பெரியார் என்ன செய்தார் பெரிதாய்?

இன்றைய காலகட்டத்தில் சில அறிவாளிகள் கேட்கும் கேள்வி இது. அவர்களுக்கெல்லாம் நாம் சொல்லும் ஒரே பதில், சரியான பதில் “நீங்கள் இப்படி கேள்வி கேட்க முடிவதே பெரியாரால் தான்” என்பது.

                ஆம். பெரியார் பிறந்திருக்காவிட்டால், பெரியார் போராடியிருக்காவிட்டால், பெரியார் வெற்றி பெற்றிருக்காவிட்டால் நாம் யோசிப்பதும், பேசுவதும், செயல்படுவதும் அடிமைத்தன வட்டத்தைத் தாண்டியிருக்காது என்பதே உண்மை.

                பெரியார் என்பது ஒரு சாதாரண பெயர்ச்சொல் அல்ல. அது ஒரு வினைச்சொல். பெரியாரைப் புரிந்து கொண்டால், பெரியாரை பின்பற்றினால், பெரியார் சாதனைகளை வாழ்க்கை நடைமுறையாகக் கொண்டு வாழ்ந்தால், மனித வாழ்வின் இடர்கள், நடைமுறைத் துன்பங்கள் அனைத்தையும் எதிர்கொள்வதற்கு வழி கிடைப்பதோடு, வாழ்க்கையின் பொருள் என்ன என்பதற்கான விடையும் கிடைத்து விடும்.

                வாழ்க்கை என்பதே நம்பிக்கைகளில் இயங்குவது தான். அவை சரியான நம்பிக்கைகளாக இருந்தால் அவன் வாழ்வு முன்னேற்றமடைகின்றது. அதுவே முட நம்பிக்கையாக இருந்தால் அவன் வாழ்வு தோல்வியை நோக்கி பயணப்படுகின்றது.

                இது தான் பெரியார் கண்டறிந்த சமுக விஞ்ஞானம். நம்பிக்கையின் முலம் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றானோ, அவ்வளவுக்கவ்வளவு முட நம்பிக்கையினால் தன் வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றான் என்பதே அவரது முதல் கண்டுபிடிப்பு.

                மனிதன் ஏன் துன்பமடைகின்றான்? புத்தரின் கண்டுபிடிப்பு – ஆசை! ஆசை கொள்வதால் மனிதன் துன்படைகின்றான் என்றார் அவர். எல்லா உயிர்களையும் தன்னைப்போல் நேசித்தால் துன்பமில்லை என்றார் வள்ளலார். கட்டுப்பாட்டுடன் இல்லாததால் மனிதன் அல்லலுறுகிறான் என்றார் நபி. ஆனால் மண்ணின் அனைத்துத் துன்பங்களுக்கும் நடைமுறை வாழ்வில் ஒரே ஒரு காரணம். அது மூட நம்பிக்கை தான் என்ற முடிவுக்கு வந்தவர் பெரியார் தான். அது தான் சரியான முடிவு என்பதை உறுதி செய்தவரும் அவரே.

                பெரியாரின் பரிமாணங்களைக் கற்றவர்கள், உணர்ந்தவர்கள் ஒரு சிலரே. பலர் யானை கண்ட குருடர்கள் போல கடவுள் மறுப்பாளர், சாதி ஒழிப்பாளர், இட ஒதுக்கீட்டு போராளி, பெண்ணுரிமை பேசியவர், விடுதலைப் போராட்ட வீரர், பிராமணிய எதிரி, சுயமரியாதையை தமிழனுக்குக் கற்றுக் கொடுத்தவர் என்று பல பெயரிட்டு அழைத்தாலும் பெரியார் நமக்குத் தந்த அனைத்தும் ஒரே புள்ளியில் குவிவது, சற்று உற்று நோக்கினால் நமக்குப் புரியும். அது மனிதம்.

                மனிதன் மனிதத்தைக் கடைப்பிடித்தால் எந்த இடரும் இல்லை. ஆனால், மனிதனை மனிதனாக இருக்க விடாமல் தடுப்பது எது? அந்த வேரை நோக்கியே பெரியாரின் தேடல் அமைந்தது. படிப்படியாக ஒவ்வொரு காரணங்களையும் கண்டுபிடித்து நமக்கு அறிவுறுத்தினார். அவற்றில் முக்கியமானது ‘மூடநம்பிக்கை’

                மூடநம்பிக்கை என்பது, விரிவான பொருளில் ஒரு உணர வேண்டியது. இல்லாத ஒன்றை நம்புவது, அல்லது தவறான நம்பிக்கை வைப்பது என்றும் இதைப் பொருள் கொள்ளலாம்.

                மனு தர்மம், சாதி இழிவு, சூத்திரப்பட்டம், தொழில்முறை இழிவு, கல்வி மறுப்பு, வேலை மறுப்பு, மரியாதை மறுப்பு ஆகிய அனைத்தும் பிராமணரல்லாதார் மிதும் முக்கியமாக சூத்திரர், பஞ்சமர் மிதும் சுமத்தப்பட்டபோதும் அவற்றையெல்லாம் ‘தன் தலைவிதி’ என்று தவறான நம்பிக்கையோடு ஒப்புக் கொண்டதனால் விளைந்ததுதான் இந்த அடிமைத்தனம். இந்த அடிமைத்தனத்தை மாற்ற “எதை வேண்டுமானாலும் துக்கியெறியுங்கள், அது கடவுள் நம்பிக்கையாக இருந்தால் கூட” என்று போர்முரசு கொட்டியவர் தான் நம் பெரியார். அந்தப் போரில் அவர் பெற்ற வெற்றியின் விளைவுதான் இன்று நாம் அணிந்திருக்கும் மேல் சட்டை, துண்டு, வேட்டி.

     பகுத்தறிவு எது என்பதை நமக்குச் சொல்லித் தந்தவர் பெரியார் தான். சமூகம், அரசியல், பொருளாதாரம் என்று பல  தளங்களிலுள்ள  மூடநம்பிக்கைகளை எதிர்த்து தன் போரை நடத்திய முதல் மாவிரன், இன்றைய மாற்றங்களின் நாயகன் பெரியார் தான்.

 சமூகம்

                ஒரு சமுதாயம் ஏன் முன்னேற்றம் காண முடியவில்லை? ஏன் இழிவைச் சந்திக்கிறது? என்பதன் வேரைத் தேடியவர் பெரியார்.

                சமூகத்தை வர்ணங்களாகப் பிரித்து, சூத்திரர் என்றும் பஞ்சமர் என்றும் அவர்களை அடிமைப்படுத்தி, அந்த அடிமைத்தளையை அவர்கள் உணர முடியாதவாறு அவர்களுக்கு அறிவு மறுப்பை ஏற்படுத்தி, அவர்களை என்றென்றும் அந்தக் கட்டுமானத்திலேயே அமிழ்த்தி வைப்பதுதான் ஆரியத்தின் சூழ்ச்சி. அந்தச் சூழ்ச்சியின் முதல் ஆயுதம் தான் சாதி. சாதிதான் இழிவைத் தருகிறது. இந்தச் சாதியின் அடிப்படை மதம். அந்த மதம் நிற்கும் அடிக்கல்தான் கடவுள். கடவுள் மீதான நம்பிக்கைதான் அனைத்திலும் மிகப் பெரிய மூடநம்பிக்கை. எல்லா அடிமைத்தனங்களுக்கும் அதுவே அடிப்படை. சாதி நம்பிக்கையை நீர்த்துப் போகாமல் காப்பாற்றுவதற்கு உதவுபவை. சடங்குகள், சம்பிரதாயங்கள் முதலானவை. எனவேதான் அவர் எழுப்பிய விடுதலை முழக்கம் முதலில் கடவுள் நம்பிக்கை என்னும் அடிக்கல்லைக் குறி வைத்தது. அடிக்கல்லை உருவினால் கட்டடம் தானாகவே உடையும் என்பது நடைமுறை.

அடிமைத்தனம்

 

அரசியல் பொருளாதாரப் பின்னடைவு

 

கல்வி மறுப்பு

 

முடநம்பிக்கை

 

சாதி

 

சாத்திரங்கள், வேதங்கள்

 

வர்ண பேதங்கள்

 

மதம்

 

கடவுள்

 

பார்ப்பனியம்

 

வெறும் பேச்சில், எழூத்தில் மட்டுமல்லாது, நடைமுறையிலும் தனது போரை அவர் நடத்தியதின் சில துளிகள் தான் இவை.

                விதவை மறுமணம் என்பது சமுதாயத் தளத்தில் அவர் நடத்திய முதல் புரட்சி. அதை தனது சொந்த குடும்பத்திலேயே தனது 30வது வயதிலேயே தன் தங்கையின் மகளுக்கு நடத்தி வைத்தவர் பெரியார்.

                இந்த நாட்டிலேயே பெண்களை முதன் முதலாக பொது வாழ்வுக்கு அழைத்து வந்தவர் பெரியார். பெண்ணடிமைத் தத்துவத்தை உடைத்தெறிந்து தன் மனைவியையும், தங்கையையும் எல்லாப் போராட்டங்களிலும் பங்கேற்க வைத்தவர் அவர். காங்கிரசு கட்சியில் இருந்தபோதும் வர்ண வேறுபாடுகளை கற்பிக்கும் மனுதர்ம சாத்திரத்தையும், அதைப் பரப்பும் ராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று முழங்கியவர் அவர்.

                சாதியை மறுத்து அவர் நடத்தி வைத்த கலப்புத் திருணமங்கள் எண்ணற்றவை. சாதியை நினைவுபடுத்துவதால் கலப்புத் திருமணம் என்ற சொல்லையே கேலி செய்தவர் பெரியார். “மனித இனத்துக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமணம் எப்படி கலப்புத் திருமணமாகும்” என்பது அவரின் கேள்வி.

                தலைவிதி, மோட்சம், நரகம், பிறவிகள் என்ற நம்பிக்கைகளைத் தகர்க்க வெடி வைத்தவர் அவர். 1924 இல் நடந்த வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டம், தீண்டாமையின் கரங்களை ஒடுக்கி சாமான்ய மக்களை முக்கியமாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைக் கூட, தம் அடிமைத்தளைகளை அறுக்குமாறு தூண்டியது.

                கர்ப்பத்தடை பற்றி 1928 ஆம் ஆண்டிலேயே தனது ரிவோல்ட் இதழில் முதன் முதலில் எழூதியவர் பெரியார்.

                1930 இல் நீதிக் கட்சி ஆட்சியில் தான் பலத்த எதிர்ப்புக்கிடையில் பார்ப்பனக் கட்டமைப்பான தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.

                அவர் எழுப்பிய “அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம்” என்ற முழக்கமே பார்ப்பனியத்தின் மிது அவர் கொடுத்த முதல் அடி.

 பொருளாதாரம், அரசியல்

                 ஒரு சமுகத்தின் உண்மையான முன்னேற்றத்திற்கு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதும், அந்த முன்னேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு, அரசியல் விடுதலையும் அவசியமாகின்றது. இவற்றை நாம் பெறுவது கல்வியறிவு, வேலை வாய்ப்பு ஆகியவற்றின் மூலமேயாகும். இந்தக் கல்வியறிவு என்னும் அடிப்படை உரிமையை நமக்குக் கிடைக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்த பார்ப்பனியத்தை நொறுக்குவதை தன் தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டவர் பெரியார்.

                1924 இல் வ.வே.சு.ஐயரின் குருகுலத்தில் பிராமண ஆதிக்கத்தைக் கண்டித்தது முதல், அவர் தொடங்கிய போராட்டம், கல்வியில் இட ஒதுக்கிடு, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என விரிவடைந்து அரசியல் ரீதியாகவும் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றவும் நம் மக்களுக்கு வாய்ப்பாய் அமைந்தது என்பது கண்கூடு.

                1952 இல் ராசாசி கொண்டு வந்த “குலக்கல்வித் திட்டம்” என்னும் கல்வி மறுப்புத் திட்டத்திலிருந்து பெரியாரின் கடும் போராட்டத்திற்குப் பிறகே நமக்கு விடுதலை கிடைத்தது. அவரின் போராட்டத்தில் 1951 ஆம் விதி 15ல் 4வது உட்பிரிவை புதிதாக சேர்த்து வழங்கப்பட்ட “வகுப்புரிமை சட்டமே” இட ஒதுக்கிடுகளின் மூலமாகும். அரசியலில் காங்கிரசின் மீது தாம் கொண்ட நம்பிக்கை தவறானது என்பதைக் கண்டு கொண்ட அந்த விநாடியே காங்கிரசையும் அதன் பார்ப்பனிய மேதாவித்தனத்தையும் ஒழிப்பதுவே தன் முதற் பணி என்ற முடிவை எடுத்தவர் பெரியார்.

                மத ரீதியான அடிமைத் தனத்தையும், இன ரீதியான அழுத்தங்களையும் எதிர்கொண்டு போராடக் கற்றுக் கொடுத்தவர் பெரியார்.

                “திராவிட நாடு திராவிடருக்கே” என்று 1939 இல் அரசியல் விடுதலைக்கான முதல் குரலை எழூப்பியவர் பெரியார். “சாதிய, இன ரீதியான அடிமைத்தளைகளிலிருந்து விடுதலை கிடைக்காமல் வெறும் அரசியல் ரீதியான விடுதலை கிடைப்பது பயனில்லை. அத்தகைய விடுதலை நாள் துக்க நாள்” என்று அறிவித்து கருப்புக் கொடி ஏற்றியவர் அவர்.

     வடநாட்டினர் கவர்னர் பதவியில் நியமிக்கப்படுவதை எதிர்த்து தனது போரை தொடங்கிய அவர் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தனியே பிரிந்தால் தான் இன ரிதியான விடுதலைக்கு வழியாகும் என்பதை உணர்த்த தேசியக் கொடியை 1955ல் எரித்தும் 1956ல் தமிழ்நாடு தவிர்த்த இந்திய வரைபடத்தை எரித்தும் தன் விடுதலைப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தினார்.  

     பெரியாரின் பையில் எப்போதும் ஒரு கையேடு ஒன்று இருக்கும். அந்த ஏட்டில் எந்தெந்தப் பார்ப்பன அதிகாரிகளின் பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்ற குறிப்பு இருக்கும். உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு அந்த இடத்தில் பார்ப்பனரல்லாத ஒருவரை நியமிக்கக் கோருவார். அரசுகள் செயலற்று இருந்தபோது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான செயலாளராக செயல்பட்டவர் பெரியார் தான்.

 மொழி

                 நம் மீது சுமத்தப்பட்ட சாதி, மதம் ஆகிய அடிமைத்தனங்களை எதிர்த்த பெரியார் மொழி ரீதியான அடிமைப்படுத்தலையும் எதிர்த்து கடும் போரை நிகழ்த்தினார். மத ரீதியான சமக்கிருத மேதாவித்தனத்தையும், அம்மொழியின் முலம் திணிக்கப்பட்ட மந்திரங்கள், யாகங்கள், சடங்குகள் ஆகியவற்றை எதிர்த்தும், பார்ப்பனிய ஆதிக்கத்தை முறியடித்த பெரியார், வடவர்களின் ஆதிக்கக் கருவியான இந்தியையும் எதிர்த்து மிகப் பெரிய போர் நடத்தினார்.

                1952 இல் முதன் முதலில் அவர் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போர் பின் 1955 இல் விரிவடைந்து இந்தியை, தமிழ்நாட்டை விட்டே விரட்டியது.

                தமிழ்மொழியைச் சீர்படுத்த எழூத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியவரும் அவரே.

 

     நம் தலைமுறையைச் சேர்ந்த மாபெரும் தலைவரான பெரியார் அமைத்துக் கொடுத்த முதல் படிக்கட்டில், நம் பயணத்தைத் தொடங்கியிருக்கும் நமக்கு, நமக்காக அமைக்க வேண்டிய பல படிகள் இன்னும் காத்திருக்கின்றன. ஆம், குடியரசுத் தலைவராக ஒரு தலித் இருந்தால் கூட, திண்ணியம், உத்தப்புரங்களை மாற்ற நாம் தான் போராட வேண்டியிருக்கிறது.

                அடுத்தடுத்த படிகளுக்கு நம்மை ஏற விடாமல் தடுப்பதற்கு அத்தனை மேட்டிமைச் சக்திகளும் வாய் பிளந்து கொண்டு தயாராக இருக்கின்றன. நம் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிரிகள், நம்மவர்களைக் கொண்டே, அதிலும் பெரியார், அம்பேத்கார் போன்ற நம் குல வெளிச்சங்களைக் கொண்டே நம்மை எரிக்கக் காத்திருக்கின்றனர். இப்போதுதான், நாம் நம் வரலாற்றுக் கடமையான போராட்டத்தை முன்னிலும் வேகமாகத் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதில் நாம் வெற்றி பெற்று, சரிநிகர் சமமான, மானமும் அறிவும் உள்ள ஒரு மனித சமுதாயத்தை அமைக்கும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் திண்ணம்.

Advertisements