“கம்பளங்கள் மட்டும் சிவப்பல்ல” 

      ஆமாம். நாங்கள் உங்கள் எதிரிகள் தான். உங்களால் எங்களை ஓன்றும் புடுங்க முடியாது” என்று அழுத்தம் திருத்தமாக இன்னுமொரு முறை செருப்பால் அடித்துச் சொல்லியிருக்கிறார்கள் தில்லியில். ஓன்றரை லட்சம் ஈழத் தமிழர்களைக் கொலை செய்து, அந்தக் குருதி ஈரம் இன்னமும் காயாத ராசபட்சேயின் கைகளைப் பிடித்து குலுக்கோ குலுக்கு என்று குலுக்கியிருக்கிறார்கள் தில்லிக்காரர்கள்.

      அடேங்கப்பா. சிவப்புக் கம்பள வரவேற்பு என்ன?! சிரிப்புகள் என்ன?! கவனிப்பு  என்ன?! இதில் இன்னும் ஏழு ஓப்பந்தங்கள் வேறு கையெழுத்து ஆனதாம். உங்களுக்கும் சிங்களனுக்கும் இடையே கையெழுத்துப் போடப்படாத பல ஓப்பந்தங்கள் நடைமுறையிலிருப்பது எங்களுக்கும் தெரியும். இதில் புதிதாக கையெழுத்துப் போட்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

      மக்களின் தன்னுரிமையை வென்றெடுக்க, மக்களை இனவாத அழிப்பிலிருந்து காப்பாற்றப் போராடியவன் உங்களுக்குப் பயங்கரவாதி. தன் சொந்த நாட்டு மக்களையே, அவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்ற ஓரே காரணத்திற்காக நச்சுக் குண்டு போட்டு கொன்றவன் உங்களுக்கு விருந்தாளி. நன்றாயிருக்கிறது உங்கள் தில்லி நியாயம்.

      ஏற்கனவே திருப்பதி கோவிலுக்கு வந்து எந்த எதிர்ப்பும் மறுப்புமின்றி பூர்ண கும்ப மரியாதை வாங்கிப் போன ராசபட்சே, இந்த முறை முழு அரசு மரியாதையுடன், மரபு  ரீதியான அமர்க்களமான வரவேற்புடன் மனைவி, அமைச்சர்கள் சகிதம் அதிகாரபூர்வ விருந்தாளியாகவே வந்து போயிருக்கிறான். கூடவே காந்தி சமாதிக்கு மலர் வளையமெல்லாம் வைத்துப் போயிருக்கிறான்.

      இதில் எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ ஓன்றுமில்லை. “முழுக்க நனைஞ்சாச்சு. இனி முக்காடு எதற்கு” என்று உண்மையை முழு நிர்வாணமாய் அவிழ்த்துப் போட்டதில் எங்களை விட உங்களுக்குத்தான் ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கும். அதே போல் இன்னமும் ஏதாவது செய்வார்கள் என்று ஏமாந்து கொண்டிருக்கும் அல்லது அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொய்களைக் கலைத்ததில் எங்களுக்கும் திருப்தி தான். ஒன்று மட்டும் உண்மை. எப்போதும் நீங்கள் நீங்களாகவும், நாங்கள் நாங்களாகவுமே இருக்கிறோம். 

இப்போது நம் முன்னர் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஓன்று “போடாங்.. உங்க இந்தியாவும் நீங்களும்” என்று தில்லிக்காரர்களின் அதிகாரத்திலிருந்து தமிழ்நாட்டை விடுவித்து, தமிழர்களின் நலம் பேணும் அரசை நிறுவுவது.

இரண்டாவது இன்னும் குனிந்து கொடுத்து “அய்யா முதலாளிகளே! நன்றாகக் குட்டுங்கள். இன்னும் நன்றாகக் குட்டுங்கள். கூடவே நாங்கள் பிழைப்பதற்கு இன்னும் நான்கு எலும்புத் துண்டுகளை போடுங்கள்” என்று அவர்களிடமே கெஞ்சி நிற்பது.

      முதலாவது வழியை தேர்ந்தெடுக்க பெரிய ரோசம், தன்மானம் எல்லாம் தேவையில்லை. உணர்ச்சி என்று ஓன்று இருந்தாலே போதும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. இரண்டாவது வழியை செவ்வனே செய்து வந்திருக்கிறார்கள், நாம் ஓட்டுப் போட்டோ அல்லது நம் ஓட்டை அவர்களே போட்டுக் கொண்டோ வெற்றி பெற்றுப் போன நம் தமிழக எம்.பிக்கள்.

       “அய்யா போன தடவை நேரடியாக உங்க இடத்துக்கே வந்து கேட்டோம். போட்டுத் தர்றேன்னு சொன்னீர்கள். இன்னும் ஓன்றும் செய்யலீங்களே” என்று இவர்கள் கேட்க, ராசபட்சேயோ “பார்ப்போம். பார்த்து பின்னாடி செய்வோம்” என்று உறுதியளிக்க விமானத்திற்கு ரிட்டன் டிக்கெட் போட்டிருக்கிறார்கள் நம் தமிழக எம்.பிக்கள். காங்கிரசார் மட்டும் “பேச்சுவார்த்தை பரம திருப்தி” என்று சொல்ல மற்ற சிலர் “இன்னும் திருப்தி வரவில்லை” என்று ஊடகங்களில் உளறி விட்டு வண்டியேறினர்.

      இந்த இன்டர்நெட் யுகத்திலும் கடிதம் எழுதுவதைக்  கைவிடாமல் தபால் துறையை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வருக்கு, அவர் பாணியிலேயே  மன்மோகன் சிங்கும் பதில் கடிதம் போட்டிருக்கிறார். தமிழகம் தவமிருந்து பெற்றெடுத்த சிவகங்கை வெற்றி வீரர் சிதம்பரம், “ஈழத் தமிழர்களுக்கு ராசபட்சே நல்லது செய்ததாக உறுதியளித்திருக்கிறார்” என்று நேரிலேயே வந்து சொல்லிவிட்டுப் போனார். ஆனால் மறுநாளே, இலங்கை மந்திரி பெரிஸ் “ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா எந்தவித நெருக்குதலும் தரவில்லை” என்று போட்டுடைத்திருக்கிறார். வேறு என்ன தான் கேட்டிருப்பார்கள். ஓருவேளை செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு  விருந்தினராய் அழைத்திருப்பார்களோ என்னவோ.

மன்மோகன் சிங்எழுதியுள்ள கடிதத்தின் படி, ஈழத்தில் முள்வேலி முகாமில்  உள்ள தமிழர்கள் 47,000 பேர் தானாம். அவர்களுக்கு கட்டிக் கொடுக்கப் போகும் வீடுகளின் எண்ணிக்கை 50,000மாம் . ஒவ்வொருவருக்கும் ஒன்றேகால் வீடு கொடுக்கப் போகிறார்களோ என்னவோ. போதும்டா சாமீ நீங்கள் கொடுத்ததெல்லாம். சொந்த மண்ணைப் பிடுங்கிக் கொண்டு பிச்சை போடுகிறீர்களா என்ன?

ஆனால் இந்த இடைவெளியில் நடந்தவை எல்லாம் நாம் உன்னிப்பாய் கவனிக்க வேண்டிய அற்புதமான விஷயங்கள். முன்பெல்லாம் இலைமறை காய்மறையாக சொன்னவர்கள் இப்போது நேரடியாகவே எச்சரித்திருக்கிறார்கள். “ஈழத்தமிழர் படுகொலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. நாங்கள் உதவி செய்யவில்லை” என்று பம்மாத்து காட்டிக் கொண்டிருந்த காங்கிரசு கட்சியும், இந்திய அரசும் இப்போது வெளிப்படையாக “நாங்கள் சிங்களர்களின் கூட்டாளி தான். தமிழர்களின் எதிரி தான்” என்பதை ஓப்புக் கொண்டிருக்கிறார்கள்.

      அப்பாவி முகமுடியை அணிந்து கொண்டிருக்கும், உலக வங்கியின் விசுவாசி அமெரிக்க அடிமை, மன்மோகன்சிங் சோனியா கும்பல் தம் முகமுடியை விலக்கி, கொலைகாரனுடன் கை குலுக்கி தாம் யாரென்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

      ஏழு ஓப்பந்தமோ, எழுபது ஓப்பந்தமோ  எத்தனை  போட்டாலும் உங்கள் நோக்கம் ஈழத் தமிழ் மக்களை அழிப்பது. அவர்களது நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்பது தான். உங்களின் மக்கள் அழிப்பு  நடவடிக்கைக்கு இந்தியாவின் பழங்குடி மக்களும் விதி விலக்கல்ல என்பது சமீபத்திய நிரூபணம். (ஈழத்தைப் போல) “இங்கும் வான் தாக்குதல் நடத்தலாமே” என்று பொதுவுடைமை பேசும் காம்ரேடுகள்  யோசனை சொல்வதைப் பார்த்தால், உங்கள் எல்லோரின் நிறமும் ஒன்றுதான். நீங்கள் எல்லோருமே ‘முதலாளிக்காய் குறைக்கும் நாய்கள்’ என்பதுதான் உண்மை.

      எல்லோரும் ஓரு குறிப்பிட்ட செய்தியைச் சொல்லி ரொம்பவும் வருத்தப் பட்டிருக்கிறார்கள். கோபப்பட்டிருக்கிறார்கள். அது டக்ளஸ் தேவானந்தாவுடன் கை குலுக்கியது. நாங்கள் வருத்தப்படவுமில்லை. கோபப்படவுமில்லை. ராசபட்சேயுடனேயே கைகுலுக்கி விட்டிர்கள். பிறகென்ன டக்ளஸ். ராசபட்சேயுடன் ஓப்பிடும்போது டக்ளஸ் செய்த குற்றம் மிகக் குறைவு. ஓரே ஓரு கொலை, ஓரு குழந்தை கடத்தல், ஓரு பலாத்கார முயற்சி, ஓரு பணம் பறித்தல், ஓரே ஓரு வருடம் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைக் காவல் மற்றும் இன்று வரை இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி, அவ்வளவு தான்.

      அதற்காக கைகுலுக்காமல் இருக்க முடியுமா என்ன? அதுவும் ராசபட்சேயே குலுக்கச் சொல்லும்போது. ராசபட்சேக்குத் தெரியுமோ தெரியாதோ, டக்ளஸ் ரொம்பக் காலத்துக்கு முன்னாடியே உங்களுக்குக் கைப்புள்ளை என்பதும் உங்கள் ‘ரா’ வுக்கு செல்லப்பிள்ளை என்பதும். அதுவும் டக்ளசே விளக்கமாய் தீர்ப்பு வேறு சொல்லி விட்டார், “இந்திய இலங்கை ஓப்பந்தத்தோடு என் குற்றங்களையெல்லாம் காலாவதியாகி விட்டன” என்று. பிறகென்ன. பீனல் கோடாவது புடலங்காயாவது!. சமீபத்தில் திடீரென்று ஞாபகத்திற்கு வந்த ‘இறையாண்மை’, வெங்காயம் எல்லாவற்றையும் ஏறக்கட்டி வையுங்கள். தேசப் பாதுகாப்பு  சட்டத்தை மட்டும் தூசு தட்டி வையுங்கள். உணர்ச்சி உள்ளவர்கள், எதிர்த்துப் பேசுபவர்களை தூக்கி உள்ளே வைக்கலாம்.      போபர்ஸ் குற்றவாளி இத்தாலி குத்ரோச்சியை அப்பாவி என்று அனுப்பி வைத்தீர்கள். போபால் குற்றவாளி அமெரிக்க ஆண்டர்சனை தனி விமானத்தில் பாதுகாப்புடன் தப்ப வைத்தீர்கள். பார்த்தவுடன் கைது செய்வதற்கு டக்ளஸ் மட்டும் இளிச்சவாயனா என்ன!

            இதன்முலம் உங்களை விட தான்தான் பல மடங்கு புத்திசாலி என்பதை ராசபட்சே நிருபித்திருக்கிறான். உடனடிப் பலன்கள் கிடைக்கும் என்பதை விட நாளை உலகத்தின் நீதி விசாரணையில் போர்க் குற்றவாளி என்று தனியாகவா தொங்க முடியும். துணைக்கு நீங்களும் வேண்டாமா என்ன. “நடந்ததை வெளியில் சொன்னால் தூக்கில் போடுவோம்” என்று  கோத்தபய எச்சரித்தது பொன்சேகாவுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சேர்த்துதான்.

பிரபாகரனின் தாய் என்ற ஓரே காரணத்திற்காக, ஒரு 80வயது மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி அளிக்க இடம் கொடுக்காத உங்கள் விசா நடைமுறைகள், டக்ளஸ்க்கும் ராசபட்சேவுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

      ஆக மொத்தம் இந்தப் பயணத்தின் முலம் 500 மெகாவாட் அனல் மின் திட்டம், சிங்கள படைக்கு பயிற்சி, 4000 கோடி பணம் ஆகியவற்றை ராசபட்சேவுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள்.

      இங்கே ஏழு மணி நேரம் மின்வெட்டு, குடிக்க தண்ணீர் இல்லை. 80 விழுக்காடுக்கு மேல் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ். ஆனாலும் நீங்கள் அள்ளிக் கொடுத்தாக வேண்டும். ஆமாம், உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா என்ன?

      ஓன்று மட்டும் நினைவில் இருக்கட்டும். கூடிய விரைவில் மக்கள் மன்றத்தில் தண்டனைக் குற்றவாளியாக 21ம் நூற்றாண்டின் இட்லர் ராசபட்சே நிறுத்தப்படுவான். உடன் வருவதற்கு கூட்டாளிகளான நீங்களும் தயாராக இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எதிராய் சாட்சி சொல்ல ஈழத்தில் ஒன்றரைலட்சம் மண்டை ஓடுகள் காத்திருக்கின்றன. உங்களை மறக்கவோ மன்னிக்கவோ தமிழர்கள் எந்தக் காலத்திலும் இங்கு தயாராக இல்லை. இல்லவே இல்லை.

Advertisements