ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் – மதுரை சு. தளபதி

இந்தத் தொகைக்கு எத்தனை சுழிகள் (பூச்சியங்கள்) என்பதை முதன்முறையில் சரியாகக் கணக்கிட்டுச் சொல்லி விட்டால் நீங்கள் சிறந்த அறிவாளிதான்.

அப்படி முடியாவிட்டாலும் ஒன்றும் கவலைப் பட வேண்டாம். ஆயிரம் ரூபாய் நோட்டையே சரியாகப் பார்த்திராத ஒரு சாதாரணக் குடிமகனுக்குக் கூட, இந்தக் கணக்குகளையெல்லாம் அனுபவபூர்வமாகச் சொல்லிக் கொடுப்பதை நம் அரசியல்தலைவர்கள் தலையான கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். 

மேற்கண்ட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் என்பது வருமானக் கணக்கு அல்ல. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் நம் அரசியல்வாதிகள் நாட்டுக்கு ஏற்படுத்திய நட்டக் கணக்கு. இவ்வளவு பெரிய நட்டத்தை ஏற்படுத்தியவர்கள் யார் என்ற கேள்விக்குப் பதிலாக ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் முதலில் கை காட்டுவது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசாவை.

இந்தியாவின் வரலாற்றிலேயே முதல் முறையாக இவ்வளவு பெரிய ஊழலை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பெருமை நம்ம ராசாவுக்குத்தான் சேரும். கின்னசுக்கு அனுப்பினால் நிச்சியம் இது ஒரு ரெகார்ட்பிரேக்.

எதிர்க்கட்சிகள் ஆடுஆடென்று ஆடி ஒருவழியாகக் கடைசியில் ராசாவை பதவி விலக வைத்து விட்டன. கருணாநிதியும் பாராளுமன்ற சனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக, கூட்டணிக் கட்சிக்கு தர்மசங்கடத்தைத் தவிர்ப்பதற்காக, ராசாவை தான்தான் விலகச் சொன்னதாக அறிக்கை விட்டார்.

இந்த ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக மத்திய அரசின் கணக்குத் தணிக்கைக் குழுதான் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது. அக் குழுதான் தொகையின் அளவையும் கணக்கிட்டுச் சொல்லியிருக்கிறது. இதன்பேரில் எதிர்க்கட்சிகள் கேட்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணை நடத்த மத்திய அரசு முன்வர மறுக்கிறது. விசாரணை நடத்தியே தீர வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் முற்றுகைகளால் நாடாளுமன்றம் கிட்டத்தட்ட 14  நாட்களுக்கு மேல் முடக்கப்பட்டுக் கிடக்கிறது.

உச்ச நீதிமன்றம் ஊழல் புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசைக் கண்டித்திருக்கிறது. கனிமொழி, ராசா மற்றும் ஏஜெண்ட் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் இதை உறுதி செய்யும் விதமாகவே இருக்கின்றன. நீரா ராடியா அறுபது கோடி ரூபாய் கமிசனாக வாங்கியதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.  ஊழல் நடந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் வெளிப்படையாகவே புலனாகிறது.

அனால் அமைச்சர் ராசாவை மட்டும் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதோடு பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம் என்று காங்கிரசு முழு மூச்சாக முயற்சித்துக் கொண்டுள்ளது .

ஊழலில் தொடர்புடையவர்கள் யார் என்று வாய் திறந்தால் ராசா உயிருக்கு ஆபத்து என்று சு.சுவாமி வேறு ஊதி வைக்க ராசாவும் கப்சிப். இவ்வளவு பெரிய தொகையை ராசா மட்டுமே எடுத்துக் கொண்டாரா? இவ்வளவு பெரிய ஊழல் நடந்தது சோனியாவுக்கோ, மன்மோகன் சிங்குக்கோ இல்லை கருணாநிதிக்கோ தெரியாதா?

ராசாவுக்கு 10 %

கருணாநிதிக்கு 30 %

சோனியாவுக்கு 60 %

என்ற விகிதத்தில் இந்தத் தொகை பங்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், சோனியாவின் தங்கை இத்தொகையைப் பெற்றுக் கொண்டதாகவும் சு.சுவாமி நேரடியாகக் குற்றம் சுமத்துகிறார். இதற்கு இதுவரை யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

ஆக மொத்தம் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து கொள்ளையடித்த ஊழலில் இப்போது மாட்டிக்கொண்டது அந்தத் துறையின் அமைச்சராக இருந்த ஆ. ராசா. மாட்டிக்கொண்டவரைக் காப்பாற்றுவதற்கு கூட்டாளிகள் எல்லோரும் தங்களால் இயன்றவரை முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.

நாடாளுமன்றமே முடங்கினாலும் பரவாயில்லை, விசாரணைக் குழு அமைக்க முடியாது என்கிறது சோனியாவின் காங்கிரசு அரசு.

நான் இருக்கிறேன், பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் ராசாவின் முதுகில் தட்டிக்கொடுத்து, தனிப்பட்ட முறையில் உறுதி அளிக்கிறார்  மன்மோகன் சிங்.

கருணாநிதியோ தன வழக்கமான ஒப்பரிப்பாடலை ஆரம்பித்திருக்கிறார். “ஆ.ராசா ஒரு தலித் என்பதாலேயே அவர் மீது குற்றம் சுமத்துகிறார்கள். இது ஆரிய திராவிட யுத்தம்” என்றெல்லாம் கண்ணீர் விட்டிருக்கிறார்.

ஆ. ராசா ஒன்றும் அறியாத அப்பாவி போலவும், கருணாநிதி பட்டம் கொடுத்தது போல் அவர் தலித் இனத்தின் தகர்த்தாய தலைவன் என்றும், மக்களுக்காகவே உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து போனவர் போலவும் மாய்ந்து மாய்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கும் அவருக்குப் பின் பாட்டு சால்ராக்கள் வாசித்துக் கொண்டிருக்கும் (மானமிகு) வீரமணிக்கும், சுப. (வீர)பாண்டியனுக்கும், பாதி(ரி) கஸ்பருக்கும் சொல்ல வேண்டிய பல செய்திகள்  நம்மிடையே இருக்கின்றன.

 வருமானம் என்றால் தனக்கு மட்டும், பிரச்சினை என்றால் ஒட்டு மொத்த மக்களுக்கும் என்பதுதான் கருணாநிதியின் வழக்கமான பாணி.

மாட்டிக்கொண்டால் சாதியைச் சொல்லித் தப்பிக்க முயற்சி செய்வதெல்லாம்  பழைய உத்தி.

திரு. கருணாநிதி அவர்களே,

உங்கள் நாடகங்களைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் பத்தாம் பசலிகள் அல்ல. காலம் இப்போது மாறி விட்டது. உங்கள் முகமூடிகள் கிழிந்து தொங்க ஆரம்பித்து விட்டன. விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்வதில் நீங்கள் முன்னேறியிருப்பது போலவே விபரம் தெரிந்து கொள்வதிலும் மக்கள் முன்னேறியிருக்கிறார்கள்.

நேர்மையாகச் செயல்பட்ட, உங்கள் ஊழல்களுக்கு ஒத்துழைக்க மறுத்த திரு. உமாசங்கரைப் பந்தாடிய போது இல்லாத தலித் பாசம், ஊழலில் மாட்டிக்கொண்ட ராசாவின் மீது மட்டும் புதிதாக ஏற்படுவது ஏன் என்பதெல்லாம் மக்கள் மிக எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.

தஞ்சைப் பெரிய கோயிலில் ஆயிரம் பெண்களை ஆட விட்டு பட்டாடை உடுத்தி அரச கோலத்தில் அமர்ந்து ரசித்துவிட்டு, அதற்குப் பிரமதேயப் பரிசாக ஐந்து ஏக்கர் நிலம் பத்மா சுப்ரமணியத்துக்கு அளித்த போதெல்லாம் நினைவுக்கு வராத ஆரிய திராவிட யுத்தம் ஊழலில் மாட்டிக் கொண்ட போதுதான் நினைவுக்கு வருகிறதா?

ஒரு ஊழல் பெருச்சாளியை தலித் என்று சொல்லி நீங்கள் காட்டும் திடீர்ப் பாசத்தை நாங்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினமே அவமானமாக உணர்கிறோம். உங்கள் சொந்த அசிங்களுக்கு எந்த சாதியினரும் அடைக்கலம் கொடுப்பதாக இல்லை.

ஈழவிசயத்தில் மாபெரும் துரோகமிழைத்து ஒரு பெரும் இன அழிப்புக்கு துணை நின்ற  உங்களை வரலாறு ஒரு துரோகியாக மட்டுமே பதிவு செய்யும்.

செம்மொழி மாநாடு நடத்தினால் தமிழர்களையெல்லாம் ஏமாற்றி விடலாம், ராசராச சோழனுக்கு விழா நடத்தினால் போதும், துரோகங்களையெல்லாம் மறந்து விடுவார்கள் என்பதெல்லாம் வெறும் பகல் கனவு.

உங்கள் சாயம் வெளுத்து நெடு நாட்களாகின்றன. உங்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதற்கு எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறோம். அனைத்திற்கும் நல்ல பதில் விரைவில் கிடைக்கும். அதுவும் உங்களுக்குப் புரிந்த மொழியிலேயே.

இலவசங்கள் மூலமாகவோ, வாக்குக்களை விலைபேச நீங்கள் வீசி எறியப்போகும் ஊழல் பணத்தின் மூலமாகவோ உங்கள் வீழ்ச்சியை நிறுத்த முடியாது. அது உங்கள் கண் முன்னாலேயே நடக்கும். தடுக்க முடியாமல், தவிர்க்க  முடியாமல்.

Advertisements