எழுந்திருசு. தளபதி,மதுரை.


உங்கள் சட்டியில்தான் ஒன்றும் இல்லையே
உங்களுக்கு எதற்கு அகப்பை.
கவிக்கோ. அப்துல் ரகுமான்.


கஞ்சி குடிப்பதற்கிலார்அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்என்பது கவிஞர் கூற்று.


கஞ்சி குடிப்பதற்கில்லையே என்ற அறிவு வந்து விட்டாலே அதன் காரணிகளைத் தேட ஆரம்பித்து விடுவான் எந்த மனிதனும். அந்த அறிவை அவனுக்குத் தராமல், வேறு எங்கிருந்தும் கிடைக்காமல் பார்த்துக் கொள்வதே அவர்களின் அடிமைத்தனத்தை உபயோகித்துக் கொள்பவர்களின் மேட்டிமை வாதிகளின் புத்திசாலித் தனம்.


தனது தாழ்வு பற்றி எந்த ஒரு மனிதனுக்கும், குழுவுக்கும், இனத்திற்கும் புரிதல் வந்து விட்டாலே அந்த இனம் முன்னேற்றத்திற்கான படிகளில் ஏறத் தொடங்கிவிட்டது என்பது உண்மை. அந்த வகையில் நம் தமிழினம் இழந்தவை எவை என்ற புரிதலை நோக்கிய பயணமே இச்சிறு கட்டுரை.
இழந்தவை கோடி பெறும் என்றாலும் மீட்டெடுக்கப்பட வேண்டியவை எவை என அடையாளம் காண இழந்தவற்றை ஒரு முறை நாம் திரும்பிப் பார்த்துத் தான் தீர வேண்டியிருக்கிறது. அந்த வகையில் முதலில் நாம் பார்ப்பது வரலாறு.


வரலாறு


நாம் படிக்கும் வரலாறு என்ன சொல்கிறது. தமிழர் வரலாறை மூன்று வரிகளில் ஏன் மூன்றே சொற்களில் அடக்கி விடுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள். சேரர், சோழர், பாண்டியர் அல்லது சங்ககாலம், இருண்டகாலம், நிகழ்காலம். எந்த வரலாற்று ஆசிரியர்களும் தமிழகத்தின் வரலாற்றை தனி ஒரு இனத்தின் வரலாறாக அணுகவில்லை அல்லது அணுக இயலவில்லை. காரணம் இந்திய தேசியம். இந்திய தேசிய வரலாற்றைப் பற்றிக் கூறும் பொழுது அல்லது இந்தியாவின் வரலாற்றைக் கூறும் பொழுது அதன் சிறு பகுதியாகவே தமிழக வரலாற்றைச் சுருக்கி விடுகிறார்கள்.
இதே வரலாற்று ஆசிரியர்கள் மொகஞ்சதாரோ, ஹரப்பாவை கண்டுபிடிக்கும் முன்னால், இந்தியாவின் வடக்கே இருந்தவர்கள் ஆரியர்கள், தெற்கே இருந்தவர்கள் திராவிடர்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்கள் திராவிட நாகரிகங்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின் அவர்களே, வடக்கே ஆரியர்கள் படையெடுப்பிற்குப் பின் திராவிடர்கள் தெற்கே தள்ளப்பட்டனர் என்று கூறுகின்றனர்.
மிகப் பெரிய வருத்தமளிக்கும் விடயம் என்னவென்றால் ஒரு இனத்தின் வரலாறை அறிவதற்கு சரியான ஆவணங்கள் கிடைக்கவில்லை. கிடைக்கின்ற ஆவணங்களும் சமயம், கடவுள், கோவில் சார்ந்தவையாகவே இருக்கின்றன என்பது தான். வரும் சந்ததிக்கு எதை விட்டுப் போக வேண்டும் என்பதிலேயே தமிழனுக்கு சரியான அறிவுறுத்தல்கள் இல்லை, அல்லது இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள் மேட்டிமை வாதிகள்.


நாம் தனி ஒரு இனம். இன்று இந்தியா என்று அழைக்கப்படும் இந்த பரந்த நிலமெங்கும் வாழ்ந்து வந்த குடி நம்முடையது. கைபர், போலன் கணவாய் வழியாக உள்ளே வந்த ஆரியர்கள் முதலில் கைப்பற்றியது நம் நிலமே. இது இன்றைய தமிழனுக்கு ஒத்துக் கொள்வதற்கே அய்யமான, கடினமான ஒரு உண்மை.
நமது உண்மையான வரலாற்றின் ஆதாரங்கள் இன்னும் மண்ணுக்குள் இருக்கின்றன. ஆனால் மக்கவில்லை. நமது வரலாறை நாம் முதலில் மீட்டெடுக்க வேண்டும் (காவிரிப் பூம்பட்டினத்தில் இதற்கான முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன).
மொகஞ்சதாரோ, ஹரப்பா காலத்திலிருந்து, சங்க காலம் பிற்கால மன்னர்கள் காலம் வரை நம்முடைய உண்மையான வரலாறு வெளியில் வந்து விட்டால் இன்று பார்ப்பனியம் சொல்வது போல்ஹமாரா இந்துஸ்தான்என்ற கோஷங்கள் எவ்வளவு போலியானவை யாருடைய நாட்டில் யார் சொந்தம் கொண்டாடுவது என்பவை பற்றிய தெளிவான புரிதல்கள் நமக்குக் கிடைத்து விடும்.


நாடு


வரலாறைப் பற்றிப் பேசும் பொழுதே தன்னிச்சையாக நாம் நாட்டைப் பற்றியும் பேசத் தலைப்பட்டு விடுகிறோம்.  ‘வடவேங்கடம் முதல் தென்குமரிவரை என்று பின்னர் அறியப்பட்ட தமிழ்நாட்டின் எல்லை (இப்போது அது கூட இல்லை) இந்திய அளவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கித் தள்ளப்பட்டுத்தான் இன்றைய நிலையை அடைந்திருக்கிறது.  (ஆதியில் பார்ப்பனர்கள் குடியிருந்த இடம் தான் சேரி எனப்பட்டது என அறிக).
ஆரியர் படையெடுப்புகள் இதற்கு முக்கிய காரணியாகின்றன. ஆரியர்கள் தனது போர் மற்றும் கலாச்சாரப் படையெடுப்பு முலமும் நம் இனத்தின் மீதான வெற்றியை நிலை நிறுத்திக் கொண்டு நமது நிலம் இவ்வளவுதான் என்ற முடிவுக்கு நம்மைக் கொண்டு வந்துள்ளனர். நாம் இழந்த நிலம் இவ்வளவு என்பதை உணராமல் இருக்க அவர்கள் நமக்குக் கொடுத்த அபின் தான் மதம்.


கடவுள்கள்


ஒரு இனத்தை வெல்வதற்கு போர் மட்டும் பயன்படாது, கலாச்சார அழிப்பும், அதற்கு மேல் அவர்களைப் பயமுறுத்தும் காரணியும் ஒன்று வேண்டும் என்பதற்காகவே ஆரியர்கள் படைத்தது தான் மதம்.


ஆதியில் தமிழன் மட்டுமல்ல எந்த ஒரு மனிதனும் இயல்பால் எதைப் பார்த்து பயந்தானோ அல்லது பிரமித்தானோ அதை தெய்வமாக வணங்கியிருக்க வேண்டும். இது தான் பாரம்பரியம்.


தமிழ் நிலத்திலே குறிஞ்சியிலே முருகனையும் (ஒரு சாயலில் ஒருவன் நிற்பது போல் தோற்றம் தரும் மலை முகடு), முல்லையிலே காட்டில் உள்ள கரிய இருட்டையும், மருதத்திலே சிவனையும், நெய்தலிலே அலையினையும் (அலை போல படுத்துறங்கும் மால் எனும் தெய்வத்தையும்), பாலையிலே காளி, பெண் தெய்வ வழிபாடு மற்றும் நடுகல் நட்டு முன்னோர்கள் வழிபாடு என்று இருந்த வழிபாட்டு முறை, ஆரியர்கள் வந்த பின் ஒட்டகம் மூக்கை நுழைப்பது போல் உள்ளே நுழைவதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட முதன்மையான ஆயுதம் கடவுள்கள்.நீங்கள் வணங்குபவர்களே எங்களின் கடவுள்களும். உங்கள் சிவன் தான் எங்கள் சிவலிங்கம். அவன் இதோ கைலாயத்தில் தான் இருககின்றான் (நடுவில் நம் ஆட்கள் என்ன தான் தென்னாடுடைய சிவனே போற்றி என்றாலும் வாதம் எடுபடவில்லை). அவன் மனைவிதான் பார்வதி, அவளே காளி, மாலும் விட்டுணுவும் ஒன்றே. அவனே கார்மேக வண்ணன், பள்ளி கொண்ட பெருமாள். சிவனின் பிள்ளைதான் முருகன். அவனே சுப்பிரமணியன் கார்த்திகேயன், சரவணன் (உண்மையில் ஆன்மீக வாதிகளே தெய்வானையை மணந்த சுப்பிரமணியன் வேறு, வள்ளியை மணந்த முருகன் வேறு என்பதை ஒத்துக் கொள்கிறார்கள்). விநாயகர் வழிபாடு எப்படி வந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாமெல்லாம் ஒரே தெய்வங்களைக் கும்பிடுகிறவர்கள். நாமெல்லாம் ஒன்று என்று சொல்லி ஒண்ட வந்த இடத்திலேடுருவ ஆரம்பிக்கின்றனர்.
நமது கடவுள்கள்என்று சொன்னவர்கள் சிறிது காலம் கழித்து நாங்களே கடவுள்கள் (பூதேவர்கள்) என்று சொன்னார்கள். அதையும் நம்மவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அது வரையிலும் மதம் என்றால் என்னவென்றே தெரியாதவன் சைவம் என்றோ வைணவம் என்றோ வாழ்க்கை முறைக்கும் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு கட்டுக்குள் தமிழன் அடிபணிய ஆரம்பித்து விடுகிறான். அதன் முழுக்காரணம் அவனது குழுத் தலைவர்கள் ஆரியர்களின் தந்திரங்களில் ஏமாந்ததும் ஆரியப் பெண்களிடம் சபலப்பட்டதும் தான் (இராவணன் உள்ளிட்ட சிலரும் இதற்கு விலக்கல்ல).
பிற்காலத்தில் இவற்றிலிருந்து மாறுபட்ட தத்துவங்களைத் தந்த பவுத்தமும், சமணமும் ஞானசம்பந்தர் வகையறாக்களால் கழுவேற்றி கொலை செய்யப்படுகின்றன.


தலைவர்களை ஏமாற்றி தனது சேரிகளை தக்க வைத்துக் கொண்ட ஆரியர்கள் அடுத்த தலைமுறைக்கு இதை எடுத்துப் போக நல்ல உபாயம் ஒன்று செய்கின்றனர் அதுவே சாதியம்.


சமத்துவம்


சாதியம் எந்த சமுகத்தில் உள்ளே நுழைகிறதோ அங்கே சமத்துவம் அடித்து நொறுக்கப்பட்டு விடுகிறது. நால்வகை வருணங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மனு கோலோச்ச ஆரம்பிக்கின்றான். சமத்துவ சமுதாயத்தில் கட்டுகள் விரிசலடைகின்றன. இந்த விரிசலில் பார்ப்பனியம் தங்கு தடையின்றி வளர ஆரம்பிக்கின்றது. ஏழை ஏழையாகவே இருக்கும்படி வற்புறுத்தப்படுகிறான். அடிமை அடிமையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படுகிறான். சாதிக் கட்டுப்பாடுகள் இதை செவ்வனே செய்கின்றன. (சமுதாயம் என்பதன் பொருளே இன்று சாதி என்று மாறிவிட்டதே) தலைவிதி என்ற கோட்பாடு அறிமுகப்படுத்தப்படுகின்றது. மூட நம்பிக்கைகள் வளர்க்கப்படுகின்றன. அதற்குள் மன்னர்களும் விதி விலக்கல்ல.
கல்வி இழந்த தமிழ்ச்சமுதாயம் தமக்குள், சமத்துவத்தை இழந்து சுக்கலாக சிதறுகிறது. பிரித்தாளும் சுழ்ச்சி வெல்கிறது. இந்த நேரத்தில் பார்ப்பனச் சேரி அக்ரஹாரமாகிறது. ஆதிதமிழன் சேரியில் குடியேறுகிறான்.
இங்கு நாம் பெரும்பான்மையினர். நம்மைச் சாதிய வேறுபாடுகள் சிதறடித்ததால் நம்மில் சிலர், (முக்கியமாக உழைப்போர்) ஒடுக்கப்பட்டோர் ஆயினர். அவர்கள் வேறு மதங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
பார்ப்பனியம் இன்று அவர்களை அடையாளப்படுத்தும் பெயர் சிறுபான்மையினர். நம்மை மதத்தின் பெயரால் கூட்டுச் சேர்க்கும் பார்ப்பனியம் தம்மை பெரும்பான்மையினர் என்றும் மண்ணின் மைந்தர்களை சிறுபான்மையினர் என்றும் அடையாளப் படுத்துகிறது. இதற்கு அரசுகளும் உடந்தையாகி நிற்கின்றனர்.


ஆண்களின் கதியே இவ்வாறிருக்க பெண்களின் நிலையோ படு மோசம். அவர்கள் மனித சாதியாகவே மதிக்கப்படாமல் பொருள்களின் வரிசையில் கொண்டு வரப்பட்டனர். பின்னர் முகமதியர்கள் தம் பெண்களைப் பாதுகாப்பதாக எண்ணிக் கொண்டு சொந்த ஆதிக்கத்திற்கு அவர்களை உட்படுத்தி விட்டனர்.
முகமதியர்களின் ஆட்சியில் அவர்களுடைய வாழ்க்கை முறை ஏறக்குறைய எல்லாச் சமுதாய பெண்களையும் பாதித்தது எனலாம். அந்த வகையில் தாம் செய்த எல்லா தவறுகளுக்கும் ஒரே ஒரு நன்மையாக ஆங்கிலேயர்கள் செய்த ஒன்று சாதிய வீச்சை சற்றே குறைத்தது.


பண்டிகைகள்


தமிழனின் வாழ்வு என்று மதத்தோடும், சாதியோடும் சம்பந்தப் படுத்தப்பட்டதோ அன்றே அவன் கொண்டாடும் பண்டிகைகளும் அதன் தொடர்பான மற்ற நடவடிக்கைளும் மதச்சாயம் பூசிக் கொண்டன.
விவசாய திருநாளான பொங்கல் (மாட்டுப்பொங்கல்) சங்கராந்தி ஆயிற்று. உழைப்பாளர் தினம் ஆயுத பூசை, சரஸ்வதி பூசையாயிற்று, விதைத் திருநாள் ஆடிப் பெருநாளாயிற்று, தமிழர் திருநாட்களை விட புராணப் புளுகுகளை அதிகப்படுத்தி பரப்பிய பார்ப்பனியம், புராணத் திருநாட்களான தீபாவளியை முதன்மைப்படுத்தியது.
தமிழன் பட்டாசின் ஒளியிலும், சத்தத்திலும் தன் தனித்தன்மையை மறந்து போனான். பையப் பைய தமிழனின் இல்லத்தை முழுமையும் பார்ப்பனிய பண்டிகைகளான கார்த்திகை, நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி போன்றவை கைப்பற்றி விட்டன.
இதைவிட மிக முக்கியம் சடங்குகள் என்ற பெயரில் திதி, பூப்பு நீராடுதல், புண்ணிய தானம் என்றவற்றிலும், மிக முதன்மையாக தமிழர் திருமணத்திலும் பார்ப்பனியத்தின் வீச்சு பன்மடங்காகியது.


கலை


கடவுள்கள் நிறம் மாற்றப்பட்டனர். பண்டிகைகள் நிறம் மாற்றப்பட்டன. சடங்குகள் உட்புகுந்தன, கோவில்கள் பார்ப்பனிய மயமாகின. அதைத் தொடர்ந்து தமிழ்க் கலைகளும் பார்ப்பன சாயம் பூசப்பட்டன. காலகாலமாக தமிழர்கள் ஆடிவந்த சதிர் பரதமாக மாற்றப்பட்டது. தமிழிசை தடுக்கப்பட்டது, சகோதர மொழியான தெலுங்கில் கீர்த்தனைகள் (பாடல்கள்) இயற்றப்பட்டன. இசை சங்கீதமானது, அதிலும் கர்நாடக சங்கீதமானது. அவை தெரிந்தவர்களே உண்மையான கலைஞர்கள் என்று போற்றப்பட்டனர்.
தமிழ் மன்னர்கள் இப்படிப்பட்டவர்களுக்குத் தான் பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தனர்.நிலவுடமை ஆண்டைகளுக்கும், கோயில்களுக்கும் சொந்தமானது. இதிலும் சிந்தாமல், சிதறாமல் முழுமையாக வெற்றி கொள்ள நினைத்த பார்ப்பனியம் சதிரில் சாதியத்தைப் புகுத்தியது. தேவரடியாள்கள் கோவிலில் ஆடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களை ஆண்டை வர்க்கம் எல்லாவிதத்திலும் உபயோகப்படுத்த ஆரம்பித்தது.
மானமுள்ள தமிழர்கள் கலையை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர். அதுதானே அவர்களுக்கு வேண்டும். அதுதானே அவர்களின் வெற்றி. தமிழர்களின் கலைகள் ஒதுக்கப்பட்டன. ஆதித்தமிழர்கள் நாட்டுபுறத்தார்கள் ஆகியது போல கலைகளும் நாட்டுப்புறக் கலைகளாக ஆகிப்போனது. இதே போன்று சிதறடிக்கப்பட்ட மதிப்புக் குறைக்கப்பட்ட இன்னொரு பெரிய விடயம் மொழியாகும்.


கல்வி


மொகஞ்சதாரோ, ஹரப்பா காலத்தில் முழுக்க, முழுக்க கல்வி கற்றிருந்த எழுதப்படிக்க (100%) தெரிந்திருந்த நமது குடி மேட்டிமை வாதிகளாலும் (பூஷ்வா) ஆரியர்களாலும் அழித்தெழிக்கப்படுகிறது. கல்வி மறுக்கப்பட்டால் தான் அவனை அடிமையாக்க முடியும். அடிமைகள் நல்ல அடிமைகளாக இருந்தால் தான் தலைவன் கோலோச்ச முடியும் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டார்கள். அரசன் யாராக இருந்தாலும் அவனுக்கு யோசனை சொல்ல (எப்போதும் எதிரிக்கு காட்டிக் கொடுக்க), ஒரு பிராமணன் தான் மந்திரியாகவோ, ராஜகுருவாகவோ செயல்படத் தொடங்கினான்.
கல்வி மறுக்கப்பட்டால் அறிவு மறுக்கப்படுகிறது. அறியாமை கோலாச்ச ஆரம்பித்து விடுகிறது. சோமபானங்களும் சுரா பானங்களும் ஆரணங்குகளின் அணிவகுப்பும் மன்னர்களுக்குப் போதுமானதாகி விடுகிறது. மக்களுக்கோ துன்பம், வறுமை மட்டுமே. பார்ப்பனியம் லேசாக முனை மழுங்கிய பொழுது, முகலாயர்களும், முகலாயர்கள் தளர்ச்சியடைந்த பொழுது ஆங்கிலேயர்களும், இந்த அடிமைத்தனம் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.
இன்றுவரை குமாஸ்தாக்களை உருவாக்கி வரும் மெக்காலே கல்வி முறையிலிருந்து நம் சமுகம் விடுதலையடைய முடியவில்லை என்பதும், கல்வி வியாபாரிகள் அதை வளர்த்து விடுகிறார்கள் என்பதுமே திண்ணம். யாரும் நம்மை நோக்கிக் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்கு அவர்களுக்கு இன்னுமொரு ஆயுதம் தேவைப்படுகிறது, அது தான் மொழி.


மொழி


ஒரு இனத்தை கருவறுக்க வேண்டுமெனில் முதலில் அவர்களது மொழியைக் கொன்று விடுங்கள். பின் அந்த இனம் தானே அழிந்து விடும் என்பது வரலாறு.
பண்டைய நாகரிகங்களில் உயர்தனிச் செம்மொழிகள் என்ற பட்டியலில் வரும் மொழிகளில் இன்னும் உயிரோடிருக்கும் (மக்களால் பேசப்படும்) ஒரே மொழி தமிழ் மட்டுமே ஆகும்.
தமிழ் முதலில் தமிழி என்று வழங்கப்பட்டது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். தமிழி மொழியில் ஏகப்பட்ட வரைவுகளும், கல் வெட்டுக்களும், ஆவணங்களும் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
ஆனால் பலகாலம் இந்த பார்ப்பனியம், சமஸ்கிருதமே பழமையானது அதிலிருந்து பிரிந்த பல மொழிகளுள் ஒன்றே தமிழ் என்று சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் உண்மை என்னவென்றால் தமிழிதான் இந்தியாவின் மிகப் பழமையான மொழி. பின் ஆரியர் படையெடுப்புக் காலத்தில் பாகத மொழி பயன்பாட்டிற்கு வந்தது. இதுவே உண்மையான வடமொழியாகும்.  (பலர் நினைப்பது போல் வடமொழி என்பது சமஸ்கிருதத்தை குறிப்பதல்ல).
அப்போதைய மன்னர்களின் நாணயங்களிலும், செப்பேடுகளிலும் தமிழியும் பாகதமும் ஆகிய இரு மொழிகளும் காணப்பட்டன.
சமஸ்கிருதம் மந்திரங்கள் சொல்லவும், வழிபாட்டிற்குரிய வேதங்கள், புராணங்கள் இயற்றவும், புரோகிதர்களால் லிபி இல்லாத செவி மொழியாகவே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. பின்னர் அது பாகத மொழிகளின் வரிவடிவை (லிபி) கடன் வாங்கி எழுதப்பட்டிருக்கிறது.
பின் தமிழியிலிருந்து தமிழ், தெலுங்கு முதலான தென் மொழிகள் பாகத மற்றும் சமஸ்கிருத மொழிக் கலப்பின் காரணமாக பிரிந்திருக்கின்றன. மொழி வீழ்ச்சியில் சமஸ்கிருதம் பெரும்பங்கு ஆற்றியுள்ளது. சமஸ்கிருதம் தெரிந்த தமிழர்கள் மட்டுமே கல்வியாளர்கள் என்று பார்ப்பனியம் சொல்லிக் கொண்டது. இது பின்னர் மணிப்பிரவாள நடைவரை வந்து, பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் காலகட்டங்களில் தமிழ் மீட்டெடுக்கப்பட்டது.
தமிழ் மீட்டெடுக்கப்பட்டதை பொறுக்காத பார்ப்பனியம் அடுத்து எடுத்த ஆயுதம் தான் ஆங்கிலம்.


ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்திய காலத்தில் எப்பொழுதுமே ஆளும்வர்க்கத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்ட பார்ப்பனியம் அவர்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டது.


தமிழர்கள் மீண்டும் அடிமையானர்கள். காட்டிக் கொடுத்தும், காவடி எடுத்தும் வயிறு வளர்த்த கூட்டம் ஆங்கிலம் படித்தது, ஆங்கிலம் பேசியது, ஆங்கிலம் தெரிந்தவர்களே அறிவாளிகள் என்ற போதையை ஏற்படுத்தியது. அது இன்று வரை கல்வி விற்பனையாளர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது நாம் உணர்ந்த உண்மையே.
தமிழால் முடியாது என்பதை தமிழர்களே சொல்லுமளவிற்கு பார்ப்பனியம் அவர்களை பழக்கப்படுத்தி விட்டது.
தமிழர்கள் அறிவாளிகளாய் இருக்கிறார்கள். ஆனால் அந்த அறிவை தமிழிலே பிறருக்குத் தருவதில்லை. இது இந்த கணிணி யுகத்தில் சாதாரண நடைமுறை.


இந்தியா சுதந்திரமடைந்த பின் பனியாக்களும் பார்ப்பனியமும் கைகுலுக்கிக் கொண்டனர். இந்தியை ஆயுதமாக எடுத்தனர். ஆனால் அது வெற்றி பெறவில்லை. தந்தை பெரியார் தமிழ்ச் சமுதாயத்தைக் காத்து நின்றார். உள்நாட்டு ஆயுதம் காயப்படுத்த முடியாமல் காப்பாற்றிய கேடயமான ஆங்கிலம் முற்றிலும் நம்மை விழுங்க ஆரம்பித்தது.
மம்மி என்றும் டாடி என்றும் கூச்சமின்றி தமிழ்க் குழந்தைகள் அழைப்பதில் புளங்காகிதப்பட்டு போயினர் தமிழர்கள்.
பேசும் மொழியே இந்த நிலைமையில் என்றால், நம் இலக்கியங்களின் நிலைமை


இலக்கியங்கள்


மொழியைத் தின்ற ஆரியம், நம் இலக்கியங்களை வளரவிடாமல் வளமைப்படுத்த விடாமல் பார்த்துக் கொண்டது. எக்காலத்திலும் அழியாத வாழ்வியல் தத்துவங்களைத் தந்த திருக்குறளை விட சமயம் சார்ந்தவையே இலக்கியங்கள் என்றும், ஆரியப் பரப்புரைகளே இதிகாசங்கள் என்றும் கொண்டாடப்பட்டன.
கம்பன் போன்ற சிறந்த புலவர்கள் ஆரிய வாட்களுக்கு தமிழில் உறை() அணிவித்து மகிழ்ந்தார்கள்.
இளங்கோ கூட முற்பிறவி பயன், தலைவிதி என்றெல்லாம் பாட ஆரம்பித்தார்.
பெரியார் சொன்னது போல் மதமில்லாத, கடவுள்களைப் பாடாத இலக்கியங்கள் தமிழில் அரிதாயின.
இந்த விடயத்தில் இன்னும் பல காத துரப் போராட்டத்தை நாம் எதிநோக்க வேண்டியிருக்கிறது என்பது தான் நம்முன் நிற்கும் கசப்பான உண்மை.


ஆட்சி


தமிழர்கள் தம் சொந்த ஆட்சியின் கீழ் இருந்து நெடு நாட்கள் ஆகின்றன. நாட்கள் அல்ல நீண்ட வருடங்கள்நீண்ட யுகங்கள்.. திராவிட மன்னர்கள் ஆரியர் படையெடுப்பில் அழிந்து போனதும் ஆட்சி பீடத்தில் இன்று வரை தமிழ் எதிரிகளே மிக முக்கியமாக பார்ப்பனியமே அமர்ந்திருக்கிறது.
(
ரிக், சாம, அதர்வன, யசுர் வேதங்கள் ஆரிய படையெடுப்பைப் பற்றியவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) அதன் பின் ஆரிய மன்னர்கள் ஆட்சி செய்த பொழுது மனு தர்மமே ஆட்சி முறையானது. அதற்கு பின் யார் ஆட்சி செய்தாலும் அந்த தர்மத்தை மீறாமல் பார்த்துக் கொள்வதில் பார்ப்பனியம் இதுவரை வெற்றி பெற்றே வந்திருக்கிறது.
மன்னனை சண்டைக்கும், நாடு பிடிக்கவும், கோவில்கள் கட்டுவதற்குமே திசை விட்டுவிட்டு, பார்ப்பனியம் தன் சொந்த தர்மத்தை நிலை நிறுத்திக் கொண்டது. ஆண்டவர்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு அவர்களின் தர்மம் அதற்கு அனுமதிக்கவில்லை.
பின் முகலாயர்களும், டச்சுக்காரர்களும், போர்த்துக்கீசியர்களும், ஆங்கிலேயர்களும், இதை நன்கு புரிந்து கொண்டனர்.
மக்கள் எழுச்சியை, மக்கள் தம்மை புரிதலை கட்டுப்படுத்த அவர்களுக்கு, போர் மற்றும் கோவில்கள் துணை செய்தன. இன்றுவரை ஆளும்வர்க்கம் வேண்டுமானால் மாறலாம். ஆனால் ஆட்சி முறை அதே தான்.
எழுச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன, புரட்சிகள் முளையிலேயே நசுக்கப்படுகின்றன. இங்கு கேள்வி கேட்பதே தவறு எனச் சொல்லித் தரப்படுகின்றது. அது தான் இறையாண்மை என்று கட்டுப்படுத்தப்படுகின்றது.


அடையாளம்


தமிழரின் முதன்மையான அடையாளமான தமிழ்ப்பெயர்கள் வேறு மொழிப் பெயர்களில் அசிங்கப்படுத்தப்பட்டன. தமிழில் பெயர் வைத்தால் அது கேவலம் என்றும், பிற மொழி எழுத்துக்களை ஷ், ஸ் என்பவை மரியாதைக்குரிய பெயர்களாகவும் ஆகிப் போயின.
இதில் இஸ்லாமும், கிறித்தவமும் தங்கள் வீச்சுக்களை ஆழமாகப் பதிவு செய்தன. தமிழ் நாட்டில் தமிழில் பெயர் வைப்பதோ, தமிழில் பேசுவதோ அவமரியாதையாக சொல்லிக் கொடுக்கப்பட்டன.மீனே மீனைத் தின்பது போல் நம் எல்லையை இன்று நம் சகோதரர்களுடன் சண்டையிட்டு தீர்க்க வேண்டிய நிலைமையிலிருக்கிறோம்.நம் நீராதாரத்திற்கான உரிமையை போராடிப் பெற வேண்டிய நிலையிலிருக்கிறோம்.நம் சகோதரர்களை அழிக்க நம் ஆட்சியாளர்கள் நம் வரிப்பணத்தில் ஆயுதங்கள் அனுப்புகிறார்கள்.இன்று மிக முக்கியமாக தமிழ்நாட்டில் மிக மோசமான கெட்ட வார்த்தையாக சித்தரிக்கப்படும் வார்த்தைகள்தமிழ் வாழ்கஎன்பது தான்.தமிழ் வாழ்க என்றாலே தமிழ்த் தீவிரவாதியாக இருப்பான் என்று பொடா, தடா என்று ஏதாவது பாய்கிறது.
படித்தவர்கள் பயமுகிறார்கள், அறிவாளிகள் மௌனமாயிருக்கிறார்கள். நேற்றுவரை சோற்றுக்குப் போராடி வந்தவர்கள் மட்டுமே நம் உரிமைகளைப் பற்றி இன்று கவலைப்பட்டு வருகிறார்கள்.வேறு எந்த ஒரு இனமும் இவ்வளவு தாக்குதல்களையும், இவ்வளவு வேதனைகளையும் தாங்கி உயிர் பிழைத்திருந்ததாக வரலாறு சொல்லவில்லை. வேறு எந்த இனத்திற்கும் இவ்வளவு பகை இருந்ததில்லை. தமிழினத்திற்கு மட்டும் ஏன் இந்த நிலைமை. சுமேரிய நாகரிகங்கள் போன்று பல நாகரிகங்கள் அழிந்தே போய்விட்டன. ஆனால் இன்னும் அழியாமல் இருப்பது (அரை உயிரோடாவது) தமிழினம் ஒன்றே. அதன் காரணம் அதை உயிர்ப்பித்து காப்பாற்றி வந்த பாமர மக்கள்தான். படித்தவர்கள் கல்வியாளர்கள், அறிவாளிகள் எல்லாம் ஒதுங்கிக் கொண்டுவிட தமிழரின் அடையாத்தை இன்னும் பிடிவாதமாய் பிடித்துத் தொடங்கி நடைமுறையில் இருந்து வருவது முன்னேறியவர்களால்பாமரர்என்று அடையாளம் காட்டப்பட்ட ஒரு கூட்டமேயாகும்.
இவர்களை இன்னும் வளர்த்தெடுக்கப் பாடுபட்ட தந்தை பெரியாரின் பணி இங்கு முக்கியத்துவமாய் சொல்லப்பட வேண்டும். பெரியார் என்ன செய்தார், பெரிதாய் என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில்நீ இப்படிப் பேச சொல்லிக் கொடுத்ததே, நீ இப்படி பேச முடிவதே அவரால்தான்என்பது தான்.பார்ப்பனியம் திருந்திவிட்டது என்று நிலையை புரியாமல் சில தோழர்கள் பேசும் பொழுது கிழ் வரும் கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் :
1
எந்த பார்ப்பனனாவது தமிழில் பெயர் வைத்துள்ளானா?
2
பார்ப்பனியம் இன்று வரை என்றாவது உழைப்பை, உழைப்பவர்களை அங்கிகரித்திருக்கிறதா?
3.
என்றாவது தாம் வாங்கிப் பிழைக்கும் சமுதாயத்திற்கு விசுவாசமாய் இருந்திருக்கிறார்களா?
பதில்,  இல்லை என்பதுதான்.


நிலங்களை இழந்தோம், போராடவில்லைஆட்சியை இழந்தோம், போராடவில்லை
ஆலயங்களை இழந்தோம், போராடவில்லை
அடையாளங்களை இழந்தோம், போராடவில்லை
இலக்கியத்தை இழந்தோம், போராடவில்லை
மொழியை இழந்தோம், போராடவில்லை
இனி செய்ய வேண்டியவைபெரியாரின் பாதையில் இனி நாம் என்ன செய்ய வேண்டும்.
பெரியார் சொன்னது போல் தமிழ்ப் பகைவர்கள் வேறு எங்கும் இல்லை. நம்மிடையே ஊடுருவிக் கலந்து உள்ளனர்.
நம் தலையாய கடமை அவர்களை அடையாளம் கண்டு களையெடுப்பது மற்றும் அவர்கள் நம்முன் கலக்க விடாமல் கதவடைப்பது தான்.
தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுங்கள் அது பெருமை.
தமிழர்களே தமிழில் பேசுங்கள், அது தான் பெருமை,
தமிழில் புதிய கண்டுபிடிப்புகள் செய்யுங்கள்,
தமிழ்ப்பகைவர்களை தைரியமாக அடையாளம் காட்டுங்கள்.
பார்ப்பனிய பனியா சக்திகளுக்கு ஒரு போதும் அடிபணியாதிர்கள்.
தமிழர் விரோதிகளுக்கு எதிராக தமிழரின் ஆற்றல்களை ஒன்று திரட்டுங்கள்.
நாமே உண்மையான பெரும்பான்மையினர் என்பதை உலகிற்கு புரிய வைப்போம்.மே.பா.
தமிழக வரலாறு, மக்களும், பண்பாடும், கே.கே.பிள்ளை.
தமிழக வரலாறு, புதிய பார்வை, வே.தி. செல்லம்.
தமிழக கலை வரலாறு, தமிழ் மொழி வரலாறு, மணிவாசகர் பதிப்பகம்.சிந்தனையாளன் பொங்கல் மலர் 2009ல் வெளியிடப்பட்டது.. Advertisements