வருவார்கள் அவர்கள்!

வருவார்கள் அவர்கள்!

அவர்களுக்குப் பாதுகாப்பாய்

காவல் துறை.., பூனைப் படை..,

நமக்குத் தெரியும்

அவர்களைப் பாதுகாப்பதை விட முக்கியமானது

அவர்களிடமிருந்து

நாட்டைப் பாதுகாப்பது.

வருவார்கள் அவர்கள்!

வாக்குகள் கேட்டு!

கும்பிடுவார்கள்..

குலுக்குவார்கள் கைகளை..

அவசரப்பட்டுக் கழுவி விடாதீர்கள்.

மலம் அள்ளுகிற நம் கைகளை

 

வருவார்கள் அவர்கள்!

கைத்தறியாடை போடுவார்கள்..

கட்டிப் பிடிப்பார்கள்..

முகம் சுளிக்காதீர்கள்

நாற்றம் அதிகம்

அவர்களா!

நாம் தினம் அள்ளும் சாக்கடையா?

வருவார்கள் அவர்கள்!

நூலோடும், வாளோ(லோ)டும்..

கத்தியும் கத்திரியும்

கூர் தீட்டி வைத்துக் கொள்ளுங்கள்

இம்முறை

சவரத்திற்காய் அல்ல!

 

வருவார்கள் அவர்கள்!

கதர், கலர், கரை வேட்டிகளோடு..

உருப்படி சுத்தமாய் வெளுத்து அனுப்புங்கள்

உடுப்புகளை அல்ல!

வருவார்கள் அவர்கள்!

காட்டிக் கொடுப்பவர்களும்..

கூட்டிக் கொடுப்பவர்களும்..

ஒரு போதும் நிறுத்தி விடாதீர்கள்

செருப்புகள் தைப்பதை

தேவைப்படும் நிறைய,

வேறு எதால் அடிப்பது.

 

வருவார்கள் அவர்கள்!

அரிசி, பணம், அடுப்பு, தொலைக்காட்சி

அத்தனையும் கொடுப்பார்கள்..

அதெல்லாம் இருக்கட்டும்,

அதிகாரம் கேளுங்கள்.

இல்லையென்றால்

நாம் அள்ளும் கடைசிக் குப்பை

அவர்களேதான்.

வருவார்கள் அவர்கள்!

நமக்காவே உழைப்பதாய்

புளுகுவார்கள்!

தோலை உரியுங்கள்..

பறையாய் முழங்குங்கள்..

விடுதலையின் ஒலி

அங்கேயே தொடங்கட்டும்!

Advertisements