மரியாதைக்குரிய சீமான்
மரியாதைக்குரிய சீமான்,
சமீபத்திய மதுரைக் கூட்டத்தில் உங்களின் பேச்சை ஆவலுடன் எதிர்பார்த்து, ஆதங்கத்துடன் கேட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிய சராசரித் தமிழர்களில் நானும் ஒருவன்.
உங்களின் முந்தைய பேச்சுகளை குறுந்தகடுகளிலும், நேரிலும் கேட்டு உணர்ச்சி எழுப்பப்பட்டு ‘‘அறுத்தெறிவோம் வாரீர்’’ என நீங்கள் அழைத்தவுடன் ஓடோடி வந்த இளைஞர் கூட்டத்தின் ஒரு துளி நான்.
முள்வேலிக்குள் சிறைப்பட்டுள்ள மூன்று இலட்சம் ஈழத் தமிழர்களை வெளிக் கொணர்வதற்கான முன்னெடுப்பு இது என்றும், ‘‘நாம் தமிழர்’’ என்ற முழக்கத்தை முன் வைத்தும் நடந்த அந்தக் கூட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினீர்கள் – முள்வேலிக்குள் நின்று கொண்டு. முன்பெல்லாம் வேலிக்கு வெளியில் நின்று முழங்கிய வீரத் தமிழன் சீமானை அன்று காணோம் என்பதுதான்
எங்கள் வருத்தம். வேறு ஏதோ வேலிக்குள் நீங்கள் சிக்கிக் கொண்டது போல் எங்களுக்குத் தெரிகிறது.
ஈழத் தமிழருக்கு நன்மை நடக்க வேண்டும் என்ற உங்கள் நோக்கத்தில் எங்களுக்குச் சந்தேகமில்லை. ஆனால் அதற்காக இவ்வளவு தூரம் சுருதி குறைத்துக் கெஞ்ச வேண்டுமா என்ன? அப்படிக் கெஞ்சினால் மட்டும் இந்தியா உங்களுக்கு உதவி விடுமா என்ன? மயிலே மயிலே என்றால் இறகு விழுமா என்ன? போரை நடத்தியவர்களிடம் கைதிகளை விடச்சொல்லிக் கெஞ்சுவது என்ன உத்தி?
அரசியல் சக்திகளை அனுசரித்துப் போவது அவர்களின் தாளத்துக்கு நம்மை ஆட வைத்து விடும் – அது தப்புத்தாளமாக இருந்தால் கூட.
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்- ராசபக்சேயும், சிவசங்கர மேனனும், நாராயனணும் மட்டும்தான் இந்த ஈழப் போரை நடத்தினார்களா? அதற்குமேல் யாரும் இல்லையா? யாரையுமே விமர்சிக்கக் கூடாதென்றால் உண்மைகளை எப்படி வெளியே எடுத்துச் சொல்வீர்கள்? மறைக்கப்படும் உண்மைகள் பேசப்படும் பொய்களை விட பெரும் கேடு விளைக்காதா?
மூன்று இலட்சம் ஈழத் தமிழர்களை வெளியே அனுமதிக்கக் கோரி யாரிடம் போவீர்கள்? ராசபக்சேவிடமா?
ராசபக்சே காலில் கூட விழத் தயார் என்று அருட்தந்தை ஜெகத் கஸ்பர் சொன்னது போலவா? மன்னிக்க வேண்டும், பெரியாரின் பேரர்கள் நாங்கள். எவன் காலிலும் விழுவதற்குத் தயாராயில்லை. அதுவும் இனப் பகைவனின் காலில்.
இந்திய அரசிடமா? ஐ.நா. வில் இலங்கை அரசைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றி வெளிப்படையாகவே நாங்கள் சிங்களர் பக்கம்தான் என்று உறுதி செய்த மலையாள பார்ப்பன பனியா கூட்டத்திடமா?
மூன்று மணி நேர உண்ணாநிலைப் போராட்டத்தால் ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த (????…) கலைஞரின் அடிமைத் தமிழக அரசிடமா? இல்லை, நீங்கள் சமாதானமாகப் போக விரும்பும் ஓட்டுப் பொறுக்கி அரசியல் சக்திகளிடமா?
நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள், நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப் பட்ட அதே நாளில் இவர்களெல்லாம் வெடிவெடித்து தேர்தல் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
கெஞ்சிக் கேட்டால் இவர்களெல்லாம் உதவி விடப்போகிறார்களா என்ன ? இவர்களை நம்பி நம்பிக் கெட்டதெல்லாம் போதாதா?
கெஞ்சிக் கேட்பதினாலேயோ, சமாதானமாகப் போவதாலேயோ அடிமைகள் விடுதலையடைந்ததாய் எப்போதாவது வரலாறு சொல்லியிருக்கிறதா? போராட்டமின்றி என்றாவது உரிமைகள் கிடைத்திருக்கின்றனவா?
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் மிகப் பெரிய சாதனை 30 ஆண்டுகளாக விடுதலைப் போர் நடத்தியதா?.. இறையாண்மையுள்ள தனி ஈழ அரசைக் கட்டியதா?..ஏழு நாட்டுப் படைகளை எதிர்த்துப் போர் நடத்தியதா?.. இவை
எதுவுமில்லை,
புறநானூற்று வீரம் மறந்து, அடிமைப்பட்டு, புழுவாய்க்கிடந்த தமிழ்ச் சமூகத்தை வீரம்செறிந்த ஒரு கரும்புலிச் சமுதாயமாக மாற்றியதுதான்.
அடிமை மனப்பாண்மை விலங்கணிந்து கிடந்த தமிழினத்தை (பெண்கள் உட்பட) மறம் மிக்க இனமாக மாற்றியமைத்ததுதான். (இது கஸ்பர் சொன்னதுதான்). அதைப்போன்ற ஒரு வீரமிக்க சமுதாயத்தை தமிழ்நாட்டிலும் உருவாக்குவதுதான் நம் கடமையேயொழிய ஒப்பாரிப் புலம்பலாய் அழுவதல்ல.
இங்கு வீரமிக்க இளைஞர் படை இருக்கிறது. இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற அய்யா காசி ஆனந்தனின் வரிகளுக்கேற்ப தமிழன் நெருப்பாய்தான் இருக்கிறான். மேலே சாம்பல் மூடியிருக்கிறது. அவ்வளவுதான். ஜெகத் கஸ்பரிடம் சொல்லுங்கள். அவர் நம்பும் இயேசு பிரான் கூட இப்போது உயிர்த்தெழுந்தால் ஒன்றரை இலட்சம் பேரைக் கொன்று குவித்த பாவிகளுக்கு எந்த பாவமன்னிப்பும் கொடுக்க மாட்டார். வதை முகாமிலிருக்கும் மக்களைக் காப்பாற்ற யாரிடமும் கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டார். மாறாக அவரும் ஒரு கரும்புலியாய் கருவியேந்திப் போராடியிருப்பார்.
துரோகிகளின் இரத்தக்கறை படிந்த கரங்களை நம் கண்ணீர் கொண்டு கழுவ அனுமதிப்பதா? கண்ணீர் விடுவதை நம் அரசியல் முதலைகளிடமே விட்டு விடுங்கள். நமக்கு வேறு களம் காத்திருக்கிறது.
இளைஞர்கள் களமாடினோம் என்று பேசிக் கொண்டிருந்தார்களே, தேர்தல் பரப்புரை செய்ததைத்தான் அப்படிச் சொன்னார்களா? அப்போது புலிகள் ஈழத்தில் களமாடியதை என்னவென்று அழைப்பது? காங்கிரசை தோற்கடித்த இளைஞர்களின் உழைப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனாலும் இந்த வார்த்தை விளையாட்டுகள் எல்லாம் கட்சிக் காரர்களே வைத்துக் கொள்ளட்டும். நமக்கு வேறு வேலையிருக்கிறது.
தமிழீழ எதிர்ப்பாளர்களை விட தமிழீழ ஆதரவாளர்களால்தான் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் வலுவிழந்து போயின என்று ஒட்டு மொத்தமாகக் குற்றம் சாட்டாதீர்கள். ஆதரவாய் இருந்தவர்கள் வேறு, ஆதரவாய் நடித்தவர்கள் வேறு.
கீழே கிடக்கும் வரை சிவப்பு, வெள்ளை, பச்சைத் துணிகள். சேர்த்துத் தைத்தால் அது நம் மரியாதைக்குரிய தேசியக்கொடி என்று விளக்கினீர்களே. நம்
இனத்தைக் கொன்று குவிக்க ஆள், ஆயுத, நிதி கொடுத்த இந்த தேசத்தின் மீதே நமக்கு மரியாதை இல்லையே, தேசியக்கொடி மீதா மரியாதை வந்து விடப் போகிறது. ( இதுவும் உங்களின் பேச்சுதான்- சிறிது காலத்துக்கு முன்). வேண்டாம் தோழர், விட்டு விடுங்கள், இந்த திடீர் தேசியவாதி வேடம் உங்களுக்குப் பொருத்தமாயில்லை. அவனவன் கோபத்தில் தேசியக்கொடியை எரித்துவிட்டு சிறையிலிருக்கிறான்- கொடியை மீண்டும் ஏற்றச் சொன்னதால் பிணை கூட மறுத்து விட்டு.
தவறு யார் செய்தாலும் அது தவறுதான். நம் சொந்த தேசமானாலும் கூடத்தான்.
எக்காரணம் கொண்டும் வீரத்தை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். வீரமிழந்த எந்த உயிரும் வாழ்விழந்து போய்விடும்.
உறுமும் வரைதான் புலி, ஊமையானால் அது வீண். படமெடுத்தால்தான் நாகம், இல்லையேல் அது வெறும் புழு. கருவியெடுக்கத் தயாராய் துடிப்புள்ள இளைஞர்கள் இன்று அடையாளம் தேடி உங்களிடம் வந்திருக்கிறார்கள். கருவி ஏந்தாவிட்டாலும் பரவாயில்லை, காலில் விழ வைத்து விடாதீர்கள். வீரம் விளைக்கும் மண்ணின் வித்துக்களை நீர்த்துப் போக வைத்து விடாதீர்கள்.
நாம் தமிழர்.. சரி ஆனால் நமது வழி என்ன?
நம் பிரச்சினைகள் அழுதால் தீராது, அடித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். நீங்கள் அனுசரிக்க நினைக்கும்
அரசியல் கட்சிகளால் எதுவும் நடக்காது.
தமிழர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஆளுயர மேடை, 50 அடி பதாகைகள், வீடியோ திரைகள், சவுக்குக் கட்டை மறிப்புகள் அல்ல, தெருமுனையில் தரையில் நின்று கூட உண்மையை உரத்த குரலில் முழங்க வேண்டுமென்பதுதான். நீங்கள் முதலில் உங்கள் வேலியை அறுத்தெறிந்து விட்டு வெளியே வாருங்கள்.
சீமான் – தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு முன்
சீமான் -தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு பின்
எங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரிகிறது. கண்ணாடி முன் நின்று பாருங்கள், உங்களுக்குத் தெரிகிறதா?
ஈழம் ஒருநாள் விடியும். – சு.தளபதி
ஈழம் ஒருநாள் விடியும். – சு.தளபதி
புத்தர் எம் தலையில் குண்டு போட்டார்
காந்தி குறியாய் சுடக் கற்றுக் கொடுத்தார்
இயேசு சிலுவையில் பேசாமல் ஆசிர்வதித்தார்
ஐந்து வேளை தொழுத பின்னும்
அல்லாவும் அமைதியாகத்தான் இருந்தார்
முருகனும், வினாயகனும்
ஈசனும், பெருமாளும்
உடைந்த கோயில்களில் ஓய்வெடுத்தார்கள்
வீதியெல்லாம் பிணங்கள்..
வீடெல்லாம் அழுகை..
காற்றெல்லாம் கந்தகம்..
கனவெல்லாம் வெறுமை..
எல்லா கடவுள்களும்
எம்மை கை விட்டு விட்டார்கள்
ஒரே ஒரு மனிதனைத் தவிர..
நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்
நாளை எல்லாம் மாறும்..
இனி இதுவும் நாடாகும்
ஈழம் ஒருநாள் விடியும்.
திருமா.. இது தகுமா?
திருமா இது தகுமா? -சு.தளபதி
மானமிகு திருமாவளவன் அவர்களுக்கு,
இந்த அடைமொழியுடன் உங்களை யாரும் இதுவரை அழைத்தார்களா என்று எமக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி அழைப்பதில் தவறில்லை என்ற நம்பிக்கையுடன் மடலைத் தொடர்கிறோம்.
கடந்த பத்தாண்டுகளாய் உங்களை இந்தத் தமிழகம் கூர்மையாகக் கவனித்து வந்திருக்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட இனத்துச் சிறுத்தையாய் நீங்கள் வெளியே வந்தபொழுது இந்தத் தமிழகம் உங்களை ஆரத் தழுவி வரவேற்றது.
பெருமையுடன் உங்கள் அடையாளங்களை அரங்கேற்றியதும், அங்கீகரித்ததும் இந்தத் தமிழினம் தான். அதற்குக் காரணம் நீங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் அல்லது அந்த இனத்துக்காய் குரல் கொடுப்பவர் என்பது மட்டுமல்ல.அதையெல்லாம் தாண்டி எங்கெல்லாம் மனிதம் துன்புகிறதோ அங்கெல்லாம் உங்கள் ஆதரவுக் கரங்கள் நீண்ட காரணத்தினால்தான்.
சாதி அடையாளங்களைத் தாண்டி உங்களை ஒரு தலைவனாக உயர்த்திப் பிடிக்கத் தமிழர்கள் ஒரு போதும் தயங்கியதே இல்லை.
தமிழுக்கு முகவரி தர தமிழ்ப் பெயர்களை நீங்கள் சூட்டிய பொழுது தமிழ்ப் பகைவர்கள் உங்களை எள்ளி நகையாடினார்கள். ஆனால் தந்தைக்கே பெயர் சூட்டிய தனயன் என்று உங்களை இந்தத் தமிழ் மக்கள் பெருமையுடன் உச்சி முகர்ந்தார்கள்.
தமிழ் அடையாளங்களை காப்பதற்காக எதிரும் புதிருமாக இருந்த நீங்களும் மரியாதைக்குரிய ராமதாசும் தமிழ் பாதுகாப்புக் குழுவை உருவாக்கி அரசியல் அரங்கில் ஒற்றுமை பேணிய போது உங்களை வராது வந்த மாமணியாய் நாம் அரவணைத்துக் கொண்டோம்.
பாப்பாபட்டி கீரிப்பட்டியில் ஆதிக்க சக்திகளை நீங்கள் அஞ்சாமல் எதிர்த்த போது உங்கள் கரங்களுக்கு தமிழர்கள் தாங்களாய் உரம் சேர்த்தார்கள்.
சங்கராச்சாரியாரின் பார்ப்பன பிதற்றலுக்கு ஒரு சரியான சவுக்கடியாக, ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரன் கையில் தண்ணீர் வாங்கிப் பருகச் சொல்லி கேட்டபோது இங்கு இருந்த பெரியார் தொண்டர்கள் எல்லாம் பூரித்துப் போனார்கள்.
சென்ற முறை திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் போது அவர்கள் ஆதரவில் நின்று வென்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை தூக்கியெறிந்ததில் அரசியல் அரங்கில் ஒரு வித்தியாசமான மனிதனைக் கண்ட பெருமை எங்களுக்கு.
உங்கள் பாதை தெளிவாய் இருந்தது, உங்கள் நடை நேர்மையாய் இருந்தது கண்டு, ஒடுக்கப்பட்டோர் மட்டுமல்லாமல் இன உணர்வாளர்கள் அனைவரும் உங்கள் தோளுடன் தோளாக நின்றார்கள். உங்களின் சுயமரியாதையும், இனமான உணர்வும் அவ்வப்போது எங்கள் இதயத்தில் நல்ல பதிவுகளாக பதிந்து போயின.
தவறைத் தவறு என்றும் சரியை சரி என்றும் சரியாகச் சொன்னதினால் தமிழ் அரசியல் வரலாற்றில் பத்தாண்டுகள் பலபடிகள் உங்களை உயர்த்திக் கொண்டு வந்தவர்கள் இந்த தமிழர்கள்.
அதிலும் மிக முக்கியமாக ஈழப் பிரச்சனையில் நீங்கள் எடுத்த நிலைப்பாடு உள்ளூர் தமிழர்களைத் தாண்டி உலகத் தமிழர்கள் மத்தியிலும் உங்களுக்கு என்று உயர்ந்த இடத்தை பெற்று தந்தது.
அய்யா நெடுமாறன், வைகோ ஆகியோரோடு நீங்கள் கொள்கை கூட்டணி கொண்டபோது ஈழத் தமிழனுக்காய் குரல் கொடுக்க ஒரு தன்மானத் தமிழன் எழுந்து விட்டான் என்றுதான் இந்த இனம் நம்பியது.
போர் செய்யும் சிங்கள அரசையும், போருக்கு உதவும் இந்திய அரசையும் பற்றி நீங்கள் போட்டுடைத்த உண்மைகளில் இந்த இனம் உன்னைத் இனமானத் தலைவனாய் உயர்த்திப் பிடித்தது.
மேடைமேடையாய் நீங்கள் முழங்கிய முழக்கங்கள் ஈழத்தமிழர் துயர் துடைக்கும் மருந்தாய், அவர்களுக்கு ஒரு விடியல் காட்டும் வெளிச்சமாய் இருந்ததில் உங்களை இந்த தமிழினம் நம்பியது.
ஈழத்தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த இந்த காங்கிரசு அரசு ஒப்புக்கெரள்ளும் வரை, போர் நிற்கும் வரை, நீங்கள் சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்ட போது எத்தனை தமிழர்கள் கண்ணீருடன் உங்கள் பின்னே காத்துக் கிடந்தார்கள் தெரி யுமா? உங்களின் ஒவ்வொரு இதயத் துடிப்புடன் எத்தனை கோடி துடிப்புகள் கலந்தன தெரியுமா?
உண்ணாவிரதம் முடிந்த போது உங்கள் நண்பர்கள் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஞாபகம் இருக்கிறதா? அவை உங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டவை அல்ல, எங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் கொடுக்கப்பட்டவை.
தமிழினத்தின் தலைவர் என அறியப்பட்டவர்கள் எல்லாம் இனத்தை இந்திய காங்கிரசுக்கு அடகு வைத்த போது எதிர்த்துக் குரல் கொடுத்து இலங்கை பாதுகாப்பு இயக்கம் என்று எல்லோரும் ஒருங்கிணைந்து வேலை நிறுத்தம், உண்ணா நோன்பு, மனிதச்சங்கிலி என போராட ஆரம்பித்த போது திருமா என்ற மூன்றெழுத்து தமிழோடும் தமிழ் மக்களும் இரண்டறக் கலந்து போனது.
தமிழின எதிரிகள் யார் என்பதை தெளிவாக அடையாளம் காட்டியதில் உங்கள் பங்கு மகத்தான ஒன்று என்பதை தமிழினம் எப்போதும் மறக்காது.
இந்திய அரசும் அதை நடத்துகின்ற காங்கிரசு கட்சியுமே ஈழம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் எதிரிகள் என்று நீங்கள் அறிவித்து அவர்களைத் தமிழ்நாட்டை விட்டு அப்புறப்படுத்துவது என்ற கொள்கை முழக்கம் எடுத்தீர்கள்.
நம் எதிரிகள் ஏன் உங்களை கைது செய்யவில்லை என்று கரடியாய் கத்திய போது நாம் எடுத்த போராட்ட நடவடிக்கையால் சத்திய முர்த்திபவனே சற்று ஆடித்தான் போயிற்று.
மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து தற்கொடை அளித்த போது அவன் உதடுகள் உச்சரித்த கடைசி சொற்கள் பிரபாகரனும், திருமாவும்.
தொடர்ந்து இதுவரை ஒரே ஒரு லட்சியத்துக்காக, ஒரே ஒரு கோரிக்கைக்காக பதின் மூன்று உயிர்கள் தற்கொடை அளிக்கப்பட்ட போது ஒவ்வொரு இறுதி நிகழ்விலும் உங்கள் கண்ணீருடன் எங்கள் கண்ணீரும் விழுந்தது. அவ்வளவு ஏன் உங்கள் அரசியல் இயக்கத்திலிருந்தே மூவர் தீக்குளித்தார்கள்.
எல்லோரும் சேர்ந்து யாரை நம்பினார்களோ இல்லையோ உங்களை நம்பினார்கள். உங்கள் கைகளிலும் தொடர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புகளை விட்டுப் போனார்கள்.
நாங்களெல்லாம் அதை நம்பினோம். யார் எப்படியோ திருமாவின் பார்வையில் தெளிவு குறையாதென்று உறுதியாயிருந்தோம்.
என்ன ஆயிற்று உங்களுக்கு, தேர்தல் வந்துவிட்டதா?
தேர்தல் எப்போதும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரத்தான் செய்யும். அதற்காக துரோகிகளுடனும், எதிரிகளுடனும் கூட்டணி சேர்வதா?
எதுவும் மாறவில்லை இதுவரை. தினந்தோறும் குண்டு வீச்சும் ,செத்துமடியும் தமிழினமும், வீடின்றி, நாடின்றி தங்கக்கூட இடமின்றி அலையும் அவலமும் இன்று வரை குறையவில்லை.
குண்டு போடுவதை நிறுத்துங்கள் என்றால் காங்கிரசோ குண்டுவீச்சில் செத்தவர்கள் போக மீதமிருப்பவர்களுகு மருத்துவ உதவிகள் செய்கிறோம் என்கிறார்கள்.
ஆனால் போர் நின்று விட்டது போலவும், அமைதி திரும்பிவிட்டது போலவும், தமிழர்கள் பாதுகாப்பு அடைந்துவிட்டார்கள் என்று போலவும், நீங்களும் உங்கள் நண்பர்களும் பேசி வருகிறீர்களே?
நாங்கள் எந்த திருமாவை உண்மை என நம்புவது?
கொள்கையே உறுதியாய் நின்ற குன்றா விளக்கையா, இல்லை கொள்கையை எதிரிகள் காலடியில் ஒரு பாரளுமன்றத் தொகுதிக்காய் அடமானம் வைக்கும் இந்த திருமாவையா?
காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது என்ற கொள்கை முழக்கத்தை துவக்கி வைத்த நீங்கள் இப்போது எந்த முகத்தோடு அதே காங்கிரசுடன் அணி சேர்ந்தீர்கள்.
திமுகவும் நீங்களும் ஈழப்பிரச்சினையில் ஒரே கொள்கை உள்ளதாக அறிவித்திருக்கிறீர்களே. அது எப்படி? திமுகவும், காங்கிரசும்தான் ஏற்கனவே ஒரே கொள்கை என்று அறிவித்தார்களாயிற்றே.
நீங்களும் காங்கிரசும் திமுகவும் ஒரு அணியில் வாக்கு கேட்டு எப்படி எங்களிடம் வருவிர்கள்? இதில் ராமதாசையும் வேறு அழைத்திருக்கிறீர்கள், அப்படியே அம்மையாரையும் மார்க்சியவாதிகளையும், முடியுமானால் விஐயகாந்தையும் உங்கள் அணிக்கே அழைத்துக் கொண்டு போய் விட வேண்டியது தானே. நாங்கள் ஒட்டு போட வேண்டிய தேவையே இல்லாமல் போகுமே.
மாவீரன் முத்துக்குமாருக்கும் அவன் பின்னே போன பதின்மூன்று பேருக்கும் என்ன பதில் சொல்கிறீர்கள்?
தன்மான சிங்கங்களெல்லாம் தேர்தல் அரசியலில் அசிங்கங்களாய் மாறிப் போனதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த சிறுத்தையும் இப்போது பூனையாய் மாறி மியாவ் என்பது எங்களையெல்லாம் அதிரவைக்கிறது.
விலை மகளிர் பலர் வேசித்தனம் செய்யலாம். ஆனால் ஒரு கண்ணகி சோரம் போவதில் எங்களுக்கெல்லாம் உடன்பாடு இல்லை.
உண்மைகளை உரத்துப்பேசிய குற்றத்திற்காக சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் போது நீங்கள் மட்டும் தேசிய நீரோட்ட சாக்கடையில் குதித்துக் களிப்பதா?
ஆறு கோடி தமிழ் இதய நாற்காலியை விட ஒரு எம்.பி நாற்காலி உங்களுக்கு அதிக அங்கீகாரம் அளித்துவிட்டதா? உங்களுக்கு அங்கீகாரம் தந்த தமிழ் மக்களை விடவா இந்த ஒரு பாராளுமன்றத் தொகுதி அதிக அங்கீகாரம் தந்துவிடப்போகிறது.
பொதுவாக சிதம்பரம் என்றாலே உடனே கூடவே நினைவுக்கு வந்து தொலைப்பது தமிழ் விரோதக் கும்பல் தான்.
புராணத்தில் பார்வதியை தோற்கடிக்க ஒரு காலைத் தூக்கி சிவன் ஆடி பெண்ணடிமைத்தனத்தை துவக்கி வைத்தது சிதம்பரத்தில்தான்.
நஞ்சைக் கக்கும் ஒரு உள்துறை அமைச்சர் சிதம்பரம் என்ற பெயருக்குச் சொந்தக்காரர்தான்.
தமிழே கூடாது என்று அடித்து விரட்டிய தீட்சிதர் கும்பலும் சிதம்பரத்தில் தான்.
இன்று ஒரு மக்களவைத் தொகுதிக்காக ஒரு இனமான தமிழன் சோரம் போனான் என்று வரலாறு எழுதப்போவதும் இந்த சிதம்பரத்தில்தான்.
ஈழத்தில் நல்ல தலைவன் கிடைத்திருக்கிறான், ஆனால் நாடு சொந்தமாயில்லை. தமிழ்நாட்டில் நாடு சொந்தமாயிருக்கிறது ஆனால் நல்ல தலைவர்கள் கிடைப்பதில்லை. அதனால்தான் இன்னும் சில அறியாக் கூட்டம் ரசினிகாந்தை கட்சி ஆரம்பிக்க சொல்லி பின்னால் அலைந்துகொண்டிருக்கிறது.
எது எப்படி ஆனாலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் திருமா.
நீங்களே தூக்கிப்பிடித்தாலும் சரி, இல்லை வேறு யாரையும் துணைக்கு அழைத்து பல்லக்கு தூக்கினாலும் சரி, இந்தத் தேர்தலில் மனிதத்தின் எதிரிகளான காங்கிரசு, பார்ப்பன கட்சிகளுக்கு கண்டிப்பாக நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை.
நீங்கள் தோற்றால் பரவாயில்லை, தமிழ் தோற்பதில் தமிழர்கள் தோற்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
மீண்டும் மடலின் ஆரம்பத்தைப் பாருங்கள்.உங்களை அப்படி அழைக்கவே ஆசைப்படுகிறோம், இனிமேலும்..
எங்களைப் பொறுத்த வரையில் மாண்புமிகுவை விட மானமிகு உயர்வானது, உங்களுக்கு எப்படியோ..
எரிமலைகள்

எரிமலைகள் – சு.தளபதி, மதுரை
ஏதாவது சொல்லுங்கள்..
இனிமேலாவது பேசுங்கள்..
மௌனமாய் இருப்பவர்களே!
சரியென்றோ
தவறென்றோ
ஏதாவது சொல்லுங்கள்..
இனிமேலாவது பேசுங்கள்..
தவறென்றால் தடுத்திடுங்கள்
தலையில் விழும் குண்டுகளை
சரியென்றால் சொல்லிடுங்கள்
சமர்க்களத்தில் சந்திக்கின்றோம்
பயங்கரவாதப் போரில்
பாலர்களும் பெண்களும்
எப்படிச் சாகிறார்கள் என்று
எங்களுக்கு விளக்குங்கள்!
மருத்துவ மனைகளெல்லாம்
மரணத்தில் மிதப்பது
ஏன் என்று மட்டும்
எங்களுக்கு விளக்குங்கள்!
காணாமல் போனோர் கணக்கெல்லாம்
மிகச் சரியாய்
புதைகுழி எலும்புகளாய்
புகுந்து கொண்டது எப்படி
காரணம் சொல்லுங்கள்!
ஒரு சந்தேகம்!?
இந்தக் கற்பழிப்புகள்
உங்கள் வீட்டில் நடந்தாலும்
இப்படித்தான் இருப்பீர்களா
கண்டு கொள்ளாமல்..
உரிமை கேட்பது அப்படியென்ன
பெரிய தவறா
ஊமையாய் நிற்பதுதான்
உங்கள் நிலையா
அப்படி உங்களுக்கு சிங்களர்
என்னதான் தருகிறார்கள்?
எல்லாம் தெரிந்திருந்தும்
ஏன் இன்னும்
இறுக்கமாய் இருக்கிறீர்கள்!
இறையாண்மை என்றாலே
உங்கள் மொழியில்
இன அழிப்பு மட்டும் தானா
உலகம் ஒருநாள் அழியும்
நாங்கள் மட்டும் உடனே அழிவதில்
உங்களுக்கென்ன ஆனந்தம் ?
எல்லோரையும் கொன்றுவிட்டு
யாருடன்தான் பேசப் போகிறீர்கள்?
நாற்புறமும் கடலென்று
நம்பியிருந்தோம் நாங்கள்..
இப்போதுதான் தெரிகிறது
எங்களைச்சுற்றி
எல்லாப் பக்கமும் நீங்கள்தான்..
தனிமைத் தீவாய்
தமிழினம் மட்டும்தான்..
எங்களுக்கு மட்டும் எப்படி
எல்லோரும் எதிரிகள்!
எண்ணில்லா துரோகிகள்!
நிறுத்திக் கொள்ளுங்கள் நீரோக்களே
நியாயம் உங்கள் மீதும் திரும்பும்..
உங்கள் பாதங்களுக்குக் கீழும் அதே
எரிமலைகள் தான்.
உன்மத்தர்களே..
உங்கள் எதிரேயே
பிள்ளைகள்
உயிரோடு எரிந்து பார்த்ததுண்டா?
இல்லையென்றால்
பார்த்துக் கொள்ளுங்கள்..
கூடவே எண்ணிக்கையையும் குறித்து
வைத்துக் கொள்ளுங்கள்..
நாளை
எல்லாவற்றிற்கும் பதிலை
வட்டியுடன் சேர்த்து
வரவு வைக்க
வேண்டியிருக்கும்
உயிராயுதம்

உயிராயுதம்.
எமதருமை முத்துக்குமரா,
தமிழ் மாலையிலிருந்து உதிர்ந்த நல் முத்தே.
நாங்களெல்லாம்
இருந்து சாதிக்கத் துடித்ததை
நீ
இறந்து சாதித்துப் போயிருக்கிறாய்.
நாங்கள் திட்டமிட்ட பல கொலைகளைப்
படித்திருக்கிறோம்,
ஆனால் திட்டமிட்ட ஒரு தியாகத்தை
இப்போதுதான் பார்க்கிறோம்.
நெருப்பு உருக்கிய போதும்
நிறம் மாற்றா மாணிக்கமே,
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்,
கேள்விப்படிருக்கிறோம்.
முத்து சுட்டாலும் திண்மை தரும்,
பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
வாழ்ந்த போது வேண்டுமானால்
சாமானியனாய் இருந்திருக்கலாம்,
இனி நீ
சரித்திர நாயகன்.
அரைப் புள்ளி அல்ல நீ
தமிழகம் தான்டிப் போக முடியாத
முக்கியப் புள்ளி.
தமிழினத்தின் அவலத்திற்கு
முற்றுப் புள்ளி.
இந்த மண்ணில் பலர்
வந்தார்கள். போனார்கள்.
சிலர் மட்டுமே தமிழாய் வந்தார்கள்,
தமிழுக்காய் போனார்கள்.
நடராசன், தாளமுத்து, சின்னச்சாமி, அப்துல் ரவுப்..
அவர்கள் வரிசையில் அடுத்ததாய் நீ..
தமிழ்த் தேசிய வரலாற்றில் இனி
நீயும் ஒரு மைல் கல்.
தீ எழுதிய ஓவியமே,
இனி நீயும் எம் தேசிய கீதம்..
இவ்வளவு சிந்தனை உள்ள நீ
இருந்திருக்க வேண்டும்,
சிறந்திருக்க வேன்டும்.
உன்னைப் போல் உண்மை, உணர்வுத் தமிழர் தான்
தற்போதைய அவசரத் தேவை.
நீ தானடா மாவீரன்..
நான்கு பக்கங்களில்
நீ எழுதிய
மரண வாக்குமூலம் தான்
இந்த மண்ணின் வாக்குமூலம்..
இங்கு மிக அதிகமாய் படியெடுக்கபட்ட பக்கங்களுக்குச் சொந்தக்காரன் நீ.
மிக அதிகமான மக்களின் கண்ணீருக்கும் சொந்தக்காரன் நீ.
இன்று எல்லோர் கையிலும் உன் வாக்கு மூலம்,
எல்லோர் வாக்கிலும் உன் எழுத்து நாதம்.
உன்னைப் பார்த்தால் எங்களுக்கு பொறாமையாக இருக்கிறது.
ஒரு லட்சம் தட்டிகளும், சாலையோர விளக்குகளும், வரவேற்பு வளைவுகளும்,
பிரியாணி, முட்டையுடன் எங்களுர்க்காரர்கள் எளிமையாய் பிறந்தநாள் கொண்டாடியிருக்க
நீ மட்டும்
எவ்வளவு ஆடம்பரமாய் ஒரு இறந்த நாள் கொண்டாடிப் போயிருக்கிறாய்.
ஆறரை கோடி கண்ணீர்த்துளிகளுடன்,
ஏழரை மணி நேர இறுதி ஊர்வலத்துடன்,
எல்லா நாட்டு தமிழர்களின் கனத்த இதயங்களுடன்,
பகத்சிங்கின் மறு பதிப்பே
நீ விழுந்தாய், தமிழகம் எழுந்தது
நீ எரிந்தாய், இந்தியம் கருகியது
சாவைக் கூட முறையாய் ஆவணப் படுத்தி விட்டு செத்தவன் நீ மட்டும் தான்.
சு.சாமிக்களும், சோ க்களும் பேசுவார்கள் என்று முன்னாலேயே ஊகித்திருக்கிறாய்.
அமெரிக்கன் புஷ்சை
செருப்பால் அடித்து அனுப்பி வைத்தார்கள்
ஆம். அடுத்த மண் மீது படையெடுக்கும் அத்தனை பேருக்கும் அதே கதிதான்.
இவர்களை
செருப்பால் அடித்தால் செருப்புக்கு அசிங்கமென்று நெருப்பால் அடித்தாயா
என் தோழா
நிரந்தரமாய் வலிக்குமென்று.
நெருப்பாய் எரிந்தது நீயல்ல..
இந்த அரிதார வேடதாரிகளின்
அதிகாரங்கள்தான்..
சாதாரணமாய் உப்புப்போட்டு சோறு உண்ணும் எங்களாலேயே ஈழ வேதனையைச்
செரிக்க முடியவில்லை,
நீயோ
உப்புக்காய்ச்சும் ஊருக்குச் சொந்தக்காரன்,
எப்படிச் செரிப்பாய்,,
அதுதான்
எரிந்தாய் நெருப்பாய்.
இந்தியத்தை
தோலுரித்துக் காட்டிய என் தோழனே
உன் துன்பங்கள் தான்
தமிழரின் துயர் துடைக்கும் வாட்கள்..
சிங்களனுக்கும் இரங்கச் சொன்ன
இனமானச் சிங்கமே..
நீ காரி உமிழ்ந்த எச்சிலில் நம் எதிரிகள் நிர்வாணப்பட்டுப் போனார்கள்.
கதறிய எம் ஒலங்கள்
இந்தச் செவிடர்கள் காதில் ஏறாத போது
மரண அடியாய் அடித்தவனே..
இனி இந்த ஒற்றைப் பெயருக்கு
உலகமே திரும்பிப் பார்க்கும்.
உனக்கு
பிணப் பரிசோதனை செய்பவர்களையே
போராளிகளாய் மாறச் சொன்ன
புதிய சே குவேரா நீ..
உன் உடலத்தையே துருப்பாய் மாற்றி
உன் உயிரை தமிழினத்துக்கே
உயிலாய் எழுதிக் கொடுத்தவனே..
அந்தக் கோரிக்கைகள்தான்
இனி எம் உரிமை முழக்கங்கள்.
போராட்டம் முடியும்வரை
புதைக்க வேண்டாம்
என்றவனே..
கவலைப்படாதே!
எப்போதுமே புரட்சிக்காரர்கள்
விதைக்கத்தான் படுகிறார்கள்.
மரணம் எல்லோருக்கும் முடிவு மட்டும் தான்.
இங்கோ நீ தொடங்கி வைத்து போயிருக்கிறாய்
கற்பூரக் காட்டில் விழுந்த
கனல் நீ
ஒரு மரம் எரிவதை
காடு என்ன பார்த்துக் கொண்டு சும்மாவா இருக்கும்
உனக்காய் நாங்கள் அழப்போவதில்லை போர்க்களத்திலே ஒப்பாரி எதற்கு
புறநானூற்று மறவனே..
இதோ உன் இலட்சியம் வென்றெடுக்க
புறப்பட்டோம் வேகமாய்..
நீ கேட்டபடி
மாணவர்கள் மட்டுமல்ல,
மனிதராய் இருப்பவர்கள் அத்தனை பேரும்
அந்த இலக்கை நோக்கித்தான்..
உன் கருகிய உடலத்தின்
கனவுகள் கலைவதற்கு
இனி விடமாட்டோம்!
இனி இந்தத் தமிழினம்
தம் பிள்ளைகளுக்கு
“முத்துக் குமரன்” என்றே
உன் பெயர் சூட்டும்..
உயிர்ப் போர் வீரனே..
உன்னை ஏன்
கடலில் கரைத்தோம் தெரியுமா,
உடனே ஈழம் போ என்றுதான்
போ என் தோழா போ,
போய் ஓயாத அலைகளாய் வெற்றி வருமென
ஓங்கிச் சொல் எம் உறவுகளிடம்.
உயிரை விட்டாலும்
உன்னை விட முடியுமா என்ன?
ஒன்று நிச்சயம்
நீ மூட்டிய நெருப்பில்
இனி
இந்த நாடே பற்றி எரியும்..
அந்த ஒளியில்
“தமிழீழம்” விடியும்!!
“தமிழினம்” வெல்லும்!!!
- சு. தளபதி, மதுரை.

ஈழத்துக்கு ஒரு கடிதம்


ஈழத்துக்கு ஒரு கடிதம்
சு. தளபதி,
மதுரை.
என் அன்பு ஈழத் தமிழனுக்கு..
ஒரு தமிழகத் தமிழனின் கடிதம் .
சகோதரா,
யார் யாரோ யார் யாருக்கோ எழுதிய கடிதங்களால் என்னென்னவோ வரலாறுகள் மாறியதாகச் சொல்கிறார்கள். இன்னமும் என்னென்னவோ நடக்கப்போவதாகச் சொல்கிறார்கள். அதிலெல்லாம் எமக்கு நம்பிக்கை இல்லை.
உண்மையில் இது கடிதமில்லை. கண்ணீர்.. வெறும் கண்ணீர் மட்டுமே..
உன் கண்ணீரைத் துடைக்க வேண்டிய கரங்களுக்குச் சொந்தக்காரர்களே கண்ணீர் விடுவதா என்று சிந்திக்கிறாயா?
ஆம். உண்மைதான், அதை உரக்கச் சொல்லுவதில் எமக்கு எந்த தயக்கமும் வெட்கமும் இல்லை.
வழக்கமாய் துவங்குவது போல் நான் இங்கு நலமே, நீ அங்கு நலமா என்று கேட்கும் நிலையில் நானும் இல்லை நீயும் இல்லை.
அனத விட முக்கியம், உனக்கு என்ன முகவரியிடுதென்பது,
யாழ் நகரா, கிளி நொச்சியா, ஆனனயிறவா…
எந்த ஊரை இட.
நான் காதில் கேட்ட சேதிகள் நீ அங்கெல்லாம் இல்லை என்றே சொல்கின்றன. இதை எப்படி நான் அனுப்புவேன். எனக்குப் புரியவில்லை.ஊர்களைத் துறந்து நீ முல்லைத் தீவு காடுகளுக்குள் சென்று விட்டதாகச் சொன்னார்கள். காட்டுக்குள் கடிதப்போக்குவரத்துக்கு என்ன செய்வேன்.
உன்னைக்கொல்ல ஏழு நாடுகள் சேர்ந்து அணி வகுப்பதாகவும் அதில் இந்தியாவும் ஒன்று என்று கேள்விப்பட்ட அன்றே என் நாடித்துடிப்பு நின்றே போனது. எங்கள் கதியும் உன் போலத்தான் என்பது உறுதியானது அன்றுதான்..
சொந்த நாடே அந்நியமாகிப் போனது.
என் வரிப்பணத்தில் உனக்கெதிராய் ஆயுதமா..
என் கையே உன் கண்ணைக் குத்துவதா..
வங்காளத்தில் வெள்ளம் என்றாலும், கார்கிலில் போர் என்றாலும், குசராத்தில் பூகம்பம் என்றாலும், நிதி சேகரித்துக் கொடுப்பதில் தமிழன்தான் முதல் ஆளாய் நின்றான். அந்தத் தமிழனுக்கு துயரம் என்றால், உதவி வேண்டும் என்றால் தமிழனைத்தவிர ஒரு இந்தியனும் திரும்பிக் கூட பார்க்கவில்லையே. அவர்களும் உதவவில்லை, எங்களின் உதவிகளையும் அனுமதிக்கவில்லை.
எமக்காகவும் பேசுங்களேன் என்ற என் ஈழச் சொந்தமே,
உன் துன்பம் நீ சொல்லாமலேயே எமக்குப் புரியும். எம்மைப் போலவே எல்லோருக்கும் புரியும். ஆனால் துடிப்பது என்னவோ எம் இரத்தம் மட்டும் தான். மற்றவர்களோ இதையும் ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நிழற் கதாநாயகிகள் பட்ட துன்பங்களுக்காய் குடம்குடமாய் கண்ணீர் விட்டவர்கள் தம் நிச சொந்தங்கள் உன்னைக் கண்டுகொள்ளவே மாட்டேனென்கிறார்கள்.
மட்டைப்பந்தில் தோற்றதற்கு மனசெல்லாம் குமுறியவர்கள், உனக்காக ஒரு துரும்பைக்கூட அசைக்காமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள்.
தலைகளில் விழும் கொத்துக்குண்டுகளில் இருந்து தப்பித்து நீ ஊர்விட்டு ஊர் ஒடிக்கொண்டிருக்கையில், இவர்கள் தீபாவளி வெடி வெடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் மன்றங்களில் காட்டிய ஆர்வத்தில் கொஞ்சமாவது உன் நலத்தில் காட்ட இந்த தமிழினம் தயாராயில்லை.
இடைத்தேர்தலில் காட்டிய வீரத்தை ஈழச்சிந்தனையில் காட்டுவதற்கு தயாராயில்லை.
தமிழ்நாட்டில் தமிழ் பற்றி பேசினாலோ, தமிழனைப்பற்றி பேசினாலோ தீவிரவாதம் என்கிறார்கள். உலகிற்கு புதிதாய் ஒரு அடையாளப் பெயர் கிடைத்திருக்கிறது. தமிழ்த் தீவிரவாதிகளாம்.
மொத்தத்தில் தமிழகத்தில் யாரும் தமிழனாய் இல்லை. திரைப்படத்திலும், மது போதையிலும் சாதி மதச்சகதியிலும் அவன் கரைந்தே போய்விட்டான்.
நாங்களும் சும்மா இருக்கவில்லை. உன்னைக் காப்பாற்றச் சொல்லி எங்கள் நாட்டிடம் கேட்டோம். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டினோம். அரசவைத்தீர்மானத்திலிருந்து அரவாணிகள் பட்டினிப் போர் வரை நடத்தினோம். அவர்களோ அசைந்து கூட கொடுக்கவில்லை.
சாகும் வரை பட்டினிப் போராட்டம் இருப்பதாக மிரட்டினோம். அவர்களோ சாகும் வரை விட்டு விடுவார்கள் போலிருக்கிறது, சங்கரலிங்கனார் போல, திலீபனைப் போல.
சிலர் தாங்கள்தான் இந்தியாவுக்கே விடுதலை வாங்கிக் கொடுத்ததாய் சொன்னார்கள். வங்காளத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததாய் சொன்னார்கள். திபெத் விடுதலைக்கு உதவுவதாய் சொன்னார்கள். ஆனால் ஈழவிடுதலையைப் பற்றி பேசினாலே, அது தேசத்துரோகம் என்கிறார்கள்.
போரை நிறுத்தச் சொல்லுங்கள் என்றால் வேறு முக்கிய வேலை இருக்கிறது என்கிறார்கள். உன் உயிரை காப்பாற்றுங்கள் என்றால் ஊமையாய் இருக்கிறார்கள். எங்களையும் பேசாதே என்கிறார்கள். மீறிபேசினால் சிறை என்கிறார்கள்.
காந்தியை கொன்ற கூட்டம் நாடாளலாமாம். இந்திராவைக் கொன்றவர்கள் நாடாளலாமாம். அவர் மகனைக் கொன்றதாக சந்தேகப்படுவதால் நம் இனத்தில் யாருக்கும் மன்னிப்பே கிடையாதாம்.
முதலாளித்தத்துவத்தின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றிய புரட்சிப்பூக்களின் வாரிசுகள் உன்னை மட்டும் கொலைகாரர்களோடு கூட்டுறவாய் இருக்கச்சொல்கிறார்கள். பேசித்தீர்க்கலாமாம். ஒன்று பட்ட இலங்கையின் இறையாண்மை கெட்டு விடுமாம்.
இன்னும் சிலர் மாவீரன் அலெக்சாண்டர் பற்றிப் பேசுவார்கள். ருசோபற்றிப் பேசுவார்கள். சுபாசு சந்திரபோசு பற்றிப் பேசுவார்கள்..பேசுவார்கள்..பேசுவார்கள், அவ்வளவுதான். கூட்டணிக் கட்சி கோபித்தால் சில நேரம் மெதுவாய் பேசுவார்கள்.
ஒரே ஒரு கூட்டத்தை மட்டும் பாராட்டியே தீரவேண்டும். என்றோ செத்துப் போன ராமனுக்கு கோயில் கட்ட கரசேவை ஆட்கள் அனுப்பினார்கள். கடலுக்குள் கிடக்கும் ராமன் பாலத்தைக் காப்பாற்ற சேதுக்கால்வாயே வேண்டாம் என்கிறார்கள். உனக்காகவும் ஒன்றும் செய்ய முடியாது, செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் நேர்மையானவர்கள். உண்மையை ஒத்துக்கொண்டார்கள்.
சிலரோ கண்ணீர் வடிக்கிறார்கள், கவிதை எழுதுகிறார்கள், கண்டனத்தீர்மானம் போடுகிறார்கள்,
கடிதம் வரைகிறார்கள், பதவி விலகல் என்கிறார்கள். ஆனால் மறுநாளே மேலிடத்து பதிலில் திருப்தி என்கிறார்கள். உனக்காக உயிரை விடவும் தயார் என்கிறார்கள், நல்ல உயரத்தில் இருந்து கொண்டு.
இவர்களிடம் உன்னைக் காப்பாற்றக் கதறிய என் ஒலங்கள் எல்லாம் காற்றில் கரைந்தே போயின.
உன்னிடம் மட்டும்தான் கருணாக்கள் இருக்கிறார்களா என்ன?
இங்கேயும் பாதிப்பேர் அப்படித்தான்.
சிலர் நம் எதிரி கையால் கேடயம் வாங்குகிறார்கள். சிலர் சிறந்த பத்திரிக்கையாளர் விருது வாங்குகிறார்கள். சிலர் புதிதாக தேசபக்தி ஒப்பாரி பாடுகிறார்கள். இறையாண்மைப் பாடல் இசைக்கிறார்கள். ஒருமைப்பாடு மந்திரம் ஓதுகிறார்கள். வழக்குப் போட்டே பேர் வாங்கியவர்கள் வாய்த்துடுக்காய் வாதிடுகிறார்கள்.
அதி மேதாவிகள் எல்லாம் உன் விஷயத்தில் அடி முட்டாள்களாய் நடந்து கொண்டார்கள்.
ஆம். உனக்கு என்றாலே எல்லாரும் ஒரே மாதிரியே நடந்து கொள்கிறார்கள்.
தாங்கமுடியாமல் ஏதோ பத்து பேர் கத்திக் கொண்டிருக்கிறோம், இவர்கள் செவிடர்கள் என்று தெரிந்தும். பிணத்தின் காதுகளில் சேராது என்று தெரிந்தும் இழவு வீட்டில் ஒப்பாரி பாடுவது போல்.
உன்னை உன் சொந்த மண்ணிலிருந்து விரட்டிக் கொல்லும் சிங்களவன் மட்டும் தான் உன் எதிரி என்று அப்பாவித்தனமாக நினைத்து விடாதே. உன் உண்மையான எதிரிகள் யார் தெரியுமா?
உன்னைக் கொல்ல ஆயுதம் கொடுத்தவர்கள்,
ஆள் அனுப்பியவர்கள்,
ஆலோசனை அருளியவர்கள்,
உயிரைக் காப்பாற்ற உதவாதவர்கள்,
கண்டு கொள்ளாமல் விட்டவர்கள்,
அதை நியாயப்படுத்தியவர்கள்..
எல்லோரும்தான்.
பதினெட்டு மைலுக்கு அப்பால் இருப்பதால் உனக்கு மட்டும்தான் இந்தக் கதி என்று நினைத்து விடாதே. இங்கே உள்ளுர்த் தமிழனுக்கும் அதே நிலைமைதான்.
உன்னைப்போலவே
எங்களுக்கும் இங்கு சோறு கிடையாது,
கர்நாடகத்திலிருந்து அரிசி வாங்குகிறோம்.
தண்ணீர் கிடையாது,
காவிரியும் முல்லைப் பெரியாரும்,பாலாறும் மறுக்கப்படுகின்றன.
தொழில் கிடையாது,
எல்லாவற்றையும் பன்னாட்டு நிறுவனங்கள் எடுத்துக்கொண்டன.
பாதுகாப்பு கிடையாது,
மீன் பிடிக்கப் போகும் ஏழை மீனவர்களில் பாதிப்பேர்தான் கரை திரும்புகிறார்கள்.
வளம் கிடையாது,
அவற்றையெல்லாம் அரசியல்வாதிகள் அள்ளிக்கொண்டார்கள்.
நிலமாவது சொந்தம் என்றால் அதுவும் கிடையாது,
எங்கள் எல்லைகளில் பாதியை போராடித்தான் வாங்கினோம்,
கச்சத்தீவை நம் எதிரிக்கே தாரை வார்த்தார்கள்.
இங்கு எந்த உரிமைகளும் கிடையாது,
ஆம். அடிமைகளுக்கு ஏது உரிமைகள்.
குறைந்த பட்சம் மரியாதை கூடக் கிடையாது,
அதையெல்லாம் டில்லிக்காரர்கள் தருவதாகச் சொன்னதேயில்லை.
உன்னைப்போலவே எங்களுக்கும் உயிர் ஒன்று மட்டும்தான் இருக்கிறது.
இங்கு தமிழுக்கு மட்டும் தான் புத்தாண்டு. தமிழனுக்கு இல்லை.
தமிழுக்கு மட்டும் தான் செம்மொழிப் பதவி தமிழனுக்கு இல்லை.
இவர்களையா நம்புகிறாய் என் ஈழ உறவே,
இவர்கள் பாலத்தீனத்துக்காய் பரிந்து பேசுவார்கள், இசுரேலுடன் உறவு வைத்துக்கொள்வார்கள். கியூபா சென்று பிடலைச் சந்திப்பார்கள், அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் போடுவார்கள். தலாய்லாமாவைத் தட்டிக் கொடுப்பார்கள், சீனாவுடன் வெளியுறவைப் புதுப்பிப்பார்கள். பயங்கரவாத பாகித்தான் என்பார்கள், லாகூருக்குப் பேருந்து விடுவார்கள்.
அகிம்சை நாடு என்பார்கள், அணு குண்டு வெடிப்பார்கள்.
நாங்கள் இவர்களிடம் எந்த நம்பிக்கையும் வைப்பதில்லை, நீயும் வைக்காதே.
மீறி நம்பினால் அதுதான் மிகப்பெரிய மூட நம்பிக்கை.
பெரியாரைப் போற்றாத, அம்பேத்காரை அவமானப்படுத்திய, சுபாசு சந்திர போசைக் கொண்டாடாத, கட்ட பொம்மனைக் காட்டிக் கொடுத்த நாடு இது.
இதை நம்பாதே.
ஆண்டவன் உட்பட யாரும் தேவையில்லை,
நீயே போராடு.
கண்டிப்பாய் நீ வெற்றியடைவாய்.
உனக்கு அதற்கான தகுதி இருக்கிறது, திறமை இருக்கிறது, உறுதி இருக்கிறது, வீரம் இருக்கிறது.
உனக்கான விடுதலையை நீயே தேடிக்கொள்.
உன் சொந்த மண்ணில்
நாளை நாங்களும் வந்து உன்னைச் சந்திக்கிறோம்,
முழு விடுதலை அடைந்தவர்களாய்,
எல்லா அடிமைத்தளைகளிலிருந்தும்.
எழுந்திரு
எழுந்திரு
சு. தளபதி,
மதுரை.
உங்கள் சட்டியில்தான் ஒன்றும் இல்லையே
உங்களுக்கு எதற்கு அகப்பை.
- கவிக்கோ. அப்துல் ரகுமான்.
‘கஞ்சி குடிப்பதற்கிலார்’ அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்’
என்பது கவிஞர் கூற்று.
கஞ்சி குடிப்பதற்கில்லையே என்ற அறிவு வந்து விட்டாலே அதன் காரணிகளைத் தேட ஆரம்பித்து விடுவான் எந்த மனிதனும். அந்த அறிவை அவனுக்குத் தராமல், வேறு எங்கிருந்தும் கிடைக்காமல் பார்த்துக் கொள்வதே அவர்களின் அடிமைத்தனத்தை உபயோகித்துக் கொள்பவர்களின் மேட்டிமை வாதிகளின் புத்திசாலித் தனம்.
தனது தாழ்வு பற்றி எந்த ஒரு மனிதனுக்கும், குழுவுக்கும், இனத்திற்கும் புரிதல் வந்து விட்டாலே அந்த இனம் முன்னேற்றத்திற்கான படிகளில் ஏறத் தொடங்கிவிட்டது என்பது உண்மை. அந்த வகையில் நம் தமிழினம் இழந்தவை எவை என்ற புரிதலை நோக்கிய பயணமே இச்சிறு கட்டுரை.
இழந்தவை கோடி பெறும் என்றாலும் மீட்டெடுக்கப்பட வேண்டியவை எவை என அடையாளம் காண இழந்தவற்றை ஒரு முறை நாம் திரும்பிப் பார்த்துத் தான் தீர வேண்டியிருக்கிறது. அந்த வகையில் முதலில் நாம் பார்ப்பது வரலாறு.
வரலாறு
நாம் படிக்கும் வரலாறு என்ன சொல்கிறது. தமிழர் வரலாறை மூன்று வரிகளில் ஏன் மூன்றே சொற்களில் அடக்கி விடுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள். சேரர், சோழர், பாண்டியர் அல்லது சங்ககாலம், இருண்டகாலம், நிகழ்காலம். எந்த வரலாற்று ஆசிரியர்களும் தமிழகத்தின் வரலாற்றை தனி ஒரு இனத்தின் வரலாறாக அணுகவில்லை அல்லது அணுக இயலவில்லை. காரணம் இந்திய தேசியம். இந்திய தேசிய வரலாற்றைப் பற்றிக் கூறும் பொழுது அல்லது இந்தியாவின் வரலாற்றைக் கூறும் பொழுது அதன் சிறு பகுதியாகவே தமிழக வரலாற்றைச் சுருக்கி விடுகிறார்கள்.
இதே வரலாற்று ஆசிரியர்கள் மொகஞ்சதாரோ, ஹரப்பாவை கண்டுபிடிக்கும் முன்னால், இந்தியாவின் வடக்கே இருந்தவர்கள் ஆரியர்கள், தெற்கே இருந்தவர்கள் திராவிடர்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்கள் திராவிட நாகரிகங்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின் அவர்களே, வடக்கே ஆரியர்கள் படையெடுப்பிற்குப் பின் திராவிடர்கள் தெற்கே தள்ளப்பட்டனர் என்று கூறுகின்றனர்.
மிகப் பெரிய வருத்தமளிக்கும் விடயம் என்னவென்றால் ஒரு இனத்தின் வரலாறை அறிவதற்கு சரியான ஆவணங்கள் கிடைக்கவில்லை. கிடைக்கின்ற ஆவணங்களும் சமயம், கடவுள், கோவில் சார்ந்தவையாகவே இருக்கின்றன என்பது தான். வரும் சந்ததிக்கு எதை விட்டுப் போக வேண்டும் என்பதிலேயே தமிழனுக்கு சரியான அறிவுறுத்தல்கள் இல்லை, அல்லது இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள் மேட்டிமை வாதிகள்.
நாம் தனி ஒரு இனம். இன்று இந்தியா என்று அழைக்கப்படும் இந்த பரந்த நிலமெங்கும் வாழ்ந்து வந்த குடி நம்முடையது. கைபர், போலன் கணவாய் வழியாக உள்ளே வந்த ஆரியர்கள் முதலில் கைப்பற்றியது நம் நிலமே. இது இன்றைய தமிழனுக்கு ஒத்துக் கொள்வதற்கே அய்யமான, கடினமான ஒரு உண்மை.
நமது உண்மையான வரலாற்றின் ஆதாரங்கள் இன்னும் மண்ணுக்குள் இருக்கின்றன. ஆனால் மக்கவில்லை. நமது வரலாறை நாம் முதலில் மீட்டெடுக்க வேண்டும் (காவிரிப் பூம்பட்டினத்தில் இதற்கான முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன).
மொகஞ்சதாரோ, ஹரப்பா காலத்திலிருந்து, சங்க காலம் பிற்கால மன்னர்கள் காலம் வரை நம்முடைய உண்மையான வரலாறு வெளியில் வந்து விட்டால் இன்று பார்ப்பனியம் சொல்வது போல் “ஹமாரா இந்துஸ்தான்” என்ற கோஷங்கள் எவ்வளவு போலியானவை யாருடைய நாட்டில் யார் சொந்தம் கொண்டாடுவது என்பவை பற்றிய தெளிவான புரிதல்கள் நமக்குக் கிடைத்து விடும்.
நாடு
வரலாறைப் பற்றிப் பேசும் பொழுதே தன்னிச்சையாக நாம் நாட்டைப் பற்றியும் பேசத் தலைப்பட்டு விடுகிறோம். ‘வடவேங்கடம் முதல் தென்குமரி’ வரை என்று பின்னர் அறியப்பட்ட தமிழ்நாட்டின் எல்லை (இப்போது அது கூட இல்லை) இந்திய அளவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கித் தள்ளப்பட்டுத்தான் இன்றைய நிலையை அடைந்திருக்கிறது. (ஆதியில் பார்ப்பனர்கள் குடியிருந்த இடம் தான் சேரி எனப்பட்டது என அறிக).
ஆரியர் படையெடுப்புகள் இதற்கு முக்கிய காரணியாகின்றன. ஆரியர்கள் தனது போர் மற்றும் கலாச்சாரப் படையெடுப்பு முலமும் நம் இனத்தின் மீதான வெற்றியை நிலை நிறுத்திக் கொண்டு நமது நிலம் இவ்வளவுதான் என்ற முடிவுக்கு நம்மைக் கொண்டு வந்துள்ளனர். நாம் இழந்த நிலம் இவ்வளவு என்பதை உணராமல் இருக்க அவர்கள் நமக்குக் கொடுத்த அபின் தான் மதம்.
கடவுள்கள்
ஒரு இனத்தை வெல்வதற்கு போர் மட்டும் பயன்படாது, கலாச்சார அழிப்பும், அதற்கு மேல் அவர்களைப் பயமுறுத்தும் காரணியும் ஒன்று வேண்டும் என்பதற்காகவே ஆரியர்கள் படைத்தது தான் மதம்.
ஆதியில் தமிழன் மட்டுமல்ல எந்த ஒரு மனிதனும் இயல்பால் எதைப் பார்த்து பயந்தானோ அல்லது பிரமித்தானோ அதை தெய்வமாக வணங்கியிருக்க வேண்டும். இது தான் பாரம்பரியம்.
தமிழ் நிலத்திலே குறிஞ்சியிலே முருகனையும் (ஒரு சாயலில் ஒருவன் நிற்பது போல் தோற்றம் தரும் மலை முகடு), முல்லையிலே காட்டில் உள்ள கரிய இருட்டையும், மருதத்திலே சிவனையும், நெய்தலிலே அலையினையும் (அலை போல படுத்துறங்கும் மால் எனும் தெய்வத்தையும்), பாலையிலே காளி, பெண் தெய்வ வழிபாடு மற்றும் நடுகல் நட்டு முன்னோர்கள் வழிபாடு என்று இருந்த வழிபாட்டு முறை, ஆரியர்கள் வந்த பின் ஒட்டகம் மூக்கை நுழைப்பது போல் உள்ளே நுழைவதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட முதன்மையான ஆயுதம் கடவுள்கள்.
நீங்கள் வணங்குபவர்களே எங்களின் கடவுள்களும். உங்கள் சிவன் தான் எங்கள் சிவலிங்கம். அவன் இதோ கைலாயத்தில் தான் இருககின்றான் (நடுவில் நம் ஆட்கள் என்ன தான் தென்னாடுடைய சிவனே போற்றி என்றாலும் வாதம் எடுபடவில்லை). அவன் மனைவிதான் பார்வதி, அவளே காளி, மாலும் விட்டுணுவும் ஒன்றே. அவனே கார்மேக வண்ணன், பள்ளி கொண்ட பெருமாள். சிவனின் பிள்ளைதான் முருகன். அவனே சுப்பிரமணியன் கார்த்திகேயன், சரவணன் (உண்மையில் ஆன்மீக வாதிகளே தெய்வானையை மணந்த சுப்பிரமணியன் வேறு, வள்ளியை மணந்த முருகன் வேறு என்பதை ஒத்துக் கொள்கிறார்கள்). விநாயகர் வழிபாடு எப்படி வந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாமெல்லாம் ஒரே தெய்வங்களைக் கும்பிடுகிறவர்கள். நாமெல்லாம் ஒன்று என்று சொல்லி ஒண்ட வந்த இடத்திலே ஊடுருவ ஆரம்பிக்கின்றனர்.
“நமது கடவுள்கள்” என்று சொன்னவர்கள் சிறிது காலம் கழித்து நாங்களே கடவுள்கள் (பூதேவர்கள்) என்று சொன்னார்கள். அதையும் நம்மவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அது வரையிலும் மதம் என்றால் என்னவென்றே தெரியாதவன் சைவம் என்றோ வைணவம் என்றோ வாழ்க்கை முறைக்கும் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு கட்டுக்குள் தமிழன் அடிபணிய ஆரம்பித்து விடுகிறான். அதன் முழுக்காரணம் அவனது குழுத் தலைவர்கள் ஆரியர்களின் தந்திரங்களில் ஏமாந்ததும் ஆரியப் பெண்களிடம் சபலப்பட்டதும் தான் (இராவணன் உள்ளிட்ட சிலரும் இதற்கு விலக்கல்ல).
பிற்காலத்தில் இவற்றிலிருந்து மாறுபட்ட தத்துவங்களைத் தந்த பவுத்தமும், சமணமும் ஞானசம்பந்தர் வகையறாக்களால் கழுவேற்றி கொலை செய்யப்படுகின்றன.
தலைவர்களை ஏமாற்றி தனது சேரிகளை தக்க வைத்துக் கொண்ட ஆரியர்கள் அடுத்த தலைமுறைக்கு இதை எடுத்துப் போக நல்ல உபாயம் ஒன்று செய்கின்றனர் அதுவே சாதியம்.
சமத்துவம்
சாதியம் எந்த சமுகத்தில் உள்ளே நுழைகிறதோ அங்கே சமத்துவம் அடித்து நொறுக்கப்பட்டு விடுகிறது. நால்வகை வருணங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மனு கோலோச்ச ஆரம்பிக்கின்றான். சமத்துவ சமுதாயத்தில் கட்டுகள் விரிசலடைகின்றன. இந்த விரிசலில் பார்ப்பனியம் தங்கு தடையின்றி வளர ஆரம்பிக்கின்றது. ஏழை ஏழையாகவே இருக்கும்படி வற்புறுத்தப்படுகிறான். அடிமை அடிமையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படுகிறான். சாதிக் கட்டுப்பாடுகள் இதை செவ்வனே செய்கின்றன. (சமுதாயம் என்பதன் பொருளே இன்று சாதி என்று மாறிவிட்டதே) தலைவிதி என்ற கோட்பாடு அறிமுகப்படுத்தப்படுகின்றது. மூட நம்பிக்கைகள் வளர்க்கப்படுகின்றன. அதற்குள் மன்னர்களும் விதி விலக்கல்ல.
கல்வி இழந்த தமிழ்ச்சமுதாயம் தமக்குள், சமத்துவத்தை இழந்து சுக்கலாக சிதறுகிறது. பிரித்தாளும் சுழ்ச்சி வெல்கிறது. இந்த நேரத்தில் பார்ப்பனச் சேரி அக்ரஹாரமாகிறது. ஆதிதமிழன் சேரியில் குடியேறுகிறான்.
இங்கு நாம் பெரும்பான்மையினர். நம்மைச் சாதிய வேறுபாடுகள் சிதறடித்ததால் நம்மில் சிலர், (முக்கியமாக உழைப்போர்) ஒடுக்கப்பட்டோர் ஆயினர். அவர்கள் வேறு மதங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
பார்ப்பனியம் இன்று அவர்களை அடையாளப்படுத்தும் பெயர் சிறுபான்மையினர். நம்மை மதத்தின் பெயரால் கூட்டுச் சேர்க்கும் பார்ப்பனியம் தம்மை பெரும்பான்மையினர் என்றும் மண்ணின் மைந்தர்களை சிறுபான்மையினர் என்றும் அடையாளப் படுத்துகிறது. இதற்கு அரசுகளும் உடந்தையாகி நிற்கின்றனர்.
ஆண்களின் கதியே இவ்வாறிருக்க பெண்களின் நிலையோ படு மோசம். அவர்கள் மனித சாதியாகவே மதிக்கப்படாமல் பொருள்களின் வரிசையில் கொண்டு வரப்பட்டனர். பின்னர் முகமதியர்கள் தம் பெண்களைப் பாதுகாப்பதாக எண்ணிக் கொண்டு சொந்த ஆதிக்கத்திற்கு அவர்களை உட்படுத்தி விட்டனர்.
முகமதியர்களின் ஆட்சியில் அவர்களுடைய வாழ்க்கை முறை ஏறக்குறைய எல்லாச் சமுதாய பெண்களையும் பாதித்தது எனலாம். அந்த வகையில் தாம் செய்த எல்லா தவறுகளுக்கும் ஒரே ஒரு நன்மையாக ஆங்கிலேயர்கள் செய்த ஒன்று சாதிய வீச்சை சற்றே குறைத்தது.
பண்டிகைகள்
தமிழனின் வாழ்வு என்று மதத்தோடும், சாதியோடும் சம்பந்தப் படுத்தப்பட்டதோ அன்றே அவன் கொண்டாடும் பண்டிகைகளும் அதன் தொடர்பான மற்ற நடவடிக்கைளும் மதச்சாயம் பூசிக் கொண்டன.
விவசாய திருநாளான பொங்கல் (மாட்டுப்பொங்கல்) சங்கராந்தி ஆயிற்று. உழைப்பாளர் தினம் ஆயுத பூசை, சரஸ்வதி பூசையாயிற்று, விதைத் திருநாள் ஆடிப் பெருநாளாயிற்று, தமிழர் திருநாட்களை விட புராணப் புளுகுகளை அதிகப்படுத்தி பரப்பிய பார்ப்பனியம், புராணத் திருநாட்களான தீபாவளியை முதன்மைப்படுத்தியது.
தமிழன் பட்டாசின் ஒளியிலும், சத்தத்திலும் தன் தனித்தன்மையை மறந்து போனான். பையப் பைய தமிழனின் இல்லத்தை முழுமையும் பார்ப்பனிய பண்டிகைகளான கார்த்திகை, நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி போன்றவை கைப்பற்றி விட்டன.
இதைவிட மிக முக்கியம் சடங்குகள் என்ற பெயரில் திதி, பூப்பு நீராடுதல், புண்ணிய தானம் என்றவற்றிலும், மிக முதன்மையாக தமிழர் திருமணத்திலும் பார்ப்பனியத்தின் வீச்சு பன்மடங்காகியது.
கலை
கடவுள்கள் நிறம் மாற்றப்பட்டனர். பண்டிகைகள் நிறம் மாற்றப்பட்டன. சடங்குகள் உட்புகுந்தன, கோவில்கள் பார்ப்பனிய மயமாகின. அதைத் தொடர்ந்து தமிழ்க் கலைகளும் பார்ப்பன சாயம் பூசப்பட்டன. காலகாலமாக தமிழர்கள் ஆடிவந்த சதிர் பரதமாக மாற்றப்பட்டது. தமிழிசை தடுக்கப்பட்டது, சகோதர மொழியான தெலுங்கில் கீர்த்தனைகள் (பாடல்கள்) இயற்றப்பட்டன. இசை சங்கீதமானது, அதிலும் கர்நாடக சங்கீதமானது. அவை தெரிந்தவர்களே உண்மையான கலைஞர்கள் என்று போற்றப்பட்டனர்.
தமிழ் மன்னர்கள் இப்படிப்பட்டவர்களுக்குத் தான் பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தனர்.
நிலவுடமை ஆண்டைகளுக்கும், கோயில்களுக்கும் சொந்தமானது. இதிலும் சிந்தாமல், சிதறாமல் முழுமையாக வெற்றி கொள்ள நினைத்த பார்ப்பனியம் சதிரில் சாதியத்தைப் புகுத்தியது. தேவரடியாள்கள் கோவிலில் ஆடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களை ஆண்டை வர்க்கம் எல்லாவிதத்திலும் உபயோகப்படுத்த ஆரம்பித்தது.
மானமுள்ள தமிழர்கள் கலையை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர். அதுதானே அவர்களுக்கு வேண்டும். அதுதானே அவர்களின் வெற்றி. தமிழர்களின் கலைகள் ஒதுக்கப்பட்டன. ஆதித்தமிழர்கள் நாட்டுபுறத்தார்கள் ஆகியது போல கலைகளும் நாட்டுப்புறக் கலைகளாக ஆகிப்போனது. இதே போன்று சிதறடிக்கப்பட்ட மதிப்புக் குறைக்கப்பட்ட இன்னொரு பெரிய விடயம் மொழியாகும்.
கல்வி
மொகஞ்சதாரோ, ஹரப்பா காலத்தில் முழுக்க, முழுக்க கல்வி கற்றிருந்த எழுதப்படிக்க (100%) தெரிந்திருந்த நமது குடி மேட்டிமை வாதிகளாலும் (பூஷ்வா) ஆரியர்களாலும் அழித்தெழிக்கப்படுகிறது. கல்வி மறுக்கப்பட்டால் தான் அவனை அடிமையாக்க முடியும். அடிமைகள் நல்ல அடிமைகளாக இருந்தால் தான் தலைவன் கோலோச்ச முடியும் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டார்கள். அரசன் யாராக இருந்தாலும் அவனுக்கு யோசனை சொல்ல (எப்போதும் எதிரிக்கு காட்டிக் கொடுக்க), ஒரு பிராமணன் தான் மந்திரியாகவோ, ராஜகுருவாகவோ செயல்படத் தொடங்கினான்.
கல்வி மறுக்கப்பட்டால் அறிவு மறுக்கப்படுகிறது. அறியாமை கோலாச்ச ஆரம்பித்து விடுகிறது. சோமபானங்களும் சுரா பானங்களும் ஆரணங்குகளின் அணிவகுப்பும் மன்னர்களுக்குப் போதுமானதாகி விடுகிறது. மக்களுக்கோ துன்பம், வறுமை மட்டுமே. பார்ப்பனியம் லேசாக முனை மழுங்கிய பொழுது, முகலாயர்களும், முகலாயர்கள் தளர்ச்சியடைந்த பொழுது ஆங்கிலேயர்களும், இந்த அடிமைத்தனம் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.
இன்றுவரை குமாஸ்தாக்களை உருவாக்கி வரும் மெக்காலே கல்வி முறையிலிருந்து நம் சமுகம் விடுதலையடைய முடியவில்லை என்பதும், கல்வி வியாபாரிகள் அதை வளர்த்து விடுகிறார்கள் என்பதுமே திண்ணம். யாரும் நம்மை நோக்கிக் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்கு அவர்களுக்கு இன்னுமொரு ஆயுதம் தேவைப்படுகிறது, அது தான் மொழி.
மொழி
ஒரு இனத்தை கருவறுக்க வேண்டுமெனில் முதலில் அவர்களது மொழியைக் கொன்று விடுங்கள். பின் அந்த இனம் தானே அழிந்து விடும் என்பது வரலாறு.
பண்டைய நாகரிகங்களில் உயர்தனிச் செம்மொழிகள் என்ற பட்டியலில் வரும் மொழிகளில் இன்னும் உயிரோடிருக்கும் (மக்களால் பேசப்படும்) ஒரே மொழி தமிழ் மட்டுமே ஆகும்.
தமிழ் முதலில் தமிழி என்று வழங்கப்பட்டது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். தமிழி மொழியில் ஏகப்பட்ட வரைவுகளும், கல் வெட்டுக்களும், ஆவணங்களும் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
ஆனால் பலகாலம் இந்த பார்ப்பனியம், சமஸ்கிருதமே பழமையானது அதிலிருந்து பிரிந்த பல மொழிகளுள் ஒன்றே தமிழ் என்று சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் உண்மை என்னவென்றால் தமிழிதான் இந்தியாவின் மிகப் பழமையான மொழி. பின் ஆரியர் படையெடுப்புக் காலத்தில் பாகத மொழி பயன்பாட்டிற்கு வந்தது. இதுவே உண்மையான வடமொழியாகும். (பலர் நினைப்பது போல் வடமொழி என்பது சமஸ்கிருதத்தை குறிப்பதல்ல).
அப்போதைய மன்னர்களின் நாணயங்களிலும், செப்பேடுகளிலும் தமிழியும் பாகதமும் ஆகிய இரு மொழிகளும் காணப்பட்டன.
சமஸ்கிருதம் மந்திரங்கள் சொல்லவும், வழிபாட்டிற்குரிய வேதங்கள், புராணங்கள் இயற்றவும், புரோகிதர்களால் லிபி இல்லாத செவி மொழியாகவே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. பின்னர் அது பாகத மொழிகளின் வரிவடிவை (லிபி) கடன் வாங்கி எழுதப்பட்டிருக்கிறது.
பின் தமிழியிலிருந்து தமிழ், தெலுங்கு முதலான தென் மொழிகள் பாகத மற்றும் சமஸ்கிருத மொழிக் கலப்பின் காரணமாக பிரிந்திருக்கின்றன. மொழி வீழ்ச்சியில் சமஸ்கிருதம் பெரும்பங்கு ஆற்றியுள்ளது. சமஸ்கிருதம் தெரிந்த தமிழர்கள் மட்டுமே கல்வியாளர்கள் என்று பார்ப்பனியம் சொல்லிக் கொண்டது. இது பின்னர் மணிப்பிரவாள நடைவரை வந்து, பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் காலகட்டங்களில் தமிழ் மீட்டெடுக்கப்பட்டது.
தமிழ் மீட்டெடுக்கப்பட்டதை பொறுக்காத பார்ப்பனியம் அடுத்து எடுத்த ஆயுதம் தான் ஆங்கிலம்.
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்திய காலத்தில் எப்பொழுதுமே ஆளும்வர்க்கத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்ட பார்ப்பனியம் அவர்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டது.
தமிழர்கள் மீண்டும் அடிமையானர்கள். காட்டிக் கொடுத்தும், காவடி எடுத்தும் வயிறு வளர்த்த கூட்டம் ஆங்கிலம் படித்தது, ஆங்கிலம் பேசியது, ஆங்கிலம் தெரிந்தவர்களே அறிவாளிகள் என்ற போதையை ஏற்படுத்தியது. அது இன்று வரை கல்வி விற்பனையாளர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது நாம் உணர்ந்த உண்மையே.
தமிழால் முடியாது என்பதை தமிழர்களே சொல்லுமளவிற்கு பார்ப்பனியம் அவர்களை பழக்கப்படுத்தி விட்டது.
தமிழர்கள் அறிவாளிகளாய் இருக்கிறார்கள். ஆனால் அந்த அறிவை தமிழிலே பிறருக்குத் தருவதில்லை. இது இந்த கணிணி யுகத்தில் சாதாரண நடைமுறை.
இந்தியா சுதந்திரமடைந்த பின் பனியாக்களும் பார்ப்பனியமும் கைகுலுக்கிக் கொண்டனர். இந்தியை ஆயுதமாக எடுத்தனர். ஆனால் அது வெற்றி பெறவில்லை. தந்தை பெரியார் தமிழ்ச் சமுதாயத்தைக் காத்து நின்றார். உள்நாட்டு ஆயுதம் காயப்படுத்த முடியாமல் காப்பாற்றிய கேடயமான ஆங்கிலம் முற்றிலும் நம்மை விழுங்க ஆரம்பித்தது.
மம்மி என்றும் டாடி என்றும் கூச்சமின்றி தமிழ்க் குழந்தைகள் அழைப்பதில் புளங்காகிதப்பட்டு போயினர் தமிழர்கள்.
பேசும் மொழியே இந்த நிலைமையில் என்றால், நம் இலக்கியங்களின் நிலைமை…
இலக்கியங்கள்
மொழியைத் தின்ற ஆரியம், நம் இலக்கியங்களை வளரவிடாமல் வளமைப்படுத்த விடாமல் பார்த்துக் கொண்டது. எக்காலத்திலும் அழியாத வாழ்வியல் தத்துவங்களைத் தந்த திருக்குறளை விட சமயம் சார்ந்தவையே இலக்கியங்கள் என்றும், ஆரியப் பரப்புரைகளே இதிகாசங்கள் என்றும் கொண்டாடப்பட்டன.
கம்பன் போன்ற சிறந்த புலவர்கள் ஆரிய வாட்களுக்கு தமிழில் உறை(ர) அணிவித்து மகிழ்ந்தார்கள்.
இளங்கோ கூட முற்பிறவி பயன், தலைவிதி என்றெல்லாம் பாட ஆரம்பித்தார்.
பெரியார் சொன்னது போல் மதமில்லாத, கடவுள்களைப் பாடாத இலக்கியங்கள் தமிழில் அரிதாயின.
இந்த விடயத்தில் இன்னும் பல காத துரப் போராட்டத்தை நாம் எதிநோக்க வேண்டியிருக்கிறது என்பது தான் நம்முன் நிற்கும் கசப்பான உண்மை.
ஆட்சி
தமிழர்கள் தம் சொந்த ஆட்சியின் கீழ் இருந்து நெடு நாட்கள் ஆகின்றன. நாட்கள் அல்ல நீண்ட வருடங்கள் … நீண்ட யுகங்கள்.. திராவிட மன்னர்கள் ஆரியர் படையெடுப்பில் அழிந்து போனதும் ஆட்சி பீடத்தில் இன்று வரை தமிழ் எதிரிகளே மிக முக்கியமாக பார்ப்பனியமே அமர்ந்திருக்கிறது.
(ரிக், சாம, அதர்வன, யசுர் வேதங்கள் ஆரிய படையெடுப்பைப் பற்றியவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) அதன் பின் ஆரிய மன்னர்கள் ஆட்சி செய்த பொழுது மனு தர்மமே ஆட்சி முறையானது. அதற்கு பின் யார் ஆட்சி செய்தாலும் அந்த தர்மத்தை மீறாமல் பார்த்துக் கொள்வதில் பார்ப்பனியம் இதுவரை வெற்றி பெற்றே வந்திருக்கிறது.
மன்னனை சண்டைக்கும், நாடு பிடிக்கவும், கோவில்கள் கட்டுவதற்குமே திசை விட்டுவிட்டு, பார்ப்பனியம் தன் சொந்த தர்மத்தை நிலை நிறுத்திக் கொண்டது. ஆண்டவர்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு அவர்களின் தர்மம் அதற்கு அனுமதிக்கவில்லை.
பின் முகலாயர்களும், டச்சுக்காரர்களும், போர்த்துக்கீசியர்களும், ஆங்கிலேயர்களும், இதை நன்கு புரிந்து கொண்டனர்.
மக்கள் எழுச்சியை, மக்கள் தம்மை புரிதலை கட்டுப்படுத்த அவர்களுக்கு, போர் மற்றும் கோவில்கள் துணை செய்தன. இன்றுவரை ஆளும்வர்க்கம் வேண்டுமானால் மாறலாம். ஆனால் ஆட்சி முறை அதே தான்.
எழுச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன, புரட்சிகள் முளையிலேயே நசுக்கப்படுகின்றன. இங்கு கேள்வி கேட்பதே தவறு எனச் சொல்லித் தரப்படுகின்றது. அது தான் இறையாண்மை என்று கட்டுப்படுத்தப்படுகின்றது.
அடையாளம்
தமிழரின் முதன்மையான அடையாளமான தமிழ்ப்பெயர்கள் வேறு மொழிப் பெயர்களில் அசிங்கப்படுத்தப்பட்டன. தமிழில் பெயர் வைத்தால் அது கேவலம் என்றும், பிற மொழி எழுத்துக்களை ஷ், ஸ் என்பவை மரியாதைக்குரிய பெயர்களாகவும் ஆகிப் போயின.
இதில் இஸ்லாமும், கிறித்தவமும் தங்கள் வீச்சுக்களை ஆழமாகப் பதிவு செய்தன. தமிழ் நாட்டில் தமிழில் பெயர் வைப்பதோ, தமிழில் பேசுவதோ அவமரியாதையாக சொல்லிக் கொடுக்கப்பட்டன.
மீனே மீனைத் தின்பது போல் நம் எல்லையை இன்று நம் சகோதரர்களுடன் சண்டையிட்டு தீர்க்க வேண்டிய நிலைமையிலிருக்கிறோம்.
நம் நீராதாரத்திற்கான உரிமையை போராடிப் பெற வேண்டிய நிலையிலிருக்கிறோம்.
நம் சகோதரர்களை அழிக்க நம் ஆட்சியாளர்கள் நம் வரிப்பணத்தில் ஆயுதங்கள் அனுப்புகிறார்கள்.
இன்று மிக முக்கியமாக தமிழ்நாட்டில் மிக மோசமான கெட்ட வார்த்தையாக சித்தரிக்கப்படும் வார்த்தைகள் ‘தமிழ் வாழ்க’ என்பது தான்.
தமிழ் வாழ்க என்றாலே தமிழ்த் தீவிரவாதியாக இருப்பான் என்று பொடா, தடா என்று ஏதாவது பாய்கிறது.
படித்தவர்கள் பயமுகிறார்கள், அறிவாளிகள் மௌனமாயிருக்கிறார்கள். நேற்றுவரை சோற்றுக்குப் போராடி வந்தவர்கள் மட்டுமே நம் உரிமைகளைப் பற்றி இன்று கவலைப்பட்டு வருகிறார்கள்.
வேறு எந்த ஒரு இனமும் இவ்வளவு தாக்குதல்களையும், இவ்வளவு வேதனைகளையும் தாங்கி உயிர் பிழைத்திருந்ததாக வரலாறு சொல்லவில்லை. வேறு எந்த இனத்திற்கும் இவ்வளவு பகை இருந்ததில்லை. தமிழினத்திற்கு மட்டும் ஏன் இந்த நிலைமை. சுமேரிய நாகரிகங்கள் போன்று பல நாகரிகங்கள் அழிந்தே போய்விட்டன. ஆனால் இன்னும் அழியாமல் இருப்பது (அரை உயிரோடாவது) தமிழினம் ஒன்றே. அதன் காரணம் அதை உயிர்ப்பித்து காப்பாற்றி வந்த பாமர மக்கள்தான். படித்தவர்கள் கல்வியாளர்கள், அறிவாளிகள் எல்லாம் ஒதுங்கிக் கொண்டுவிட தமிழரின் அடையாத்தை இன்னும் பிடிவாதமாய் பிடித்துத் தொடங்கி நடைமுறையில் இருந்து வருவது முன்னேறியவர்களால் ‘பாமரர்’ என்று அடையாளம் காட்டப்பட்ட ஒரு கூட்டமேயாகும்.
இவர்களை இன்னும் வளர்த்தெடுக்கப் பாடுபட்ட தந்தை பெரியாரின் பணி இங்கு முக்கியத்துவமாய் சொல்லப்பட வேண்டும். பெரியார் என்ன செய்தார், பெரிதாய் என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில் “நீ இப்படிப் பேச சொல்லிக் கொடுத்ததே, நீ இப்படி பேச முடிவதே அவரால்தான்” என்பது தான்.
பார்ப்பனியம் திருந்திவிட்டது என்று நிலையை புரியாமல் சில தோழர்கள் பேசும் பொழுது கிழ் வரும் கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் :
1 எந்த பார்ப்பனனாவது தமிழில் பெயர் வைத்துள்ளானா?
2 பார்ப்பனியம் இன்று வரை என்றாவது உழைப்பை, உழைப்பவர்களை அங்கிகரித்திருக்கிறதா?
3. என்றாவது தாம் வாங்கிப் பிழைக்கும் சமுதாயத்திற்கு விசுவாசமாய் இருந்திருக்கிறார்களா?
பதில் – இல்லை என்பதுதான்.
நிலங்களை இழந்தோம் - போராடவில்லை
ஆட்சியை இழந்தோம் - போராடவில்லை
ஆலயங்களை இழந்தோம் - போராடவில்லை
அடையாளங்களை இழந்தோம் – போராடவில்லை
இலக்கியத்தை இழந்தோம் - போராடவில்லை
மொழியை இழந்தோம் - போராடவில்லை
இனி செய்ய வேண்டியவை
பெரியாரின் பாதையில் இனி நாம் என்ன செய்ய வேண்டும்.
பெரியார் சொன்னது போல் தமிழ்ப் பகைவர்கள் வேறு எங்கும் இல்லை. நம்மிடையே ஊடுருவிக் கலந்து உள்ளனர்.
நம் தலையாய கடமை அவர்களை அடையாளம் கண்டு களையெடுப்பது மற்றும் அவர்கள் நம்முன் கலக்க விடாமல் கதவடைப்பது தான்.
தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுங்கள் அது பெருமை.
தமிழர்களே தமிழில் பேசுங்கள், அது தான் பெருமை,
தமிழில் புதிய கண்டுபிடிப்புகள் செய்யுங்கள்,
தமிழ்ப்பகைவர்களை தைரியமாக அடையாளம் காட்டுங்கள்.
பார்ப்பனிய பனியா சக்திகளுக்கு ஒரு போதும் அடிபணியாதிர்கள்.
தமிழர் விரோதிகளுக்கு எதிராக தமிழரின் ஆற்றல்களை ஒன்று திரட்டுங்கள்.
நாமே உண்மையான பெரும்பான்மையினர் என்பதை உலகிற்கு புரிய வைப்போம்.
மே.பா.
தமிழக வரலாறு – மக்களும், பண்பாடும், கே.கே.பிள்ளை.
தமிழக வரலாறு – புதிய பார்வை, வே.தி. செல்லம்.
தமிழக கலை வரலாறு – தமிழ் மொழி வரலாறு, மணிவாசகர் பதிப்பகம்.
சிந்தனையாளன் பொங்கல் மலர் 2009ல் வெளியிடப்பட்டது..
-
அண்மை
-
இணைப்புகள்
-
தொகுப்புகள்
- December 2009 (1)
- ஜூலை 2009 (1)
- April 2009 (1)
- மார்ச் 2009 (1)
- பெப்ரவரி 2009 (2)
- ஜனவரி 2009 (2)
-
வகைகள்
-
RSS
வரவுகள் RSS
மறுமொழிகள் RSS
