெள்ளாவி;

 

கஞ்சி  பத்தலையே

குறைப் பட்டுக் கொண்டது நானல்ல

சட்டை வாங்கிய பெரிய மனுசன்;

 

கழுதை போனது

மோட்டார் வண்டி வந்தது

முன்னேற்றம்

அதே அழுக்கு மூட்டை;

 

இசுதிரிக் கடை

உருப்படிக்கு காசு

தொவைக்கிறது மட்டும் நானேதான்;

 

நாகரிக உலகத்தில் எல்லாமே மாறியாச்சு

அய்யா செத்துப்போனார்

கூப்புடுடா அம்மாசியை

அம்மாசி செத்துப்போனான்

கூப்புடுடா அய்யாவை;

என்னடா மாறிச்சு

 

ஆண்டாண்டாய் வெளுத்தாலும்

அழுக்குப் போகலையே

சமூகம்;

 

அடித்துத் தொவைத்தால்தானே

அழுக்குப் போகும்

எல்லா அழுக்கும் அப்படித்தான்.

Advertisements