mk1

 

 

உயிராயுதம்.

 

எமதருமை முத்துக்குமரா,

தமிழ் மாலையிலிருந்து உதிர்ந்த நல் முத்தே.

 

நாங்களெல்லாம்

இருந்து சாதிக்கத் துடித்ததை

நீ

இறந்து சாதித்துப் போயிருக்கிறாய்.

 

நாங்கள் திட்டமிட்ட பல கொலைகளைப்

படித்திருக்கிறோம்,

ஆனால் திட்டமிட்ட ஒரு தியாகத்தை

இப்போதுதான் பார்க்கிறோம்.

 

நெருப்பு உருக்கிய போதும்

நிறம் மாற்றா மாணிக்கமே,

 

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்,

கேள்விப்படிருக்கிறோம்.

முத்து சுட்டாலும் திண்மை தரும்,

பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

 

வாழ்ந்த போது வேண்டுமானால்

சாமானியனாய் இருந்திருக்கலாம்,

இனி நீ

சரித்திர நாயகன்.

 

அரைப் புள்ளி அல்ல நீ

தமிழகம் தான்டிப் போக முடியாத

முக்கியப் புள்ளி.

தமிழினத்தின் அவலத்திற்கு

முற்றுப் புள்ளி.

 

இந்த மண்ணில் பலர்

வந்தார்கள். போனார்கள்.

சிலர் மட்டுமே தமிழாய் வந்தார்கள்,

தமிழுக்காய் போனார்கள்.

 

நடராசன், தாளமுத்து, சின்னச்சாமி, அப்துல் ரவுப்..

அவர்கள் வரிசையில் அடுத்ததாய் நீ..

 

தமிழ்த் தேசிய வரலாற்றில் இனி

நீயும் ஒரு மைல் கல்.

 

தீ எழுதிய ஓவியமே,

இனி நீயும் எம் தேசிய கீதம்..

 

இவ்வளவு சிந்தனை உள்ள நீ

இருந்திருக்க வேண்டும்,

சிறந்திருக்க வேன்டும்.

உன்னைப் போல் உண்மை, உணர்வுத் தமிழர் தான்

தற்போதைய அவசரத் தேவை.

 

நீ தானடா மாவீரன்..

நான்கு பக்கங்களில்

நீ எழுதிய

மரண வாக்குமூலம் தான்

இந்த மண்ணின் வாக்குமூலம்..

 

இங்கு மிக அதிகமாய் படியெடுக்கபட்ட பக்கங்களுக்குச் சொந்தக்காரன் நீ.

மிக அதிகமான மக்களின் கண்ணீருக்கும் சொந்தக்காரன் நீ.

 

இன்று எல்லோர் கையிலும் உன் வாக்கு மூலம்,

எல்லோர் வாக்கிலும் உன் எழுத்து நாதம்.

 

உன்னைப் பார்த்தால் எங்களுக்கு பொறாமையாக இருக்கிறது.

 

ஒரு லட்சம் தட்டிகளும், சாலையோர விளக்குகளும், வரவேற்பு வளைவுகளும்,

பிரியாணி,  முட்டையுடன் எங்களுர்க்காரர்கள் எளிமையாய் பிறந்தநாள் கொண்டாடியிருக்க 

 

நீ மட்டும்

எவ்வளவு ஆடம்பரமாய் ஒரு இறந்த நாள் கொண்டாடிப் போயிருக்கிறாய்.

 

ஆறரை கோடி கண்ணீர்த்துளிகளுடன்,

 ஏழரை மணி நேர இறுதி ஊர்வலத்துடன்,

 எல்லா நாட்டு தமிழர்களின் கனத்த இதயங்களுடன்,

 

பகத்சிங்கின் மறு பதிப்பே

 

நீ விழுந்தாய், தமிழகம் எழுந்தது

நீ எரிந்தாய், இந்தியம் கருகியது

 

சாவைக் கூட முறையாய் ஆவணப் படுத்தி விட்டு செத்தவன் நீ மட்டும் தான்.

சு.சாமிக்களும், சோ க்களும் பேசுவார்கள் என்று முன்னாலேயே ஊகித்திருக்கிறாய்.

 

அமெரிக்கன் புஷ்சை

செருப்பால் அடித்து அனுப்பி வைத்தார்கள்

 

ஆம். அடுத்த மண் மீது படையெடுக்கும் அத்தனை பேருக்கும் அதே கதிதான்.

 

இவர்களை

செருப்பால் அடித்தால் செருப்புக்கு அசிங்கமென்று நெருப்பால் அடித்தாயா

என் தோழா

நிரந்தரமாய் வலிக்குமென்று.

 

நெருப்பாய் எரிந்தது நீயல்ல..

இந்த அரிதார வேடதாரிகளின்

அதிகாரங்கள்தான்..

 

சாதாரணமாய் உப்புப்போட்டு சோறு உண்ணும் எங்களாலேயே ஈழ வேதனையைச்

செரிக்க முடியவில்லை,

நீயோ

உப்புக்காய்ச்சும் ஊருக்குச் சொந்தக்காரன்,

எப்படிச் செரிப்பாய்,,

அதுதான்

எரிந்தாய் நெருப்பாய்.

 

இந்தியத்தை

தோலுரித்துக் காட்டிய என் தோழனே

உன் துன்பங்கள் தான்

தமிழரின் துயர் துடைக்கும் வாட்கள்..

 

சிங்களனுக்கும் இரங்கச் சொன்ன
இனமானச் சிங்கமே..

நீ காரி உமிழ்ந்த எச்சிலில் நம் எதிரிகள் நிர்வாணப்பட்டுப் போனார்கள்.

 

கதறிய எம் ஒலங்கள்

இந்தச் செவிடர்கள் காதில் ஏறாத போது

மரண அடியாய் அடித்தவனே..

இனி இந்த ஒற்றைப் பெயருக்கு

உலகமே திரும்பிப் பார்க்கும்.

 

உனக்கு

பிணப் பரிசோதனை செய்பவர்களையே

போராளிகளாய் மாறச் சொன்ன

புதிய சே குவேரா நீ..

 

உன்  உடலத்தையே துருப்பாய் மாற்றி

உன் உயிரை தமிழினத்துக்கே

உயிலாய் எழுதிக் கொடுத்தவனே..

அந்தக் கோரிக்கைகள்தான்

இனி எம் உரிமை முழக்கங்கள்.

 

போராட்டம் முடியும்வரை

புதைக்க வேண்டாம்

என்றவனே..

கவலைப்படாதே!

எப்போதுமே புரட்சிக்காரர்கள்

விதைக்கத்தான் படுகிறார்கள்.

 

மரணம் எல்லோருக்கும் முடிவு மட்டும் தான்.

இங்கோ நீ தொடங்கி வைத்து போயிருக்கிறாய்

 

கற்பூரக் காட்டில் விழுந்த

கனல் நீ

ஒரு மரம் எரிவதை

காடு என்ன பார்த்துக் கொண்டு சும்மாவா இருக்கும்

 

 

 

உனக்காய் நாங்கள் அழப்போவதில்லை போர்க்களத்திலே ஒப்பாரி எதற்கு

 

புறநானூற்று மறவனே..

இதோ உன் இலட்சியம் வென்றெடுக்க

புறப்பட்டோம் வேகமாய்..

 

நீ கேட்டபடி

மாணவர்கள் மட்டுமல்ல,

மனிதராய் இருப்பவர்கள் அத்தனை பேரும்

அந்த இலக்கை நோக்கித்தான்..

 

உன் கருகிய உடலத்தின்

கனவுகள் கலைவதற்கு

இனி விடமாட்டோம்!

 

இனி இந்தத் தமிழினம்

தம் பிள்ளைகளுக்கு

“முத்துக் குமரன்” என்றே

உன் பெயர் சூட்டும்..

 

உயிர்ப் போர் வீரனே..

 

உன்னை ஏன்

கடலில் கரைத்தோம்  தெரியுமா,

உடனே ஈழம் போ என்றுதான்

 

போ என் தோழா போ,

போய் ஓயாத அலைகளாய் வெற்றி வருமென

ஓங்கிச் சொல் எம் உறவுகளிடம்.

 

உயிரை விட்டாலும்

உன்னை விட முடியுமா என்ன?

 

ஒன்று நிச்சயம்

 

நீ மூட்டிய நெருப்பில்

இனி

இந்த  நாடே பற்றி எரியும்..

அந்த ஒளியில்

“தமிழீழம்” விடியும்!!

“தமிழினம்” வெல்லும்!!!

 

  சு. தளபதி, மதுரை.

 

 

 

mk213

 

 

Advertisements