மரியாதைக்குரிய சீமான்,

சமீபத்திய  மதுரைக் கூட்டத்தில் உங்களின் பேச்சை ஆவலுடன் எதிர்பார்த்து, ஆதங்கத்துடன்  கேட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிய சராசரித் தமிழர்களில் நானும் ஒருவன்.

உங்களின் முந்தைய பேச்சுகளை குறுந்தகடுகளிலும், நேரிலும் கேட்டு உணர்ச்சி எழுப்பப்பட்டு ‘‘அறுத்தெறிவோம் வாரீர்’’ என நீங்கள் அழைத்தவுடன் ஓடோடி வந்த இளைஞர் கூட்டத்தின் ஒரு  துளி நான்.

முள்வேலிக்குள் சிறைப்பட்டுள்ள மூன்று இலட்சம் ஈழத் தமிழர்களை வெளிக் கொணர்வதற்கான முன்னெடுப்பு இது என்றும், ‘‘நாம் தமிழர்’’ என்ற முழக்கத்தை முன் வைத்தும் நடந்த அந்தக் கூட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினீர்கள் – முள்வேலிக்குள் நின்று கொண்டு. முன்பெல்லாம் வேலிக்கு வெளியில் நின்று முழங்கிய வீரத் தமிழன் சீமானை அன்று காணோம் என்பதுதான்
 எங்கள் வருத்தம்.  வேறு ஏதோ வேலிக்குள் நீங்கள் சிக்கிக் கொண்டது போல் எங்களுக்குத்  தெரிகிறது.

ஈழத் தமிழருக்கு நன்மை நடக்க வேண்டும் என்ற உங்கள் நோக்கத்தில் எங்களுக்குச் சந்தேகமில்லை. ஆனால் அதற்காக இவ்வளவு தூரம் சுருதி குறைத்துக் கெஞ்ச வேண்டுமா என்ன? அப்படிக் கெஞ்சினால் மட்டும் இந்தியா உங்களுக்கு உதவி விடுமா என்ன? மயிலே மயிலே என்றால் இறகு விழுமா  என்ன?  போரை நடத்தியவர்களிடம் கைதிகளை விடச்சொல்லிக் கெஞ்சுவது என்ன உத்தி?

அரசியல் சக்திகளை அனுசரித்துப் போவது அவர்களின் தாளத்துக்கு நம்மை ஆட வைத்து விடும் – அது தப்புத்தாளமாக இருந்தால் கூட.

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்- ராசபக்சேயும், சிவசங்கர மேனனும், நாராயனணும் மட்டும்தான் இந்த ஈழப் போரை நடத்தினார்களா? அதற்குமேல் யாரும் இல்லையா? யாரையுமே விமர்சிக்கக்  கூடாதென்றால் உண்மைகளை எப்படி வெளியே எடுத்துச் சொல்வீர்கள்? மறைக்கப்படும் உண்மைகள் பேசப்படும் பொய்களை விட பெரும் கேடு விளைக்காதா?

மூன்று இலட்சம் ஈழத் தமிழர்களை வெளியே அனுமதிக்கக் கோரி யாரிடம் போவீர்கள்? ராசபக்சேவிடமா?

ராசபக்சே காலில் கூட விழத் தயார் என்று அருட்தந்தை ஜெகத் கஸ்பர் சொன்னது போலவா? மன்னிக்க வேண்டும், பெரியாரின் பேரர்கள் நாங்கள். எவன்  காலிலும் விழுவதற்குத் தயாராயில்லை. அதுவும் இனப் பகைவனின் காலில்.

இந்திய அரசிடமா? ஐ.நா. வில் இலங்கை அரசைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றி வெளிப்படையாகவே நாங்கள் சிங்களர் பக்கம்தான் என்று உறுதி செய்த மலையாள பார்ப்பன பனியா கூட்டத்திடமா?

மூன்று மணி நேர உண்ணாநிலைப் போராட்டத்தால் ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த (????…) கலைஞரின் அடிமைத் தமிழக அரசிடமா? இல்லை,  நீங்கள் சமாதானமாகப் போக விரும்பும் ஓட்டுப் பொறுக்கி அரசியல் சக்திகளிடமா?

நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள், நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப் பட்ட அதே நாளில் இவர்களெல்லாம் வெடிவெடித்து தேர்தல் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

கெஞ்சிக் கேட்டால் இவர்களெல்லாம் உதவி விடப்போகிறார்களா என்ன ? இவர்களை நம்பி நம்பிக் கெட்டதெல்லாம் போதாதா?

கெஞ்சிக்  கேட்பதினாலேயோ, சமாதானமாகப் போவதாலேயோ  அடிமைகள் விடுதலையடைந்ததாய் எப்போதாவது வரலாறு சொல்லியிருக்கிறதா? போராட்டமின்றி என்றாவது உரிமைகள் கிடைத்திருக்கின்றனவா?

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் மிகப் பெரிய சாதனை 30 ஆண்டுகளாக விடுதலைப் போர் நடத்தியதா?.. இறையாண்மையுள்ள தனி ஈழ அரசைக் கட்டியதா?..ஏழு நாட்டுப் படைகளை எதிர்த்துப் போர் நடத்தியதா?.. இவை
எதுவுமில்லை,

புறநானூற்று வீரம் மறந்து, அடிமைப்பட்டு, புழுவாய்க்கிடந்த  தமிழ்ச் சமூகத்தை வீரம்செறிந்த ஒரு கரும்புலிச் சமுதாயமாக மாற்றியதுதான். 

அடிமை மனப்பாண்மை விலங்கணிந்து கிடந்த தமிழினத்தை (பெண்கள் உட்பட) மறம் மிக்க இனமாக மாற்றியமைத்ததுதான். (இது கஸ்பர் சொன்னதுதான்). அதைப்போன்ற ஒரு வீரமிக்க சமுதாயத்தை தமிழ்நாட்டிலும் உருவாக்குவதுதான் நம்  கடமையேயொழிய ஒப்பாரிப் புலம்பலாய் அழுவதல்ல.

இங்கு வீரமிக்க இளைஞர் படை இருக்கிறது. இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற அய்யா காசி ஆனந்தனின் வரிகளுக்கேற்ப தமிழன் நெருப்பாய்தான் இருக்கிறான். மேலே சாம்பல் மூடியிருக்கிறது. அவ்வளவுதான். ஜெகத் கஸ்பரிடம் சொல்லுங்கள். அவர் நம்பும் இயேசு பிரான் கூட இப்போது உயிர்த்தெழுந்தால் ஒன்றரை இலட்சம் பேரைக் கொன்று குவித்த  பாவிகளுக்கு எந்த பாவமன்னிப்பும் கொடுக்க மாட்டார். வதை முகாமிலிருக்கும் மக்களைக் காப்பாற்ற யாரிடமும் கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டார். மாறாக அவரும் ஒரு கரும்புலியாய் கருவியேந்திப் போராடியிருப்பார்.

துரோகிகளின் இரத்தக்கறை படிந்த கரங்களை நம் கண்ணீர் கொண்டு கழுவ அனுமதிப்பதா? கண்ணீர் விடுவதை நம் அரசியல் முதலைகளிடமே விட்டு விடுங்கள். நமக்கு வேறு களம்  காத்திருக்கிறது.

இளைஞர்கள் களமாடினோம் என்று பேசிக் கொண்டிருந்தார்களே, தேர்தல் பரப்புரை செய்ததைத்தான் அப்படிச் சொன்னார்களா? அப்போது புலிகள் ஈழத்தில் களமாடியதை என்னவென்று அழைப்பது? காங்கிரசை தோற்கடித்த இளைஞர்களின் உழைப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனாலும் இந்த வார்த்தை விளையாட்டுகள் எல்லாம் கட்சிக் காரர்களே வைத்துக் கொள்ளட்டும். நமக்கு வேறு  வேலையிருக்கிறது.

தமிழீழ எதிர்ப்பாளர்களை விட தமிழீழ ஆதரவாளர்களால்தான் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் வலுவிழந்து போயின என்று ஒட்டு மொத்தமாகக் குற்றம் சாட்டாதீர்கள். ஆதரவாய் இருந்தவர்கள் வேறு, ஆதரவாய் நடித்தவர்கள் வேறு.

கீழே கிடக்கும் வரை சிவப்பு, வெள்ளை, பச்சைத் துணிகள். சேர்த்துத் தைத்தால் அது நம் மரியாதைக்குரிய தேசியக்கொடி என்று விளக்கினீர்களே. நம்
  இனத்தைக் கொன்று குவிக்க ஆள், ஆயுத, நிதி கொடுத்த இந்த தேசத்தின் மீதே நமக்கு மரியாதை இல்லையே, தேசியக்கொடி மீதா மரியாதை வந்து விடப் போகிறது. ( இதுவும் உங்களின் பேச்சுதான்- சிறிது காலத்துக்கு முன்). வேண்டாம் தோழர், விட்டு விடுங்கள், இந்த திடீர் தேசியவாதி வேடம் உங்களுக்குப் பொருத்தமாயில்லை. அவனவன் கோபத்தில் தேசியக்கொடியை எரித்துவிட்டு சிறையிலிருக்கிறான்-  கொடியை மீண்டும் ஏற்றச் சொன்னதால் பிணை கூட மறுத்து விட்டு.

தவறு யார் செய்தாலும் அது தவறுதான். நம் சொந்த தேசமானாலும் கூடத்தான்.

எக்காரணம் கொண்டும் வீரத்தை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். வீரமிழந்த எந்த உயிரும் வாழ்விழந்து போய்விடும்.

உறுமும் வரைதான் புலி, ஊமையானால் அது வீண். படமெடுத்தால்தான் நாகம், இல்லையேல் அது வெறும் புழு.  கருவியெடுக்கத் தயாராய்  துடிப்புள்ள இளைஞர்கள் இன்று அடையாளம் தேடி உங்களிடம் வந்திருக்கிறார்கள். கருவி ஏந்தாவிட்டாலும் பரவாயில்லை, காலில் விழ வைத்து விடாதீர்கள். வீரம் விளைக்கும் மண்ணின் வித்துக்களை நீர்த்துப் போக வைத்து விடாதீர்கள்.

நாம் தமிழர்.. சரி ஆனால் நமது வழி என்ன?

நம் பிரச்சினைகள் அழுதால் தீராது, அடித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். நீங்கள்  அனுசரிக்க நினைக்கும்
அரசியல் கட்சிகளால் எதுவும் நடக்காது.

தமிழர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஆளுயர மேடை, 50 அடி பதாகைகள், வீடியோ திரைகள், சவுக்குக் கட்டை மறிப்புகள் அல்ல, தெருமுனையில் தரையில் நின்று கூட உண்மையை உரத்த குரலில் முழங்க வேண்டுமென்பதுதான். நீங்கள் முதலில் உங்கள் வேலியை அறுத்தெறிந்து விட்டு வெளியே வாருங்கள்.

சீமான் – தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு முன்

 சீமான் – தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு பின்

எங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரிகிறது. கண்ணாடி முன் நின்று பாருங்கள், உங்களுக்குத் தெரிகிறதா?

Advertisements